புதன், 10 ஜூன், 2020

உறங்கச் சென்றது முல்லை!...2006....

முல்லையின் மலரும் நினைவுகள் ..

இன்று அலுவலகத்தில் நிகழ்ந்த பிரச்சனை இன்னும் மனதினில் ஓட்டமிட்டுக்கொண்டே இருந்தது... அதையே நினைத்து வண்டியை செலுத்தியதாலோ என்னவோ வழக்கமாய் நின்று பூ வாங்கும் கடையை தாண்டி வந்துவிட்டேன்... அடுத்த சமிக்கையில் வண்டியை நிறுத்திய பொது ஞாபகம் வரவே வண்டியை திருப்பிச்சென்றேன்... எனக்காகவே காத்திருந்தவளாய் பூக்கார பாட்டியும், புன்முறுவலுடன் ஏற்கனவே எனக்காக கட்டி வைத்திருந்த பிச்சி பூ (முல்லை) பொட்டலத்தை நீட்டினாள்!... மீண்டும் வண்டியை செலுத்தும்போதும் அதே சலனம்...
மணி சுமார் ஒரு 7.30 இருக்கும், வீட்டிற்கு வந்ததும் கவனித்தேன் அவள் இன்னும் அலுவகத்திலிருந்து திரும்ப வில்லையென... அலைபேசியில் அவளனுப்பிய குறுஞ்செயதியில், அலுவலக நண்பர்களுடன் வெளியே செல்வதாய் எழுதி இருந்தாள்... வாங்கிவந்த பூவை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு, மனதில் உள்ள நெருடலுடன் சமைத்து சாப்பிட்டேன்.. பின் வரவேற்பறையில் உள்ள அகல் தவிசில் அமர்ந்து புத்தகம் வாசிக்க ஆரமித்தேன்... புத்தகத்தில் மனம் ஈடுபடவில்லை...
மணி சுமார் 10.45 இருக்கும், பரபரப்பாய் வாசலில் இருந்து வீட்டுக்குள் வந்தவள்.. "ஏய், நீ சாப்டியா?" என்றாள்
"நான் சாப்டாச்சு.. நீ?.. உனக்கும் சேத்துதான் செஞ்சி வெச்சுருக்கேன்" என்றேன்
அருகில் வந்து அமர்த்தவள்... "நாங்க எல்லாருமே வெளிலயே சாப்பிட்டோம் டா".. என்று தோளில் சாய்ந்து கொண்டாள் ...
நான் என் அலுவல பிரச்சனையை சொல்ல எத்தனித்த வேளையில்... "ஒரே தலைவலி டா... இன்னிக்கு நாங்க பார்த்த படம் செம்ம மொக்கை".. என்று சொல்லியவாறு மடியினில் தலை சாய்த்து "கொஞ்சம் தலைய கோதி விடுடா" என்று மேலும் கதை கூறினாள்... அவள் கூறிய மற்றும் கூறாத கதைகள் என்னை என் அலுவல பிரச்சனைகளில் இருந்து விலக்கி ஒரு தூர தேசம் கொண்டு சென்றதென்றே சொல்ல வேண்டும்....
இவளை மடி சாய்த்து நிதம் தலை கோதவேனும் "தினம் உனக்கு தலைவலி வரணும்"... என்றேன்... அதை கேட்கும் முன்னே உறங்கியே விட்டாள்...
நாளையேனும் உன் கூந்தலேறுவோம் என்ற மகிழ்ச்சியுடன் உறங்கச்சென்றது முல்லை!.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக