கேள்வி :..சொந்தங்கள் யாரும் தேவையில்லை என்று கூறிவிட்டு தனியாக நமது குடும்பம் மட்டும் போதும் என்று வாழ்வது நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமா?
பதில் :...
வத்திப்பெட்டி போல உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில்,
கணவனும்,நிறைமாத கர்ப்பிணி மனைவியும்
பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் சூட்ட ,
இருவரும் இணைந்து இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்த...
பத்தாம் மாதத்தில் பிறந்தது பிஞ்சுக்குழந்தை ...
பன்னிரண்டு திங்கள் கழித்து மகப்பேறு விடுப்பு முடிந்த தாய் ,
தன் பணிக்கு திரும்பவேண்டிய கட்டாயம்.
மறுபடியும் தொடங்கியது தேடுதல் வேட்டை..
இம்முறை,சிறந்த குழந்தைகள் காப்பகம் தேடும் வேட்டை !!
சின்னஞ்சிறு குழந்தை சிறையில்(காப்பகம்) அடைக்கப்பட்டது ...
நாட்கள் ஓடின ,மாதங்கள் ஓடின,வருடங்கள் ஓடின,
குழந்தை பள்ளிக்கு சென்றது ,பெற்றோர்கள் பணிக்கு சென்றனர்..
நாளொன்றுக்கு மூவரும் ஒன்றாய் இருந்தது மாலைபொழுதில் மட்டுமே
மாலைப்பொழுதையும் கைப்பேசி கடன் வாங்கியதால் ,
பெற்றோர்கள் இருந்தும் தனிமரம் ஆனது அக்குழந்தை
நாட்கள் ஓடின ,மாதங்கள் ஓடின,வருடங்கள் ஓடின,
குழந்தை பருவத்தை கடந்தது,
பள்ளி படிப்பை முடித்தான் ,கல்லூரி படிப்பை முடித்தான்,கல்யாணமும் நடந்தது,
அயல்நாடு சென்றான் தன் மனைவியுடன் ,
வயதான நிலையில், தள்ளாடும் பெற்றோர்கள் ..
அம்மாவுக்கு மூட்டு வலி ,அப்பாவுக்கு சக்கரை நோய் ..
டாலர்களில் பணம் பறந்து வந்தது பெற்றோர்களின் வங்கி கணக்கில்,
எங்களால் தனியாக இருக்க முடியவில்லை என்றார் அப்பா
கவலைப்படாதீங்கப்பா என்ற மகன் ,
தன் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தான்,
இம்முறை ,சிறந்த முதியோர் இல்லம் தேடும் வேட்டை !!
நான் இதுவரை சொன்னது,நம் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் கொடூர வைரஸ்.
இந்த வைரஸ், கடந்த 20 வருடங்களாக ,நமக்கே தெரியாமல் நம் வாழ்வை சீரழித்துக்கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸுக்கு கூட தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிடுவோம் ,ஆனால் இந்த வைரஸுக்கு மருந்தே இல்லை.
இந்த கொடிய வைரஸின் பெயர் Nuclear Family .தமிழ்ல சொல்லனும்னா தனி குடும்ப வாழ்வுமுறை.
இன்றைய கல்வி வளர்ச்சியும் ,தொழில்நுட்ப வளர்ச்சியும் ,வேலைவாய்ப்பும் ,மக்களை நகரங்களை நோக்கி நகர்த்தி,உறவுகளை உடைத்து விட்டது.
இன்று உச்ச நடிகர் சொல்லப்போகும் குட்டிக்கதைக்கு காத்திருக்கும் நாம், நம் தாத்தா சொன்ன குட்டி கதைகளை மறந்து விட்டோம்.
இன்று குருஜிகளின் ஆன்மீக சொற்பொழிவை காசு குடுத்தும் காணொளிமூலமாகவும் கேட்கும் நாம் ,நம் பாட்டி சொன்ன சாமிக்கதைகளை மறந்து விட்டோம்.
அக்கறையுடன் அதட்டி திருத்தும் பெரியப்பா, அன்பு காட்டும் அத்தை , செல்லம் குடுக்கும் சித்தப்பா, கேட்டதை வாங்கி தரும் மாமா,சித்தி,அண்ணி போன்ற உறவுகள் உடைந்து, இன்று வாட்சப் குரூப்பில் மட்டுமே பெயருக்கென உள்ளது.
இன்றைய சமுதாயத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க ,தனி குடும்ப வாழ்வு முறையும் காரணம்.
சென்னையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது காதுகேளா சிறுமியை 17 பேர், பாலியல் வன்கொடுமை செய்து சிதைத்துள்ளனர்.
அந்த 17 பேரின், வயது 22 முதல் 60 வரை.லிப்ட் ஆபரேட்டர் ,தோட்டக்காரர் என அனைவரும் அந்த குடியிருப்பில் இருந்தவர்களே.
சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர்,தன் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததையும் நாம் செய்திகளில் படித்திருப்போம்.
இது போன்ற பல குற்ற செயல்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது.இதற்கெல்லாம் அடிப்படை காரணம் ,நம் வாழ்வியல் முறையில் வந்த மாற்றமே.
வீட்டு வாசலில் தாத்தா ,பாட்டி இருந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்ப்பட்டிருக்கும்.
சொந்தக்கார்கள், தொல்லை தருபவர்கள்,நாம் முன்னேறினால் பொறாமை படுபவர்கள் என பல குற்றசாட்டுகள் வைக்கப்படுகிறது.உறவுகளை தவறாக சித்தரிப்பதில், தொலைக்காட்சி தொடர்களின் பங்கும் பெரிது.
என் கேள்வி,இங்கே குறை இல்லாத மனிதன் யார் ?? எல்லாரிடமும் ஏதாவது குறை இருக்கும் தானே ??
நாம் பணிபுரியும் இடத்தில்,அக்கம்பக்க வீடுகளில்,நாம் அன்றாடம் கடந்து வரும் எத்தனையோ பேர் நமக்கு தொல்லைகளும்,பொறாமையுடனும் இருக்க தான் செய்கின்றனர் .
அவர்களிடமிருந்து நாம் சகித்து வாழவில்லையா ??
அவர்களை விடவா, நம் சொந்தங்கள் நமக்கு தொல்லை தரப்போகிறார்கள் ??? கண்டிப்பாக இல்லை
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ....
நாம் கீழே விழும் பொது நம்மை தூக்கி நிறுத்துவது நம் சொந்தங்களே .
ஹும் நண்பர்களும் வருவார்கள் ,ஆனால் அவர்களுக்கேன்று ஓர் எல்லை இருக்கும்.
அக்காள் மகளை மடியில் வைத்து காது குத்துவது ,தாய் மாமனின் உரிமை.
பெற்றோர்களின் பாத பூஜை ,மைத்துனன் பொறி அள்ளி போடுவது,நாற்றனார் அண்ணன் மனைவியாக வர போகும் அண்ணி வாயில் சக்கரை குடுத்து வீட்டுக்கு அழைப்பது போன்ற நம் ஒவ்வொரு சடங்குகளிலும் ஒவ்வொரு சொந்தத்தின் பங்கு உள்ளது.
ஆக ,உறவில்லா இல்லா வாழ்க்கை என்பது
உப்பில்லா உணவு
சிறகில்லா பறவை
ஒளியில்லா சூரியன்
நிலவில்லா வானம்
மையில்லா கண்கள்
சுவரில்லா சித்திரம்
பூவில்லா பூஞ்செடி
கூட்டு குடும்பமும் ,சொந்த பந்தங்களும் தான் உலகம் போற்றும் நம் நாட்டின் கலாச்சாரம்.இது தான் நம் அடையாளம்.
நம் அடையாளம் இல்லாத வாழ்க்கை ,வாழ்க்கையே இல்லை ..
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக