வியாழன், 11 ஜூன், 2020

என்னுடைய கேள்வி :...அரசாங்க வேலை கிடைத்தால் வாழ்க்கை செட்டில் ஆகி விடும். இந்த வரிகள் பல இளைஞர்களின் ஆற்றல் மிக்க கனவுகளை புதைத்து கொண்டிருக்கிறதா?

பதில் :..என் நண்பர் மாரிமுத்து  அவர்களுடையது



ஆற்றல் மிக்க…பேராற்றல் மிக்க கனவே அரசு வேலையை அடைவது தானே…

அதற்குக் காரணம் நம்முடைய இளைஞர்கள் அல்ல. நம்முடைய சமூகம் கட்டமைக்கப்பட்டதே அதேபோல் தான்.

உதாரணமாக என்னையும் என் நண்பனையும் வைத்தே சொல்கிறேன்.

மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவன் நான். எத்தனையோ முயற்சி செய்தும் அரசு வேலை கிடைக்கவில்லை…தனியார் பள்ளி ஒன்றில் நடுநிலை பள்ளி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். சொற்ப சம்பளம். வேலை நிரந்தரம் கிடையாது.

அடுத்து என் நண்பன். அவனுக்கும் அரசு வேலை கிடைக்கவில்லை. எனினும் நல்ல வசதியான குடும்பம். யாரிடமும் கைகட்டி வேலை செய்ய மாட்டேன் என்று கூறி, சம்பந்தமே இல்லாத பிசினஸை துவக்கினான். அவன் குடும்பமும் பிசினஸ் செய்யும் குடும்பமல்ல. தாயும் தந்தையும் அரசு ஊழியர்கள். பிசினஸ் என்ற பெயரில் அப்பா அம்மா சம்பாத்தியத்தில் ஒட்டிக்கொண்டிருந்தான்.

அடுத்து திருமண பேச்சு வந்தது. ஒரே தரகரிடம் எங்கள் இருவருக்கும் பெண் தேடும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ( பெற்றோரால்) எங்கள் பெற்றோரும் நண்பர்களே.

எங்கள் இருவரின் பெற்றோரும் ஒரே ஒரு லாஜிக்கை தரகரிடம் முன்வைத்தார்கள். 'எங்க பசங்களுக்கு தான் அரசு வேலை கிடைக்கவில்லை; எனவே வர்றவளாவது அரசு உத்தியோகத்தில் வேண்டும்' என்பதே அது.

ஆனால் என்ன ஆனது?

எனக்கு அரசுப்பணி பெண் கிடைக்கவேயில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பெண்ணே கிடைக்கவில்லை. 'தனியாரில் உத்யோகமா…வசதி வேறு இல்லையா…சாரிங்க' இது தான் பதில்.

இதே, என் நண்பனுக்கு உடனேயே செட்டாகி விட்டது. அவனுக்கு கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தான் என் திருமணம் நடந்தது. அதுவும் அந்த தரகர் மூலமாக அல்ல. அப்பா தான் தேடி பிடித்து பார்த்து செய்தார். நான் கைபிடித்தவள் பத்தாவது வரை மட்டுமே படித்தவள். என்னை விடவும் ஏழ்மையான குடும்பம். 1998 ல் திருமணம் நடந்தது.

இவ்வாறான கதி எனக்கு மட்டும் நேர்ந்ததல்ல. இன்றும் பல இளைஞர்களும் சந்தித்து வரும் பிரச்சினை தான் இது. இன்று தனியார் துறையிலும் பெயர்பெற்ற கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் தப்பித்து விடுவார்கள். ஆனால் தனியாரிலும் சுமாரான அமைப்புக்களில் வேலை செய்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். வரதட்சிணை கொடுமைக்கு எதிராக அரசாங்கம் செய்த பிரச்சாரம் போல் இக்கொடுமைக்கும் ஒரு பிரச்சாரம் தேவை.

மாற வேண்டியது பெண்களும் பெற்றோர்களுமே.

கனவாவது கத்தரிக்கையாவது.

நன்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக