திங்கள், 15 ஜூன், 2020

கேள்வி :...வகுப்பறையில் ஆசிரியர்களின் நிர்வாக திறன் எப்படி இருக்கும்? மாணவர்களை சமாளிக்க நீங்கள் கையாண்ட உத்திகள் என்னென்ன?


என் பதில் :...நான் சொல்வதை விட என் பேராசிரியர் நண்பர் செந்தில் பாபு அவர்கள் பகிர்ந்தால் அருமையாக சரியாக இருக்கும் ...

இக்கால மாணவர்களிடம் நீங்கள் ஆசிரியராக நடந்துகொண்டால் உங்கள் வீட்டிற்கு நடையை கட்ட வேண்டிவரும். உங்களுக்கு தெரிந்தவை தெரியாதவை, நீங்கள் பயின்றவை, பயிலாதவை அனைத்தும் அவர்களுக்கு தெரியும், அதற்கு மேலும் அவர்களுக்கு தெரியும், புரியும். இவ்வளவு காலம் மாணவராய் இருந்த நீங்கள் திடீரென ஆசான் எனும் அரியணையில் ஏன் ஏறுகின்றீர்? இறங்குங்கள்.

என் வகுப்பறை "பழைய பாரம்பரிய முறை"யில் இயங்காது. நான் பாடம் நடத்தும் முறையில் ஒரு சில நடைமுறை சாத்தியங்களை புகுத்தி இருக்கின்றேன்.

என் மாணவர்களுடன் அமர்ந்திருப்பேன். அவர்களுக்குத்தான் என் வகுப்பில் முன்னுரிமை, நான் அவர்களுடன் ஒரு சகா.
பலகையில் எழுதுவது உட்பட அனைத்தும் என் மாணவர்கள் தான் செய்வர்.
(Chalk and Talk, Screening, Ppt, Video ) பாடம் நடத்தும் வழிமுறைகள் அனைத்தும் அவர்களின் விருப்பம். என் மாணவர்களுக்கு ஏற்றவாறு என் பாடம் நடத்துமுறையினை வைத்திருக்கின்றேன்.புரியவில்லையெனில் அவர்கள் என்னை கேள்வி கேட்க முழு உரிமை அளித்திருக்கிறேன்.


கட்டாயப்படுத்தி எதனையும் நாம் கற்கவைக்க இயலாது என்பதை ஆணித்தரமாய் நம்புபவன். அன்றைய வகுப்பு பிடிக்கவில்லையெனில் அவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை, உணவகத்திற்கோ, நூலகத்திற்கோ செல்லலாம்.


"சார்” இந்த வார்த்தை அவர்களிடமிருந்து என்னை பிரிக்கின்றது என்பது என் கருத்து. அதனால் என் பெயரை சொல்லி அழைக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. அப்படி என் பெயரை கூறி அழைக்க விருப்பமில்லையென்றாலோ, கூச்சப்பட்டாலோ, Dr.செந்தில் என அழைக்க அவர்களுக்கு உரிமையுண்டு.


வருகையை பதிவு செய்யும் பொழுது அவர்களின் பெயரை சொல்லி அழைப்பேன், எண்களை சொல்லி அழைக்க அவர்கள் ஒன்றும் தேசிய நெடுஞ்சாலை அல்ல, எனக்கு அதில் உடன்பாடும் இல்லை.
ஒவ்வொரு வகுப்பறையிலும் சில விதிவிலக்குகளுண்டு (யாருக்கும் கட்டுப்படாமல் இருக்கும் மாணவர்கள்) , அதற்காக விதிவிலக்குகளை ஒட்டுமொத்த வகுப்பின் உதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.


மதிப்பெண்களை வைத்து முன்னுரிமை என்பது என் வகுப்பறையிலும், என் சேவையிலும் அறவே இல்லை அனைவரும் சமம். அறுபது பேருக்கும் என்னிடம் உரிமையுள்ளது.


மாணவர் குறைந்த மதிப்பெண் எடுக்கின்றார்கள் என்றால் அவர்களை கடிந்து கொள்ளமாட்டேன். அதற்கு முற்றிலும் நான் தான் காரணம். எப்படி எடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும் என்று மாதமிருமுறை பின்னூட்டம் கேட்பேன்.
எனக்கு என் கல்லூரி அளித்திருக்கும் அதிகாரத்தை வலிமையை மாணவர்களிடம் காண்பிக்க மாட்டேன், ஆயிரம் இருந்தாலும் அவர்கள் என் மாணவர்கள், என்னிடம் படிக்க வந்தவர்கள்.


1: 30 ல் எனக்கு உடன்பாடு இல்லை. 1:1 எனும் ஈடுபாடு காண்பிக்க வேண்டும் என்ற எண்ணமுண்டு, அதனை நடைமுறையிலும் பின்பற்றுகின்றேன்.
(Teacher:Student ratio,வகுப்பறையில் ஒரு ஆசிரியருக்கு எவ்வளவு மாணவர்கள் இருக்க வேண்டும் எனும் விகிதாச்சாரம்.


1:30 இப்போது பள்ளி கல்லூரிகளில் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த பட்ச விகிதாச்சாரம் 1:1 எனது கொள்கை. அனைவரும் பணம் கட்டி தான் படிக்கின்றனர். அனைவருக்கும் சமமான கவனிப்பு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஈடுபாடு.


பாடம் நடத்துதலில் இருவகை


நடத்த வேண்டிய பாடங்களை நடத்தி அதன் பின் கேள்வி கேட்பது - Deductive Teaching .
பாடம் சம்பந்தமான புரிதல், மாணவர்களுக்கு என்ன தெரியும் என தெரிந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு , அதற்கேற்றவாறு பாடம் நடத்துதல் - Inductive Teaching)
வகுப்பறையில் நுழைந்தபின் முதல் 20 நிமிடங்கள் மிகமிக முக்கியமானது.எப்பேர்ப்பட்ட மாணவனும் கூர்ந்து கவனிக்கும் நேரம் அதனை முறையாய் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாடம் நடத்துவதில் இருமுறை உண்டு. Deductive method and Inductive method. Inductive method, என் பாணி.



இரு கல்லூரியில் பாடம் நடத்தியிருக்கின்றேன். இன்னும் என்னுடன் என் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர்.



நாமும் அதே இடத்திடலிருந்து வந்தவரென்ற எண்ணம் வந்துவிட்டால் ஆசிரியர்களுக்கென இருக்கும் பிரத்தியேக தன்முனைப்பு அழிந்துவிடும். மாணவர்களுடன் மாணவராகவே இருத்தல் நன்மை பயக்கும்.

இப்படியொரு ஆசிரியர் எனக்கு வாய்த்திருந்தால் எப்படியெல்லாம் படித்திருப்பேன் என்று நினைக்கின்றேனோ அப்படியொரு ஆசிரியனாக என் மாணவர்களுடன் வாழ்கின்றேன்.

நன்றி: என் மாணவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக