வெள்ளி, 29 மே, 2020

கேள்வி :நான் கல்லூரியில் காதல் கொண்டதில்லை, வகுப்பை புறக்கணித்ததில்லை, குடிப்பழக்கம் இல்லை, கடந்து வந்த பாதைகளில் எந்த தவறும் செய்ததில்லை. இப்பொழுது திரும்பி பார்க்கும் பொழுது வாழ்க்கையில் வெறுமையை உணர்கிறேன். என்ன செய்வது?

என் பதில் :...


நீங்கள் சொன்ன லிஸ்ட்டில் எவற்றையெல்லாம் உண்மையிலேயே இழந்திருக்கிறீர்கள். எவற்றையெல்லாம் "நல்லவேளை, செய்யவில்லை. இல்லையேல் உங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்திருக்கும் " என்று பார்க்கலாமா?

காதல் : பருவ வயதில் வரவேண்டிய உணர்வுதான். கொஞ்சம் ஈர்ப்பு எல்லாம் உங்களுக்கும் எல்லோரையும் போலவே வந்திருக்கும். ஆனால் அடுத்த படிக்கு- காதலை வெளிப்படுத்தி, அந்த பெண் சம்மதித்து, ஊர் சுற்றி, திருமணத்திற்கு கனவுகள் கண்டு பின் வெற்றியோ, தோல்வியோ ஆவது வாய்ப்பில்லாததாலோ அல்லது உங்களுடைய கூச்ச சுபாவம் போன்ற குணாதிசயத்தாலோ நடக்காமல் இருந்திருக்கலாம்.
அப்படியானால் கையைக் கொடுங்கள். நானும் உங்கள் கேஸுதான். ஆனால் நாம் எல்லோரும் நினைப்பதுமாதிரி காதல் கல்லூரி படிக்கும்போது மட்டும் வருவதில்லை. வாழ்க்கை முழுவதும் புதிய காதல்கள் வருவதும், புதிய பெண்ணின் அன்பு கிடைப்பதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் நல்ல வேலையாக கல்லூரிப் பருவத்தில் காதல் வரவில்லை என்று நான் இப்போது உணர்கிறேன். அந்த பருவத்தில் வரும் காதல் தவறு கிடையாது. ஆனால் வாழ்வில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாலும், புதிய பொறுப்புக்களை சுமக்கவேண்டிய அவசியம் இருப்பதாலும் அப்போது வரும் காதல் முறிந்தாலும், திருமணத்தில் முடிந்தாலும் அதீத துன்பத்தையே தருவதை நான் நிறைய மனிதர்களிடம் பார்த்திருக்கிறேன்.

அதனால் காதலுக்கான வயது ஒன்றும் முடிந்துபோய்விடவில்லை. பெண்களிடம் இதுவரை இல்லையெனில் இனி நெருங்கிப் பழகத் தொடங்குங்கள். வெகு விரைவில் நாம் பெண்களை புரிந்துகொள்ளாத தொடங்குவோம். பின் பல கள்ளம் கபடமற்ற பல காதல்கள் வாழ்க்கை முழுவதும் உங்களை தொடர்ந்து வரும்.

2. வகுப்பு புறக்கணிப்பு :

இதை நான் சின்னச் சின்ன குறும்புகள்-யாருக்கும் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத குறும்புகள் என்று எடுத்துக் கொள்கிறேன். இத்தகைய விளையாட்டு குணங்களுக்கும் எதுவும் வயது வரம்பு கிடையாது. சிறு வயதில் குறும்புத் தனத்துடன் இருந்த பலர் சற்று வயதானவுடன் இறுக்கமான, சீரியஸான முகத்துடன் வளம் வருவதைப் பார்த்திருக்கிறேன். இந்த வயதில் விளையாட்டுத் தனத்துடனும்,இந்த வயதில் சீரியஸாகவும் இருக்கவேண்டும் என்று எந்த இலக்கணமும் கிடையாது. பொறுப்புணர்வுக்கும் விளையாட்டுத் தன்மையுடன் இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவர் பொறுப்பாக இருந்துகொண்டே மகிழ்ச்சியாகவும், விளையாட்டுத் தன்மையுடனும் இருக்கமுடியும். எனவே இதுவரை போனால் போகட்டும். இனி அப்படி இருக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

3. குடிப்பழக்கம்:

நல்லவேளை, நீங்கள் அந்த வயதில் மதுவைத் தொடவில்லை. உங்கள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போடும் தன்மை மதுவுக்கு உண்டு. மதுவுக்கு அடிமையான பலர் வாழ்க்கையில் எந்தவித மகிழ்ச்சியையும் அனுபவிக்கமுடியாமல், சதா ஒரு பதட்டத்துடன் இருந்துகொண்டு, தன் கடமையையும் பொறுப்புகளையும் சரிவர செய்ய இயலாமல், மதுவைப் பெறுவதற்காக திருடுவது பிச்சை எடுப்பது என்ற அளவிற்கு கீழிறங்கி, நிறைய அவமானப் பட்டு ஒரு கேவலமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மது மட்டுமல்ல, மனதை அடிமைப்படுத்தும் மற்ற பழக்கங்களான புகை, கஞ்சா,மற்ற போதை, சூது முதலிய எல்லாமே மிக மிக ஆபத்தான விஷயங்கள். மது அருந்தாதவனுக்கு சமூகத்தில் என்றுமே தனி மதிப்பு உண்டு. மதுப்பழக்கம் இல்லாத ஒரே காரணத்தினால் ஒருவனிடம் ஈர்க்கப்பட்டு காதலித்த பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன்.

4. மற்ற தவறுகள்:

எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனது தெரியவில்லை. ஆனால் நம்மை அடிமைப்படுத்தும் போதை ஊட்டக்கூடிய எந்த தவறையும் நீங்கள் செய்யாமல் இருந்தது நல்லதற்கே. இனியும் செய்ய முயற்சிக்காதீர்கள்.

சமூக விதிகள் சார்ந்த தவறுகள் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது.ஒருவரது சூழல்,வாழும் சமூகம் போன்ற பல காரணிகள் கொண்டு சரி, தவறிற்கான இலக்கணம் மாறிக்கொண்டேதான் இருக்கும். வாழ்க்கையில் நாம் பல விஷயங்கள் பயிற்சியின்மூலம் தவறு செய்து செய்துதான் கற்கிறோம்.

நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக