ஞாயிறு, 31 மே, 2020

கேள்வி :..நீங்கள் கண்டு வியந்த மனிதர் யார்? ஏன்?


பதில் :...நண்பர் மதிவாணன் அவர்களின் பகிர்வு ..பொருத்தமானதாக இருக்கும் ...


மன்னன் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியே அமர்க்களமாக இருக்கும். தொழிலதிபர் விஜயசாந்தியை, விமான நிலையத்தில் சந்தித்து மோதிக்கொள்ளும் ரஜினி, பெண்களை மட்டம்தட்டி ஒரு வசனம் பேசுவார்.

ஆம்பளைங்கன்னா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு கம்பீரமாக கையை வீசி நடக்கணும்,

பொம்பளைங்கன்னா அவங்க முன்னால தலையை குனிஞ்சிகிட்டு கைய கட்டி நிக்கணும்

சமுதாயத்தின் மனக்குரலும் அதுதான் என்பதை தியேட்டரில் அதிரும் விசில் சத்தம் உறுதி செய்யும்.

இந்த சமூகத்தில் குழந்தை திருமணத்திற்கு பலியான ஒரு இளம்தாய், தான் நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நிற்க வேண்டும், தனக்கு முன்னே ஆண்கள் கைவீசி நடந்து அணிவகுப்பு மரியாதை கொடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் என்னாகும்? அந்த கனவுக்கு கணவனையே உதவி செய்யக் கேட்டால் என்ன நடக்கும்?

எங்கள் வத்தலகுண்டு கிராமத்தின் பக்கத்தில், திண்டுக்கல் நகரில் பேசப்படும் இந்த கணவன் மனைவி காவலர் ஜோடியின் கதையை, ஒரு பிரமிக்க வைக்கும் வாழ்க்கையை, பலரும் அறிந்திருக்கமாட்டோம். சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளியை பார்த்துதான் தெரிய வந்தது.

திருமதி. என்.அம்பிகா ஐ.பி.எஸ். தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

இன்று வடக்கு மும்பை காவல் துறையின் மதிப்புமிக்க டி.சி.பி. Deputy Commissioner of Police. மகாஹாராஷ்டிர அரசாங்கத்திலும், காவல்துறை உயர் மட்டத்திலும் பெண் சிங்கம் என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படுகிறார்.

திண்டுக்கல்லில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மணம் செய்விக்கப்பட்டு புகுந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அம்பிகாவுக்கு பதினாலே வயது.

தனது பதினெட்டாவது வயதில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தாய்.

தமிழக கிராமத்து பின்தங்கிய சமூக குடும்பங்களில், குழந்தை திருமணத்திற்கு பலியான எத்தனையோ குழந்தைகளில் அம்பிகாவும் ஒரு சிறுமி. வாழ்க்கையின் அழகிய தருணங்களை கனவில் மட்டும் காணும் பாக்கியம் பெற்றவள்.

அம்பிகாவின் கணவர் தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தார். ஏழ்மையான சூழ்நிலை. சிறிய வாடகை வீடு. அந்த குடும்பம் எளிய வாழ்க்கையில் நாட்களை கடத்தியது.

ஒரு நாள் அம்பிகாவின் கணவர், காவலர் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக அதிகாலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டார்.

அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாநில ஐ.ஜி, டி.ஐ.ஜி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் ஐ.ஜி மற்றும் டி.ஐ.ஜி க்கு வழங்கப்பட்ட தடபுடலான அணிவகுப்பு மரியாதையை அறிந்து அம்பிகா திகைத்து போனார்.

வீட்டிற்கு வந்ததும் டி.ஜி மற்றும் டி.ஐ.ஜி பற்றி கணவரிடம் கேட்டார். துறையின் மிக மூத்த அதிகாரிகள், ஐ.பி.எஸ் படித்து நேரடியாக உயர்பதவியை பெற்றவர்கள் என்று தெரிய வந்தது.

அந்த குழந்தைத் தாய், தானும் ஐ.பி.எஸ் படித்து ஒரு காவல்துறை உயர் அதிகாரியாகி அந்த நிலைக்கு உயர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவுலகுக்கு போனார்.

ஆனால் அம்பிகா குழந்தை வயதிலேயே திருமணம் செய்து கொண்டதால், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கூட எழுதியிருக்கவில்லை.

அம்பிகா தனது கனவை சொன்னபோது கணவர் யோசிக்கவில்லை. தான் வேண்டுமானால் ஐ.பி.எஸ் ஆக முயற்சிப்பதாக சொல்லி மனைவியின் கனவை தட்டிக்கழிக்கவில்லை. முதல் படியாக எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு தனித்தேர்வராக படித்து தேறுமாறு மனைவிக்கு வழிகாட்டினார்.

அம்பிகா படிப்பில் சுட்டி.

தனித்தேர்வராக தன்னுடைய எஸ்.எஸ்.எல்.சி தேர்வை முடித்தார். பிளஸ் 2 தேர்வையும் முடித்தார். டிகிரி தேர்வுகளையும் தனித்தேர்வராகவே முடித்தார்.

குழந்தைகளும் அம்மாவோடு இரவில் படித்து, அவர் உறங்கும் போது உறங்கி, காலையில் எழுந்து அவருக்கு வேலைகளில் உதவி செய்து, பகலில் பள்ளிக்கூடம் சென்று வந்தன.

இவரது கனவான ஐ.பி.எஸ் பயிற்சிக்கு சென்னை செல்ல வேண்டும். தம்பதியினர் இருவரும் இருக்கும் பணத்தையெல்லாம் திரட்டினர்.

கணவர் பலரது உதவியை வேண்டி பெற்று தன் மனைவி ஐ.பி.எஸ் பயிற்சி வகுப்புகளில் சேர ஏற்பாடுகளை செய்தார்.

கணவரின் முழு ஒத்துழைப்புடன் அம்பிகா தனியாக சென்னை வந்து சேர்ந்தார். விடுதியில் தங்கி தன்னுடைய வாழ் நாள் கனவை நினைவாக்கும் முயற்சியை ஆரம்பித்தார்.


ஆனால் மூன்று முயற்சிகளுக்குப் பிறகும், ஐ.பி.எஸ் தேர்வில் அம்பிகாவால் தேர்ச்சிபெற முடியவில்லை. குடிமை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல .

கணவர் சோகமடைந்த மனைவிக்கு ஆறுதல் சொல்லி அம்பிகாவை ஊருக்கு திரும்பி வரச் சொன்னார். பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தவிர அரசாங்க தயவால் இப்போது அவர்களுக்கு தங்குமிட வசதியும் கிடைத்திருந்தது.

ஒரு வேளை தான் ஓய்வு பெறும்நாளில் தனது தோளில் ஓரிரு நட்சத்திரங்கள் இருக்கலாம், கவலைப்படாதே என்று மனைவியை சிரித்துத் தேற்றினார். பிள்ளைகளும் கவலைப்படாதே அம்மா நாங்கள் அதிகாரிகளாகி பெருமை சேர்ப்போம் என்று உறுதியளித்தனர்.

ஆனால் மறுநாள் காலையில் எழுந்து அமர்ந்த அம்பிகா தனக்கு இன்னும் ஒரு வருடம் அவகாசம் வழங்குமாறு குடும்பத்தினர் முன்னர் விண்ணப்பம் வைத்தார்.

“இந்த ஆண்டு வெற்றிபெறவில்லை என்றால் நான் திரும்பி வருவேன். இந்த அனுபவத்தினால், படித்த படிப்பினால் தன்னால் குறைந்த பட்சம் ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து குடும்பத்தை ஆதரிக்க முடியும்" என்று சொன்னார்.

கணவர் அவரைத் தேற்றி, மனைவியை மறுபடியும் சென்னை பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை வந்து சேர்ந்தார் அம்பிகா. தன்னை பிரிந்து தவிக்கும் குழந்தைகளை எண்ணி கலங்கினார். குலதெய்வத்தை வணங்கினார். இந்த முறை அவர் எடுத்தது காளி அவதாரம்.

முயற்சியென்றால் அசுர முயற்சி. எடுத்ததை முடிக்க வேண்டும் என்கிற வெறி.

அம்பிகா தனது நான்காவது முயற்சியில் தனது ஐபிஎஸ் முதல் நிலைத்தேர்வு (Preliminary Exam), தலைமை தேர்வு, நேர்காணல் மூன்றையும் நொறுக்கித் தள்ளினார்!

2008 இல் ஐ.பி.எஸ்ஸை முடித்த பிறகு, அவருக்கு வழங்கப்பட்ட பயிற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். மிகவும் கவனத்துடன் அரசு நெறி முறைகளை பழகினார்.

அவரது பயிற்சியில் உடன் பயின்ற பேட்ச் மேட்கள் அவர் ஒரு துடிதுடிப்பான, துணிச்சலான பெண் என்று அப்போதே தெரிந்தது என்று சொல்லுகிறார்கள்.

அம்பிகா இப்போது மும்பையில் காவல்துறை வடக்கு 4வது பிரிவில் டிசிபி-யாக பணிபுரிகிறார். அவரது மனித நேய செயல்பாட்டிற்காக பத்திரிகைகளால் புகழப் படுகிறார். அவரது தீரத்திற்காக பெண் சிங்கம் என்று துறையினரால் பெருமையுடன் அழைக்கப்பட்டு விருதுகளை அள்ளிக் குவிக்கிறார்.

திண்டுக்கல்லின் இந்த பெண்மணி கடந்த ஆண்டில் மகாராஷ்டிராவின் மாமனிதர் பட்டம் வென்றார். பட்டமேற்கும் போது அவரது கம்பீர பேச்சை கேளுங்கள்.

குழந்தை திருமணத்திற்கு அம்பிகா தனது பெற்றோரை குறை கூறியிருந்தால், தன்னுடைய தலைவிதியை சபித்திருந்தால், அவர் இன்று ஒரு டி.சி.பி. ஆகியிருக்க முடியாது.

அவர் தனது கடந்த காலத்துக்கு சிஸ்டத்தை குறை கூறவில்லை.

பதிலாக, தனது எதிர்காலத்தை மாற்ற, கடின உழைப்பு, கணவரின் ஆதரவின் மூலம் அவர் ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டார். தம்பதியினர் தங்கள் கனவில் வெற்றி பெற்றார்கள்.

இன்று அம்பிகா பலருக்கு முன்மாதிரியாக மாறிவிட்டார். தனது துறையில் முதன்மை இடத்தை பிடித்தார். கண்டு வியக்கத்தக்க மனிதர்களில் ஒருவரானார். தனது கனவை நனவாகிவிட்டார்.


நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக அந்த குடும்பத்தின் தலைவி நிற்க, அவர் முன்னே காவலர் படை கைவீசி நடத்தும் அணிவகுப்பு மரியாதை அவருக்கு மட்டுமல்ல. அந்த கனவை முதன்மை படுத்திய ஒவ்வொருக்குமானது.

நன்றி ...மனைவியின் வெற்றிக்கு பின்னால் தியாக கணவனும் இருக்கிறார் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக