இன்று, 22-05-2013...நான் இருக்கும் கோவை நகரத்தில் உள்ள அனைத்து சிறுவர்பள்ளிக்கு மான ஓட்டப்போட்டி, சுமார் 2 km தூரம் ஓடிமுடிக்கவேண்டும். காலையிலையே எனது மகன் மிக ஆர்வத்துடன் barcelona football உடுப்புதான் போடணும் என்று அடம்பிடித்தும் சப்பாத்துகளில் jordan போட்டால்தான் காலுக்கு சௌகரியமாய் இருக்கும் என்றும் சொல்லி ஆயத்தமாகிப்போனான். அவன் தோற்றம் ஒரு வீரனுக்குரிய அம்சங்களுடன் நிறைந்திருந்தது எனக்கு இருப்புக்கொள்ளவில்லை, அவனுக்கு ஆச்சரியம் கொடுப்போமே என்றெண்ணி அவ்விடத்துக்கு நானும் போயிருந்தேன். அவனது வயதை ஒத்த 133 சிறுவர்கள் ஓடும் நேரமும் வந்தது. வரிசையில் நிற்கும்போது என்னை கண்டு கை அசைத்தான். துப்பாக்கியில் இருந்து ஒலி வரும் வரை அவன் நின்ற வேகம் காட்டிய ஆர்வம் எல்லாமே எனக்கு நம்பிக்கையை தந்தது. இதோ வெடி,, ஓடினான் ஓடினான் அவ்வளவு வேகம்,முகத்தில் இதுவரை நான் கண்டிராத ஒரு கடினத்தன்மை,கைகள் இரண்டும் முன்னோக்கி தூக்கி கால்கள் அவன் இடுப்பு உயரத்துக்கும் மேலாக எழும்பி அவன் வேகம் எடுத்தது குதிரைப்பாய்ச்சல்தான். 1km ஓடிவரும் இடத்துக்கு அவனைவிட வேகமாக நான் ஓடிப்போய் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட 50 பிள்ளைகள் வரை வந்துவிட்டார்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணோம். பிள்ளை விழுந்துட்டானோ என எண்ணி பதறியபடி நான் நிற்க தூரத்தில் அவனுடன் 5 சிறுவர்கள் சேர்ந்த போல நடந்துவந்தார்கள். அவனது முகத்தில்லிருந்த கடினம், ஆர்வம்,வெற்றி நோக்கிய வெறி எல்லாம் வியர்வையுடன் வழிந்துவிட்டிருந்தது. காற்றாட நடந்து காலின் கீழ் கிடக்கும் கற்களை பந்துகளாக்கி ஐவரும் கால்பந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஷியாம் ஓடு ஓடு என்று நான் கத்த,, அவன் என் அருகில் மிக நிதானமாய் வந்து பார்த்தீங்களா அப்பா முதல் அரைவாசி தூரம் நாங்கள் தான் முன்னுக்கு வந்தோம். இப்போ நாங்கள் களைத்துவிட்டோம் பின்னுக்கு வந்தவங்கள் ஓடுறாங்கள். அடுத்த முறை பின்னுக்கு ஓடிட்டு கடைசியில பிடிக்கணும் என்று அடுத்தவருட ஆசையை எனக்குள் விதைத்துவிட்டு ஓடினான். மொத்தமும் ஓடிமுடித்து வந்து இன்னுமொன்றும் சொன்னான், ''வெல்லுறது முக்கியமில்லை பங்குபெறுவதுதான் முக்கியம்'' என ஆசிரியர் சொன்னதாய். அவனை கட்டியணைத்து முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு வந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக