புதன், 20 மே, 2020


கேள்வி :..உங்களது திருமணத்திற்குப்பின் முதல் வாரத்தில் என்னென்ன நடந்தது.?

பதில் :..நான் எனது திருமண மலரும் நினைவுகள்  சொல்லி சொல்லி போர் அடித்திவிட்டது ...நமது சொந்தம்  ரஞ்சிதா கணினி பேராசிரியர் -ரெங்கநாயக்கன்பட்டி திண்டுக்கல் மாவட்டம்,வத்தலகுண்டு ),  கணவர் கேரளா(இடுக்கி மாவட்டம் , புற்றடி).தனது மலரும் நினைவுகளை பதிவாக அனுப்பியிருந்தார் ...

முதல் நாள் : திருமணம் ஆகி மறுநாள் காலையில் நானும் என் கணவரும் அங்கு உள்ள கோவிலுக்கு செல்வதற்கு தயாராகி கொண்டு இருந்தோம். எனக்கு அங்கு இருப்பதற்க்கே மிகவும் புதுமையாக இருந்தது. ஜூன் மாதம் என்பதால் அப்பொழுது கேரளாவில் மழை காலம் என்பதால் எனக்கு ஊட்டியில் இருப்பது போல ஒரு அனுபவம் இருந்தது.

கோவிலுக்கு நானும் என் கணவரும் சென்றோம் ….. அப்பொழுது ஊரை நன்றாக சுற்றி பார்த்தேன் மிகவும் அழகாக இருந்தது. ரோட்டின் இரு புறமும் எங்கு பார்த்தாலும் செம்பருத்தி செடியாக இருந்தது. பின்பு கோவிலுக்கு அருகில் சென்றோம் வித்தியாசமாக இருந்தது.தமிழ்நாட்டில் இருப்பது போல் இல்லை அங்கு , சாமிக்கு சூடம் ஏற்றுவது மற்றும் திருநீறு கொடுப்பது எதுவும் இல்லை, எனக்கு எல்லாமே வித்தியாசமா இருந்தது , அதுமட்டும் இல்லாமல் எனக்கு மலையாளம் தெரியாது என்பதால் மிகவும் கடினமாக இருந்தது….அப்பொழுது நினைத்தேன் என்னடா இது இப்படி இருக்கே ஊரு, நாம எப்படி இருக்க போறோமோ மலையாளம் வேற பேச தெரியாதே எப்படி சமாளிக்க போறோம் என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வந்தோம்.

இரண்டாம் நாள் : இன்று காலையில் எழுந்த உடன் என் கணவரின் வீட்டை சுற்றி பார்க்க ஆசையாக இருந்தது. என் கணவர் எல்லாவற்றையும் சுற்றி காட்டினார்.. அவரின் வீட்டை சுற்றி, ஏலக்காய் தோட்டமாக இருந்தது. என் வாழ்க்கையிலே ஏலக்காய் செடியே நான் பார்த்ததே இல்லை. அன்று முதல் முதலாக பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. செம்பருத்தி செடியை வைத்து எல்லாம் ஏலக்காய் தோட்டத்திற்கும் வேலி வைத்து அடைத்து இருந்தனர். தமிழ்நாட்டில் வீட்டில் செம்பருத்தி செடி இருந்தாலே ஆச்சரியமாக இருக்கும் ஆனால் எங்கு பார்த்தாலும் செம்பருத்தி செடிகளும் அதன் பூக்களும் கண்ணில் தென்பட்டது.


அன்று மாலையில் அங்கு உள்ள ஒரு நீர்விழ்ச்சி காண சென்று இருந்தோம்,அந்த இடத்தின் பெயர் அருவிக்குழி. அந்த இடத்தை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை, அவ்வளவு பிடித்து இருந்தது எனக்கு. மிகப்பெரிய பாறை ஒன்று இருந்தது , அதன் மேலே ஏறி நின்று பார்த்தால் தமிழ்நாடு தெரிந்தது…. குறிப்பாக சொன்னால் தேனி மாவட்டம் கம்பம் பகுதி நன்றாக தெரிந்தது.

மூன்றாம் நாள் : திருமணம் ஆகி மூன்றாம் நாளான இன்று நாங்கள் மறுவீட்டிற்கு செல்ல வேண்டும். அன்று காலை உணவு, எனது அத்தை இட்லி, வடை, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, என்று அசத்திவிட்டார் . எல்லாம் சாப்பிட்டு விட்டு நாங்கள் அனைவரும் மறுவீட்டிற்கு (என் வீட்டிற்கு) சென்றோம். மாலை நேரம் ஒரு 6 மணி இருக்கும் வேளையில் எனது வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். 5 நாட்கள் இருக்க வேண்டும் என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள். எனது ஊரு கொஞ்சம் கிராமம் என்பதால் என் கணவருக்கு அங்கு இருப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது.

நான்காம் நாள் : என் ஊரில் நிறைய கோவில்கள்இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் என் அம்மா என்னிடம் குளித்துவிட்டு நீயும் உன் கணவரும் நம் ஊரில் உள்ள எல்லா கோவிலுக்கும் போய்விட்டு வாருங்கள் என்று சொன்னார்.

என் கணவருக்கோ கடவுள் நம்பிக்கை என்பது கொஞ்சம் கம்மிதான் , இருந்தாலும் கல்யாணம் நடந்த மூன்று நாட்கள் தான் ஆகி இருக்கிறது இப்பவே எப்படி நான் வரவில்லை என்று சொல்ல முடியும் என்பதற்காக என்னுடன் வந்தார். நாங்கள் இருவரும் பைக்கில் சென்றோம் ….முதல் முதலாக என் கணவருடன் பைக்கில் சென்ற அனுபவம் அதை மறக்கவே முடியாது.

அன்று மாலையில் சென்னையில் இருக்கும் எனது சித்தி தொலைபேசியில் அழைத்து இருந்தார். என்னையும் என் கணவரையும் விருந்துக்கு சென்னைக்கு வாருங்கள் என்று சொன்னார். என் கணவர் நல்லது என்று நினைத்து கொண்டு அன்று இரவே நானும் என் கணவர் , என் தங்கை நங்கள் மூன்று பேரும் சென்னைக்கு சென்றோம்.

ஐந்தாம் நாள் : சென்னை வந்து சேர்த்தோம் … அன்று ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுத்து விட்டு, மாலையில் சித்தி , சித்தப்பா , சித்தி பசங்க இரண்டு பேரும் , நாங்கள் மூன்று பெரும் சேர்ந்து அனைவரும் மெரினா கடற்கரைக்கு சென்றோம்…மாலை நேரத்தில் சென்று இருந்ததால் கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது.

நானும் என் கணவர் மட்டும் தனியாக சென்று இருவரும் கைகளை பிடித்து நடந்து கொண்டு சுற்று கொண்டு இருந்தோம்.

பிறகு அலைகளை பார்த்தபடி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டோம். இருவருக்கும் மனம் விட்டு பேசுவதற்கு சரியான இடமாக இருந்தது .அலைகளை பார்த்து ரசித்துக்கொண்டே நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தோம் , நேரம் போனதே தெரியவில்லை. பின்பு ஹோட்டலுக்கு அனைவரும் சேர்த்து சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம்.

ஆறாம் நாள் : இன்று என் சித்தி எங்கள் இருவருக்கு விருந்து சாப்பாடு செய்து இருந்தார்.மட்டன் , சிக்கன் , முட்டை , நாங்கள் இருவரும் நன்றாக சாப்பிட்டோம், பிறகு எங்களுக்கு புதிதாக ஆடை எடுத்து கொடுத்தார்கள் . சிறிது நேரம் ஆனதும் என் வீட்டில் இருந்து போன் வந்தது. என் அப்பா என் கணவரிடம் பேசினார். நாளை மறுவீடு முடிந்து உங்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். நீங்கள் இருவரும் இன்று இரவு கிளம்பி வாருங்கள் என்று சொன்னார். இரவு கிளம்பினால் நம் வீட்டிற்கு போவதற்கு காலை ஆகிவிடும் , அதனால் இப்பொழுதே கிளம்ப முடிவு செய்து நாங்கள் மூன்று பேரும் சென்னையில் இருந்து கிளம்பிவிட்டோம்.

ஏழாம் நாள் : அன்று காலையில் 8 மணிக்கு மேலே கிளம்ப ஆரபித்தோம். எல்லோரும் முகத்திலும் ஒரே கவலை. எனக்கோ கிளம்புவதற்கு மனமே இல்லை. என்ன செய்வது போய்த்தான் ஆக வேண்டும் , எல்லோரும் கிளம்பி என் கணவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு என் அத்தை சம்மந்த வீட்டுக்காரர்கள் வருகிறார்கள் என்று தடபுடலாக சமையல் செய்து வைத்து இருந்தார்.எனக்கோ என்னை இங்கு விட்டு செல்ல போகிறார்கள் என்று கவலை ஒருபக்கம் வந்து வந்து போனது.

என் அம்மா தனியாக அழைத்து என்னிடம் பேசினார் ,,,,என்னை அறியாமல் அழுது விட்டேன் , என் அம்மா என தங்கை அனைவரும் என்னை கட்டி பிடித்துக்கொண்டு அழுதனர். பின்பு எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு நாங்கள் அடிக்கடி உன்னை பார்க்க வருவோம், சந்தோசமாக இருக்கணும், பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், பார்த்து பத்திரமாக இரு, அழக்கூடாது எதுவாக இருந்தாலும் போன் பண்ணி எங்களிடம் சொல்லு. அங்கு நாங்கள் எப்படியோ அதே போல தன இங்கு உன் அத்தையும் மாமாவும் அதனால் அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

பிறகு அனைவரும் சந்தோசாக ஊருக்கு சென்று விட்டார்கள்.....இன்று நினைத்தாலும் பசுமையான அருமையான மலரும் நினைவுகள் ...வாழ்த்துக்கள்  தோழி ..தோழருக்கு ..

நன்றி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக