புதன், 6 மே, 2020

கேள்வி : நான் ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும்?

என் பதில் :..


வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த பாடங்களை நம் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வதை விட பிறரின் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வது தான் அதி புத்திசாலித்தனம்.

ஒரு புத்தகம் உங்களை உலகின் மிகவும் புத்திசாலி மூளைகளோடு இணைக்கவல்ல ஒரு கருவி. உயிருடன் இருப்பவர்கள் மட்டுமல்லாது நம் காலத்திற்கு முன்பாக இருந்த நபர்களோடும் நம்மை இணைக்க உதவும் ஒரே கருவி புத்தகம்.

அதன் மூலம் ஒரு சவாலான சூழ்நிலையை அல்லது தோல்விகள் வந்த பொழுது அவர்கள் அதை எவ்வாறு கையாண்டார்கள் என்னும் ரகசியத்தை உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு கருவி புத்தகம்.

புத்தகங்கள் எப்படி நம் வாழ்வில் தாக்கத்தை உண்டாக்குகிறது?

ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை எழுதும் பொழுது, அவர் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், அவர் பெற்ற ஞானம், தான் உபயோகித்த யுக்திகள், சந்தித்த தோல்விகள், ஒரு சவாலான சூழ்நிலையை எப்படி கையாண்டு வெற்றிகண்டார்கள், வெற்றிகண்டதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து வெளிவந்து எவ்வாறு ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள் போன்ற விடயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்வார்.

இதில் சிறப்பான விடயம் என்னவென்றால், அவர் 10, 20 அல்லது 30 வருடங்களில் பெற்ற அனுபவங்களை 100, 200 அல்லது 300 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில் எழுதிவிடுகிறார்.

சில மணி நேரங்களில் நாம் படித்து விட கூடிய ஒரு புத்தகத்தில் பல வருடங்களின் அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். வாசிப்பின் ஆற்றலை ஜார்ஜ் ஆர் ஆர் மார்ட்டின் மிகவும் அழகாக கூறியுள்ளார்

ஒரு வாசகர் இறப்பதற்கு முன் ஆயிரம் முறை வாழ்கிறார். ஒரு முறை கூட வாசிக்காத நபர் ஒரு முறை மட்டுமே வாழ்கிறான் (A reader lives a thousand lives before he dies. The man who never reads lives only one).

மேல் சொன்ன புத்தகத்தை ஒருவர் வாசிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரால் அந்த எழுத்தாளரின் வாழ்க்கையை சில மணி நேரங்களில் வாழ்ந்து விட முடியும்.

இதன் மூலம் அந்த எழுத்தாளர் பெற்ற அனுபவங்களை நாமும் பெறலாம், அவர் பயன்படுத்திய யுக்தியை நாமும் உபயோகிக்கலாம், தன் கஷ்ட காலங்களிலிருந்து எவ்வாறு வெளிவந்தார் என்று அறிந்துகொண்டு நம் சவாலான சூழ்நிலைகளில் அதை பயன்படுத்தலாம், மேலும் பல தவறுகளிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் தவறுகள் செய்ய மாட்டார்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் வாசிக்க வாசிக்க உங்கள் தவறுகளின் விகிதம் குறைந்து விடும்.

ஒரு தலைமை நிர்வாக அதிகாரி சராசரியாக ஒரு வருடத்திற்கு 52 புத்தகங்களை வாசிக்கிறாராம். அதாவது வாரம் ஒரு புத்தகம். நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த உலகத்தின் ஏதோ ஒரு புத்தகத்தில் தீர்வு ஒளிந்திருக்கும்.

ஜெப் பீசோஸ் புத்தகங்களை விற்பதன் மூலம் பெரும் பணக்காரரானார்.

ஜே கே ரௌலிங் புத்தகங்கள் எழுதுவதன் மூலம் பெரும் பணக்காரரானார்.

வாரன் பபே புத்தகங்களை வாசித்ததன் மூலம் பெரும் பணக்காரரானார்.

எல்லா வகையிலும் புத்தகம் உங்களை கோடிஸ்வரனாக்க காத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி ..வாசிப்பை நேசிப்போம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக