வியாழன், 16 ஏப்ரல், 2020

கேள்வி :..அடுத்தவர் நல்லவர் என்று சொல்வதை விட நான் நல்லவன் என்று இருப்பதில் உள்ள உண்மை என்ன? அதனால் நீங்கள் சந்தித்த அனுபவம் என்ன?

பதில் :....

என் வாழ்க்கையில் நான் நல்லவனாக இருந்ததால் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்ந்து கெட்டவர்கள்.

சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்ந்து வரும் வீட்டை விற்க வேண்டிய நிலை வரும்.

நானும் அப்படியே சொந்த வீட்டை விற்று விட்டோம்.

அந்த வழியே செல்லும் போதெல்லாம் தலை குனிந்து சென்றுவிடுவேன்.அந்த வருத்தம் நன்றாக உணர்ந்தவன்.அந்த உணர்வை ஒரு நாவலில் படித்தேன் மிக உணர்ப்பூர்வமாக எழுதியிருப்பார்

(பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை ஏதேனும் ஒரு முக்கிய காரணத்தினால் விற்க நேரும்போதோ அல்லது நிரந்தரமாக பிரிய நேரும்போதோ ஒரு சிலர் திரும்பிக்கூட பார்க்காமல் மன பாரத்துடன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்புறம் அந்த திசையில் கூட செல்வதில்லை. செல்ல மனம் வருவதில்லை. மனதின் ஆழத்தில் அந்த இழப்பின் வலி எங்கேயோ ஒளிந்து கொன்டு இம்சிப்பதன் வெளிப்பாடு அது. இன்னும் சிலர் பல வருடங்கள் கழித்து சென்று பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கையில் கடந்து சென்ற அந்த வீட்டின் நினைவுகளில் நிமிடங்களில் ஒரு சில கணங்கள் வாழ்ந்து திரும்புவதுண்டு.

இந்த சிறுகதையின் நாயகரும் அப்படிப்பட்ட ஒரு பெரியவர் தான்! இடையில் பல கைகள் மாறிப்போன தன் விட்டை முதலில் வெளியே சற்று தூரத்தில் நின்று அடிக்கடி பார்த்துக்கொண்டிருப்பதை கவ‌னித்த உரிமையாளர் அவரிடம் விசாரிக்க, இவர் தான் எட்டு வருடங்க‌ளுக்கு முன் விற்ற வீடு அது என்று சொல்கிறார். வீட்டுக்காரர் உள்ளே அழைத்ததும் உள்ளே நுழைகிறார். உள்ளே காலடி எடுத்து வைக்கும் முன் வாசற்படியைத்தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்கிறார். ஏதோ கோவிலுக்குள் நுழைவது போன்ற பரவசம் அவர் விழிகளில் தெரிகிறது.

உள்ளே வந்தவரின் விழிகள் மூலை முடுக்கு விடாமல் சுற்றி சுற்றி பார்க்கிற‌து. கரங்கள் சில்லிட்ட சுவர்களைத் தடவித் தடவி பார்க்கின்றன.

மனதில் பொங்கிய உணர்வுகள் அவரிடமிருந்து அப்படியே வெளி வந்து விழுகின்றன.)

எங்கள் ஊரை சேர்ந்த நண்பர் படித்து வெளிநாடு சென்று மிக நல்ல நிலைமையில் உள்ளார்.

நீண்ட வருடங்கள் முன் அவர்களது வீட்டை அவரது தந்தையார் விற்றுவிட்டார்.சமீபத்தில் அந்த வீடு விற்பனைக்கு வந்தது அதனை கேள்விப்பட்ட நான் நண்பரின் கைபேசி எண்ணை அவர்களது உறவினரிடம் பெற்று தொடர்பு கொண்டு விபரம் கூறினேன் .அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்

உடனே எங்கள் வீடு எனக்கு கண்டிப்பாக வேண்டும் உடனே விலைபேசி முடியுங்கள் என்று என் பெயருக்கு பணமும் அனுப்பி என் பெயரில் வீடு பத்திரம் முடிக்க உரிமை பத்திரம் (power) அனுப்பினர்.

நானும் மிக குறைந்த விலையில் யாருக்கும் வெளியே தெரியாமல் பேசி முன்பணம் கொடுத்து முடித்தேன் .

இதற்கிடையில் வெளியூரில் வசிக்கும் அவரது சகோதர் இந்த விபரம் அறிந்து என்னை வந்து நேரில் பார்த்து உனக்கு கூடுதலாக பணம் தருகிறேன் எனக்கு வீட்டை வாங்கி தர வேண்டும் என்றார்.

நண்பரும் அவரது சகோதரரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் .அவர்களுக்குள் குடும்ப தகராறு.

ஆனால் நான் முதலில் அவரிடம் (வாக்கு )பேசி பணம் வாங்கி முன்பணம் கொடுத்து விட்டேன். ஆகவே நான் பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்கு தவற மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டேன்.

நண்பரும் மீதி பணத்தை அனுப்பி விட்டார் நானும் வீடு பத்திரம் முடித்து அனுப்பிவிட்டேன்.

அப்போது அவர் நீ செய்த உதவியை மறக்க மாட்டேன்.

(அவரது சகோதரர் கேட்ட விபரம் அறிந்து கொண்டார்)உனக்கு என்ன உதவி வேண்டும் என கேட்டார். நான் கேட்டது எனது மகனின் மேல் படிப்பிற்கும், எங்கள் ஊர் சிவன் கோயில் தலபுராணம் 70 ஆண்டுகள் முன் வெளிடப்பட்டது. அதைப்புதுப்பித்து வெளியிட உதவுமாறு கேட்டேன் .சரி விடுமுறையில் வரும் போது செய்து விடலாம் என்றார்.

ஆனால் சிறிது காலம் கழித்து வந்தவர் அவரது வேலைகள் முடிந்ததும். என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். நானும் விலகி விட்டேன்

நினைத்து இருந்தால் அதிக விலை சொல்லி இருக்கலாம்,அவரது சகோதரரிடம் கூடுதல் பணம் வாங்கி மாற்றி விட்டிருக்கலாம்.ஆனால் என்னை என் தாய்,தந்தையர் அப்படி வளர்க்கவில்லை .எவ்வளவோ கஷ்டத்திலும் நேர்மையாக உழைத்து வாழ்ந்து வருகிறன்.

என்றாவது ஒருநாள் அவர் உணர்வார்.

இல்லை என்றாலும் பரவாயில்லை

எனக்கு உதவிடவில்லை என்பதை விட கோயில் தலபுராணம் புதுப்பித்து தருவேன் என்பதையும் மறந்து விட்டார் என்பது மிக வருத்தம் தந்தது.

சமீபத்தில் ஊருக்கு வந்த நண்பர் என்னைப் பார்த்ததும் தலையை குனிந்து கொண்டார்.

நான் மனசாட்சிபடி நேர்மையான நல்லவனாக நடந்து கொண்டேன் என தலை நிமிர்ந்து நடந்தேன்.

இப்போது எனது மகனும் படித்து முடித்து நல்ல நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கிறான்.

இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத

#அனுபவம்

(இடையில் உள்ள கதையின் தலைப்பையும், ஆசிரியரின் பெயரையும் குறிப்பெடுக்க மறந்துவிட்டேன் )

அவருக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக