வெள்ளி, 3 ஏப்ரல், 2020

கேள்வி :......தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சீர்திருத்தங்களின் அடிப்படையில் வங்கிகளில் கடன் மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறக்கூடும்?

எனது பதில் :.....


கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை காப்பதற்கென்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சில சீர்திருத்தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சந்தேகங்களை எழுப்புகின்றன

முக்கியமாக கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு இது சம்பந்தமான சந்தேகங்கள் அதிகமாக இருக்கின்றன:

முதலில் அது சம்பந்தமான ஒரு கேள்வி-பதில்

1. வங்கிகளில் நான் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறையுமா?

ஆமாம். வங்கிகளில் உங்கள் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50% முதல் 0.75%. வரை குறையும். ஏற்கனவே பல வங்கிகள் 0.75% வரை வட்டியை குறைத்து விட்டன.

2. எனது மூன்று மாதத்தவணைகள் தள்ளுபடி ஆகியுள்ளதா?

இல்லை, மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை நிறுத்திவைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது; தள்ளுபடியெல்லாம் இல்லை.

3. எனது வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணம் இந்த மாதம் எடுக்கப்படுமா?

ஆமாம். வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே மாதத்தவணையை பிடித்துக்கொள்ள நீங்கள் முன்னேற்பாடு செய்திருந்தால் இந்த மாதத்தவணை எடுக்கப்பட்டுவிடும்.

இது ஒரு நுடபமான விசயம். இந்திய சட்டப்படி எந்த வங்கியும் தானாகவே மாதத்தவணை நிறுத்தி வைக்க உரிமை இல்லை. கடன்தாரர் யாராவது மூன்று மாதங்கள் தவணை, வட்டியை கட்டவில்லை என்றால், வங்கிகள் உங்கள் கணக்கை வராக்கடன் (NPA) என அறிவித்து, அந்த கடன்பணம் முழுவதையும் வசூலிக்க வேண்டும் - இது நடைமுறையில் உள்ள வராக்கடன் (NPA) சட்டம். (எல்லாருக்கும் ஒரே சட்டமா என்று கேட்காதீர்கள்)

தற்போது ரிசர்வ் வங்கி, இந்த சட்டத்தின் செயல்பாட்டை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க மட்டுமே வங்கிகளுக்கு அனுமதி தந்துள்ளது. தவிர ரிசர்வ்வங்கி அறிவிப்பு இந்த விஷயத்தில் வங்கிகள் தாங்களாகவே முடிவு எடுத்துக் கொள்ளவும் அனுமதி தந்துள்ளது. அவை இந்த ஏற்பாட்டை ஏற்றால் அவற்றை ரிசர்வ்வங்கி கேள்விகேட்காது.

4. அப்படி என்றால் எனது மாதத்தவணையை நிறுத்தி வைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

சில வங்கிகள் கோரிக்கை இல்லாமல் தாங்களாகவே நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. பிற வங்கிகளுக்கு எழுத்து மூலமாக அல்லது வாய்மொழியாகவோ கோரிக்கை வைக்க வேண்டும். இது அந்தந்த வங்கிகள் எடுக்கும் முடிவு. இப்பொழுதுதான் அறிவிப்பு வந்ததினால் வங்கிகள் முடிவெடுக்க சில நாட்கள் எடுக்கும். எதற்கும் நீங்கள் உங்கள் வங்கியை தொடர்புகொண்டு பேசுங்கள்.

5. மூன்று மாதம் கழித்து நான் மொத்தமாக பணம் செலுத்த வேண்டுமா?

இது நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை பொறுத்தே.

நீங்கள் இந்த மூன்று மாதங்களும் கட்டாமல் இருந்து ஜூன் மாதம் மொத்தமாக மூன்று தவணை களையும் செலுத்தலாம். அல்லது
இந்த மூன்று தவணைகளை கடைசியாக கட்டலாம். அதாவது எத்தனை மாதங்கள் தவணை பாக்கி உள்ளதோ அத்தனை மாதங்கள் கடன் முடிவது தள்ளிப் போகும். அல்லது
எப்போதும் போல் மாதாமாதம் தவணைகளை கட்டிக்கொண்டே இருக்கலாம் (மாறாக நீங்கள் இந்த சலுகையை ஏற்றுகொள்ளுவது நல்லது)
6. மூன்று மாதம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிப்பார்களா?

மாட்டார்கள். அபராதமோ அல்லது அபராத வட்டியோ மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு வங்கிகள் பிடிக்கக்கூடாது. ஜூன் 1தேதி அனைத்து பாக்கிகளையும் கட்ட வேண்டியிருக்கும்.

7. இந்த மூன்று மாதங்களுக்கு வட்டி உண்டா?

உண்டு, வட்டி அசலுடன் சேர்ந்து கொள்ளும்.

8. மார்ச் மாதத்திற்கான வங்கி தவணை செலுத்திவிட்டேன். எனக்கு மூன்று மாதங்கள் கழித்து அடுத்த தவணை கட்டலாமா

முடியாது. நீங்கள் 2 மாதம் மட்டுமே நிறுத்தி வைக்க முடியும். ஜூன் மாதம் தவணை கட்ட வேண்டும்.

9. இப்போது நான் வங்கிக்கு கூறினால், வரும் ஏப்ரல் மாதத்திற்கு உண்டான ECS நிறுத்தி வைப்பார்களா?

ECS -யை நிறுத்துவோ புதிதாக பிடிக்கவோ 20 நாட்களுக்கு முன்னரே செயல்படுத்தி வைக்கப்படும். 16ஆம் தேதி வரை உள்ள ECS கண்டிப்பாக பிடிக்கப்படும். ஒருவேளை தங்களது வங்கியில் பணம் இல்லை என்றால் அதற்கான அபராதம், அபராத வட்டி எடுக்கப்படாது. (உடன் செயல்படுங்கள்)

10. நான் பிப்ரவரி மாதம் மாதத் தவணை கட்டவில்லை எனக்கு மூன்று மாதங்கள் தவணை நிறுத்திவைப்பு உண்டா?

இது மார்ச், ஏப்ரல், மே, மாத தவணை களுக்கு மட்டுமே.

அதற்கு முந்தைய தவணைகள் கட்டவில்லை என்றால் கண்டிப்பாக கட்ட வேண்டும். அதற்கு வட்டி மற்றும் அபராதம் உண்டு.

11. நான் பழைய மூன்று மாதத் தவணைகள் செலுத்தவில்லை என்று வங்கி கடிதம், SMS அனுப்பி உள்ளது. இதை நிறுத்தி வைப்பார்களா?

மாட்டார்கள். மார்ச் ஒன்றாம் தேதிக்கு முன்பு மூன்று தவணைகள் பாக்கி இருந்தால் உங்களுக்கு இது பொருந்தாது.

மூன்று தவணைகள் மார்ச் 1 க்கு முன்பே பாக்கி இருந்தால் வங்கிகள் உங்கள் கணக்கை வராக்கடன் (NPA) என அறிவித்து, சட்டநடவடிக்கை மூலம் தங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவோ விற்கவோ உரிமை உண்டு.

அதற்கும் இந்த தவணைகளை நிறுத்தி வைக்கும் அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

12. வங்கி கிரெடிட் கார்ட் வாங்கியுள்ளேன் இந்த மூன்று மாதங்கள் தவணை நிறுத்தி வைப்பார்களா?

ஆமாம். இந்த சலுகை கிரெடிட் கார்டு தவணைகளுக்கும் பொருந்தும்.

13. இந்த மூன்று மாதங்கள் நான் கட்டவில்லை என்றால் எனது சிபில் (CIBIL) ஸ்கோர் பாதிக்கப்படுமா?

இல்லை. இந்த மூன்று மாதங்களுக்கு சிபிலில் CIBIL) எந்த வங்கியும் எந்தக் கடனையும் பற்றி அறிவிக்காது.

14. எனது சொத்துக்களை ஏலம் விடப் போவதாக ஏற்கெனவே வங்கி அறிவிப்பு செய்திருந்தனர். இன்றைய அறிவிப்பினால் எனக்கு ஏதேனும் சலுகைகள் உண்டா?

இல்லை. மார்ச் ஒன்றாம் தேதிக்கு முன்பு மூன்று தவணைகள் பாக்கி இருந்தாலோ அல்லது செயல்படாத கணக்காக (NPA) தங்கள் கணக்கை மாற்றி இருந்தாலோ அது அப்படியே தொடரும்.

இந்த அறிவிப்பினால், உங்களுக்கு எந்தவித சலுகையும் காட்டப்பட மாட்டாது. இது மார்ச், ஏப்ரல், மே மாத தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

15. இந்த சலுகை மூன்று மாதங்களுக்கு மேலும் நீடிக்கப்படுமா?

தெரியாது. அது ஜூன் 1ஆம் தேதியில் தீர்மானிக்கப்படும். அந்த சமயத்தில், கொரோனா நம்மை விட்டு விலகிவிட்டதா, அதன் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டுவிட்டதா, சலுகைகளை நீடித்துக்கொண்டே போனால் வங்கிகள் சமாளிக்குமா என்றெல்லாம் யோசித்து ரிசர்வ் வங்கி அறிவிக்கும்.

16. இந்த வட்டிக்குறைப்பு அனைத்து கடன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா?

இல்லை, இந்த வட்டி குறைப்பு சலுகை, நீங்கள் ரெபோ விகிதத்தை அடிப்படையாக கொண்ட வட்டி விகித அடிப்படையில் (RRLR - Repo Rate Linked Lending Rate) கடன் பெற்று இருந்தால் மட்டுமே உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

ஒரு வேலை நீங்கள் எதாவது ஒரு வட்டி விகித அடிப்படையில் கடன் பெற்று இருந்து, இந்த RRLR வட்டி விகிததிற்கு மாறாமல் இருந்தால் உங்களுக்கு இந்த வட்டிக்குறைப்பு மட்டுமல்ல, சில வருடங்களாக வங்கிகள் குறைத்து அறிவித்து வரும் வட்டி சலுகைகளையெல்லாம் இழந்திருப்பீர்கள்.

முக்கியமாக ஒரு 4,5 வருடங்களுக்கு முன்னால் உள்ள எதாவது வட்டி விகித அடிப்படையில் நீண்ட கால கடன்கள், வீடு கடன்கள் பெற்றிருந்தால், மற்றவர்களை விட நீங்கள் இப்போது 3% அதிகம் வட்டி கட்டிக்கொண்டிருப்பீர்கள். உடனே உங்கள் வங்கியை அணுகி RRLR வட்டி விகித அடிப்படைக்கு மாறுங்கள். இதை சரி பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

17. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

மேற்சொன்னதிலிருந்து, கடன் பெற்ற வாடிக்கையாளர்கள்,

தாங்கள் எந்த வட்டி விகித அடிப்படையில் கடன் பெற்றுள்ளோம்?,
தங்கள் கணக்குகள் சம்பந்தமாக வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டியது என்ன?
ECS ஆணைகளை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளதா?
RRLR வட்டி விகித அடிப்படைக்கு மாறிவிட்டோமா என சரிப்பார்க்க வேண்டியது
போன்ற நடவடிக்கைளை உடனே எடுக்க வேண்டியிருப்பதை உணர்ந்திருப்பீர்கள். ( உங்களால் தவணை செலுத்த முடியும் என்று தோன்றினால்கூட, இந்த சலுகையை மறுக்க வேண்டாம்)

உடனே செயல்படுங்கள். தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள்.

ரிசர்வ் வங்கி பணமதிப்பு நடவடிக்கை (demonitsation) சமயத்தில் மாதிரியே மணிக்கொருதரம் மாற்றி மாற்றி அறிவிப்புகளை விடுகிறது. (பணமதிப்பு நடவடிக்கையை மத்திய அரசின் சார்பில் வெற்றிகரமாக செயல்படுத்திய அதே திரு.சசி காந்த தாஸ் தான், இப்பொழுது ரிசர்வ் வங்கியின் கவர்னர்)

அதனால் மேலே உள்ளவை மாறுதலுக்குட்பட்டவை!

சரி, வங்கிகளி்ன் வைப்பு நிதி வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறக்கூடும்?

சிறுசேமிப்பு (SB) கணக்குகள் முதற்கொண்டு, அனைத்து வைப்பு நிதி வட்டி விகிதங்களும் கண்டிப்பாக குறையும். சில வங்கிகள் குறைத்து வருகின்றன.

இப்பொழுதுதான் அறிவிப்பு வந்ததினால் பல வங்கிகள் வைப்பு நிதி வட்டி விகிதங்கள் குறித்து முடிவெடுக்க சில நாட்கள் ஆகும்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள ரெப்போ வட்டிவீத வழிமுறை (REPO Rate Mecahnism) என்றால் என்ன, அதற்கும் மற்ற வங்கிகளின் வட்டி நிர்ணயத்திற்கும் என்ன தொடர்பு? விரைவில் பார்க்கலாம்.

தலைக்கீழ் ரெப்போ வட்டிவீதம் (Reverse Repo Rate) என்று கூட ஒன்று இருக்கிறது!

விரைவில் பதில் தருகின்றேன்

என்றும் அன்புடன் சிவக்குமார் ..

WHATSAPP  NO .....9944066681....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக