சனி, 11 ஏப்ரல், 2020

மாதவி ! 
இந்த குவாரண்டைனில் சில சினிமாக்களை பார்த்திருந்தாலும் சலங்கை ஒலியை தூசுதட்டி பார்ப்பதற்கு ஒரே காரணமே இருந்தது. அந்த காரணம் தமிழ் இந்துவில் எஸ்.ராவின் சலங்கை ஒலியை பற்றிய திரைபார்வையை கடந்த மாதத்தில் படித்தது. ஒரு கைதேர்ந்த சமையல்காரன் சமைக்கும்போது வரும் வாசனை எப்படி பசியே இல்லாதவனுக்கு கூட சாப்பிட தூண்டுமே... அதை போல் எழுதியிருந்தார் இப்படத்தை பற்றியும்.
எஸ்.ரா இப்படத்தை எழுதாத முன்பும் சலங்கை ஒலியை பார்த்திருக்கிறேன் அதெல்லாம் சினிமா பற்றிய புரிதல் இல்லாத காலம். 'வந்தாய் கோபாலனே' பாட்டில் தலைசிறந்த நடனகலைஞனை டப்பாங்குத்து ஆடி வசூல்ரீதியாக ரசிப்பார்களே.. அந்த டப்பாங்குத்து ரசிகனின் பார்வையில் தான் நானும் பார்த்திருக்கிறேன். ஒரு முதிர்ந்த மனநிலையில் ஒரு சினிமாவோ புத்தகமோ நம்முடைய பார்வையில் நுழையும்போது தான் அதன் முழு பரிணாமமும் புலப்பட ஆரம்பிக்கிறது. சலங்கை ஒலியை பொறுத்தவரையில் கமலை பற்றி அனேகம்பேர் அலை அலையாய் பேசி ஓய்ந்திருப்பார்கள். அவரை பற்றி ஏதோ ஒன்றை சொல்ல ஆரம்பித்தால் அது லட்சம்பேர் கூடி பேசிய ஒன்றாகதான் இருக்கும். அந்த பட்டியலில் நானும் ஒருவனாகி போவதில் விருப்பமில்லை. ஆனால், கமலுக்கு நிகராக படத்தில் யாருமில்லை என்று சொல்லிவிடாதபடி கடைசி காட்சி வரையில் சவால் கொடுத்தது மாதவி என்கிற ஜெயப்ரதா!
மாதவி என்கிற கேரக்டரை ஒரு ஆணின் எந்த வயது காலகட்டத்தில் நினைத்து பார்த்தாலும் உள்ளுக்குள் காதல் பூக்கும். அந்த கேரக்டரை வடிவமைத்து வைத்திருந்த தோற்றம் அப்படி. எப்போது தலை நிறைய மல்லிகைப்பூக்களுடனும் நெற்றில் ஒரு முழுநிலவின் தோற்றத்தில் ஸ்டிக்கர் பொட்டும், நேர்த்தியாக கட்டப்பட்ட ஜோர்டன் புடவையோடு கையில் ஒரு கேமராவுடன் திரியும் பெண்ணின் மீது எந்த ஆண் வாசனை கொள்ளாமல் இருக்க முடியும்?
இப்படம் வெளிவந்த எண்பதுகளின் காலகட்டத்தில் ஒரு திருமண பந்தம் முறிந்த ஒருத்தி கேமரா, நடனம், இசை, புத்தகம், கட்டுரையாளர் என்றெல்லாம் பொழுதுபோக்கிற்கு சுதந்திரமாக சுற்றியிருக்க முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் சொந்த வாழ்வில் தோல்வியுற்ற ஒரு பெண் அவ்வளவு சுதந்திரமாக நடமாடினாள் என்று காட்டினாலும் கொஞ்சம் மாதவி கேரக்டரை ஆராய்ந்தால் அவளின் உணர்வுகள் எங்கேயும் மதிக்கப்பட்டதாக உணர முடியாது.
தன் அப்பாவின் மூலம் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை ஏற்றிருப்பாள். சொத்துக்களுக்காக தன்னை கைவிட்ட தன் கணவன் மூலமாக ஒரு ஏமாற்றத்தை சந்தித்திருப்பாள். ஒரு கட்டத்தில் பாலுவை நேசிக்க தொடங்கும் போது அவளின் விருப்பமோ சம்மதமோ எதையும் கோராமல் பாலுவே தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்து மாதவியை பழைய திருமண உறவில் சேர்த்து அவன் மூலம் ஒரு நிராகரிப்பை பெறுவாள். இறுதியாக பாலுவின் மீதிருக்கும் நேசத்தை சரிவர புரிந்துகொள்ளாத மகளின் மூலமாக ஒரு அவமானத்தையும் பெறுவாள். இப்படியாக ஒரு வசீகரமான மாதவி கடைசிவரையில் எவ்வித மகிழ்ச்சியையும் பெற்றிடாதவளாகவே வாழ்வில் தனியே நிற்பாள். எத்தனை வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தாலும் விரும்பிய வாழ்வு கிடைக்காமல் போவது ஒரு சாபமில்லையா!
மாதவி என்கிற பெயரே தியாகத்திற்கு உதாரணமானது. அதை சிலப்பதிகாரத்தில் ஒரு சாரர் கண்ணகியின் மீதான அதீத பக்தியில் மறுத்தார்கள். அதைபோல் சலங்கை ஒலியில் பாலுவின் துயரத்தில் மாதவியின் தியாகத்தை மறந்துவிட கூடாதல்லவா! என்பதே என்னை இவ்வளவு எழுத வைத்தது.
https://youtu.be/w9o0fA8LAdE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக