செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கேள்வி :..மனைவி யின் காதலில் தோல்வியடைந்தவர்கள் ஏன் மீண்டும் இன்னொருவரை காதலிக்க தயங்குகின்றனர்?

என் பதில் ..

நான் ஏன் இரண்டாவதாக யாரையும் காதலிக்கவில்லை என்று எனது மனநிலையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். முதலில் காதல் தோல்வியை யாரும் நகைப்புக்குரிய விஷயமாக பார்க்க வேண்டாம். ஒருவன் ஒருவரின் மீதான நம்பிக்கையை இழக்கும் தருணம் உண்மையிலேயே அதிக வலி தரக்கூடியது. அதனை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பலர் காதல் தோல்வி இப்படி இருக்கும், அப்படி இருக்கும், கஷ்டமாக இருக்கும் என்று கூறினாலும் அவர்கள் கூறுவதை விட 100 மடங்கு வலியை மனதில் சுமந்து கொண்டிருப்பர். ஒருவருடைய வாழ்க்கையை காதல் தோல்வியானது தலைகீழாக புரட்டிப்போடும் வல்லமை படைத்தது. ஒருவர் அதனை எந்த முறையில் எடுத்துக் கொள்கிறார் என்பதிலேயே, வாழ்க்கையில் நல்வழி படுகிறாரா, இல்லை தீயதை நோக்கி செல்கிறாரா என்பது அமையும்.

என்னதான் காதல் தோல்விக்குப் பிறகு பலர் நான் சிங்கிளாக உள்ளேன், இப்பொழுதே சுதந்திரமாக, சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறினாலும், ஏதோ ஒரு சின்ன சின்ன நிகழ்வுகளில், அவர்களுடைய நினைவுகள் உங்களுடைய அனுமதி இல்லாமலேயே உங்களை ஆட்கொள்ளும். அதிலும் முதல் காதல் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று.

ஏன் பெரும்பாலும் இரண்டாம் காதல் செய்யத் தயங்குகிறார்கள் என்றால், அவர்களுடைய எண்ணங்களில் ஆட்கொண்டிருக்கும் முதல் காதலின் வடுக்களே. காயங்கள் சிறிது காலத்தில் ஆறினாலும் வடுக்கள் நீங்கா இடம் பிடிக்கின்றன.

முதல் காரணமாக நான் கூற விரும்புவது, சூடு கண்ட பூனை மறுபடியும் விளக்கினைத் தொடத் தயங்கும் என்பதே.

பின்னர் முதல் காதலில் இருக்கும் உண்மைதன்மை, சுவாரஸ்யம் இரண்டாம் காதலில் இருக்காது. இரண்டாம் காதலன் காதலியோடு ஏற்படும் நிகழ்வுகளை முதல் காதலோடு நிச்சயம் நமது மூளையானது ஒப்பீடு செய்யும். முதல் காதலில் செய்த தவறுகளை இரண்டாம் காதலில் செய்யக்கூடாது என்று அனைத்துமே சிந்தித்து செயல்படச் செய்யும்.

முதல் காதலில் உள்ள சுவாரசியமே, எதைப்பற்றியும் சிந்திக்காமல் வெள்ளந்தியாக செய்வதுதானே? கணக்கீடுகள் செய்து, சிந்தித்து, ஒரு சில நிபந்தனைகளை வகுத்து காதல் செய்வதற்கு சும்மாவே இருந்து விடலாம்.

பின்னர் ஏன் அனைவரும் இரண்டு மூன்று காதல்கள் செய்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா என்று கேட்டால், பேரின்பம் இல்லை என்றாலும் சிற்றின்பத்திற்கு மனிதன் இசைந்து கொடுக்கத்தானே செய்வான்.

எனக்கு அந்த வெள்ளந்தித்தனம் வேண்டும்.

முதல் சந்திப்பின் சுவாரஸ்யம் வேண்டும்.

என்ன பேசுவதென்றே தெரியாத அந்த படபடப்பு வேண்டும்.

கண்கள் மட்டுமே உரையாடிக்கொள்ளும் அந்த சமிஞ்சை மொழி வேண்டும்.

அரைகஜ இடைவெளியில் விட்டுவிட்டு உரசும் கைகளின் தீண்டல்கள் வேண்டும்.

வலி சற்றும் தெரியாமல் வெகுநேரம் நடந்துசெல்லும் பாதைகள் வேண்டும்.

இருகரம் பிடிக்க, எதுவேணும் செய்யலாம் என்ற அந்த துணிச்சல் வேண்டும்.

மனதிலும் எண்ணத்திலும் முழுமையாய் ஆட்கொண்டிருக்கும் அந்த நினைவுகள் வேண்டும்.

வேண்டும்! வேண்டும்! அத்தனையும் வேண்டும்.

முதல் காதலின் கிளர்ச்சி நிலை வேண்டும்.

முதல் காதலின் மனநிலை வேண்டும்.

இதனை விட்டு விட்டேனே, முதல் காதலின் சீண்டல்கள், தீண்டல்கள் முத்தங்கள் அத்தனையும் வேண்டும், அப்படியே வேண்டும்….

இது இரண்டாம் காதலில் கிடைக்குமா?

என்னைக் கேட்டால், இரண்டாம் காதல் எப்போதுமே இரண்டாம் பட்சமே. இப்படி பேசுகிறாயே, இன்னொருவரை காதலோ கல்யாணமோ செய்து கொள்ள மாட்டாயா என்று கேட்டால். நிச்சயம் செய்வேன். எனக்கே தெரியும், இரண்டாம் காதலில் முதல் காதலை விட என்னால் ஆயிரம் மடங்கு அன்பினை வெளிப்படுத்த முடியும் என்று.

நன்றிகள் பல😊..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக