சனி, 4 ஏப்ரல், 2020

கடைநிலை ஊழியர் -கல்யாணி ...


இன்று, அலுவலக வேலையின் கடைசி நாள். பழைய நினைவுகளில் உழன்ற மனதை, கடிவாளம் போட்டாள், கல்யாணி.
கண் இமைக்கும் நேரத்தில், காலம் ஓடி விட்டதை நினைத்து, பெருமூச்சு வந்தது.
''வா, கல்யாணி... இன்னைக்கு தான் கடைசி நாளா... எதுக்கும் கவலைப்படாத, இங்கே இருந்து போயிட்டமே, எந்த உதவியும் கிடைக்காதேன்னு நினைச்சிடாதே... உனக்கு எந்த உதவி வேணும்னாலும் வந்து கேளு... நம் எம்.டி., செய்வாரு,'' என, ஆறுதலாக சொன்னார், கலியமூர்த்தி.
நிஜம் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவள், இந்த அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்து, 22 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
இந்தியா முழுக்க கிளைகளை கொண்ட கட்டுமான நிறுவனம், அது. அதில், பியூனாக இருந்தான், அழகேசன். ஒரு விபத்தில் அவன் உயிரிழக்க, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் நின்றாள், கல்யாணி.
இனம் புரியாத வயதில், மூன்று குழந்தைகள். அவர்கள் வளரும் வரை, வருமானமும், பாதுகாப்பும் தேவை. அதற்கு வழியற்று நின்றாள், கல்யாணி.
அவள் நிலை கேள்விப்பட்டு, அதே நிறுவனத்தில், கடைநிலை ஊழியராக வேலை தந்தனர். இன்று, பெண்கள் எல்லா வேலைகளும் செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
அவளும், வேலையில் எந்த குறையும் வைக்கவில்லை. ஒரு மகளை படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் முடித்து கொடுத்தாள். இரண்டு மகன்களில் ஒருவன் தவறி போக, இன்னொருவனை, படிக்க வைத்து, வேலையிலும் அமர்த்தி விட்டாள்.
இதோ, இன்றோடு பணி நிறைவு; மாலையில், பிரிவு உபசார விழா; சின்னதாய் தேநீர் விருந்தும், நினைவு பரிசும் தருவதாக ஏற்பாடு.
கல்யாணியின் அதிர்ஷ்டம், இன்று, வேறொரு நிகழ்ச்சிக்கு வரும்,
எம்.டி., மாலையில், இந்த விழாவில் கலந்து கொள்வதாய் ஒப்புக்கொண்டிருந்தார். அதனால், இந்த விழா மேலும் கவனம் பெற்றது என்றே சொல்லலாம்.
''நிஜத்துல நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி தான், கல்யாணி. இல்லைன்னா, உன் பிரிவுபசார விழாவுக்கு வலிய வந்து, கலந்துக்கிறார்,
எம்.டி., இந்த சந்தர்ப்பத்தை தவற விடாம, என்ன வேணும்ன்னு கேளு... முதலாளி ரொம்ப இளகின மனசு படைச்சவர்.
''கம்பெனி, உனக்காக ஒதுக்கி வச்சிருக்கிற பணத்தை விட, நிறைய தர சொல்வார். ஆனா, நீ பேசுறது, மனச தொடறா மாதிரி இருக்கணும். அதை மட்டும் மறந்துடாத. அப்பதான் உனக்கு நன்மை,'' என்றார், கலியமூர்த்தி.
கல்யாணிக்கு எதுவும் தோணவில்லை. அவளுக்கான தேவைகள் அதிகமில்லை. எப்போதும் பணத்தை மட்டுமே சிந்திக்கவும், அவள் பழகவில்லை. கேட்க வேண்டும் என்றால், நிறைய இருக்கிறது.

மாலை -
கல்யாணிக்கு பிரிவு உபசாரம் என்பதை விட, அந்த விழாவுக்கு,
எம்.டி., வருகிறார் என்பதே, பெரும் பேச்சாக இருந்தது.
'எதுக்கும் அதிர்ஷ்டம் வேணும், கல்யாணி. போன மாசம், அசிஸ்டென்ட் மேனேஜர், சதாசிவம் ஓய்வுப்பெற்று போனாரு; அதுக்கு கூட, எம்.டி., வரல. ஆனா, உனக்கு வர்றாரு. வேற வேலையா தான் அவர் இங்கே வர்றாருன்னாலும், உனக்காக, இந்த விழாவுல தலை காட்டிட்டு போறதை, இந்த ஆபீசே பொறாமையா தான் பாக்குது...' என, ஆளாளுக்கு குமைந்தனர்.
எம்.டி., - மேனேஜர் வரிசையில், கல்யாணிக்கும் நாற்காலி போடப்பட்டது. அவர்களுக்கு சமமாக அமர கூச்சமாகத்தான் இருந்தது.
''கிட்டத்தட்ட, 22 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் அலுவலகத்தில் கடைநிலை ஊழியரா, ஒரு பொண்ணா நின்னு கல்யாணி ஜெயிச்சிருக்காங்கன்னு தான் சொல்லணும். அவங்க, பணியில எந்த குறையும் சொல்ல முடியாது.
''ஒரு ஆண், தன் வேலையில் எவ்வளவு வேகமும், ஆற்றலும் காட்ட முடியுமோ, அதைவிட அதிகமா செய்ய முடியும்ன்னு நிரூபிச்சிருக்காங்க. அதுக்கு நாம, அவங்களுக்கு மரியாதை செய்யணும்,'' என, மேனேஜர் பேசியதும், கரவொலி எழுந்தது.
கண்களில் நீர் திரையிட, எழுந்து, கை கூப்பினாள்.
'யாரும், எதையும் கத்துக்கிட்டு வேலைக்கு வர்றதில்லை; இவங்களும் அப்படித்தான். ஆனா, கத்துக்கிடணும்கிற இவங்களோட வைராக்கியம், இப்போ இருக்கிற இளைஞர்களுக்கு வரணும். இவங்களை நம்பி ஒரு பொறுப்பை தந்ததில், எந்த குறையும் இல்லாம நிறைவேத்தி இருக்காங்க...' என, பலவிதமான பாராட்டுகள்.
நிச்சயம் இதற்கு எல்லாம் தகுதியானவள் தான் கல்யாணி. அவளின் உண்மையான, நேர்மையான உழைப்பிற்கு, இந்த பாராட்டு தகும்.
கல்யாணியை, சில வார்த்தைகள் பேச அழைத்தனர். இருக்கையில் இருந்து ஜாடை செய்தார், கலியமூர்த்தி.
விரும்பியதை முதலாளியிடம் சொன்னால் மறுக்க மாட்டார் என்பதால், ஒரு நொடி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தியபடியே, ''எல்லாருக்கும் வணக்கம். என்னை பேசச் சொன்னால், எனக்கு என்ன தெரியும்... ஆனா, உங்க எல்லார் மத்தியிலும் பேச, கடைசியா கிடைச்ச வாய்ப்பு இது. இதை நான் தவற விடக்கூடாது.
''களிமண்ணை அழகான பொம்மையா வார்க்கிற, பெருமையான இடம் மாதிரி, என்னை இந்த இடம் உருவாக்குச்சு. ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன். என் புள்ளைங்களை படிக்க வச்சு, கல்யாணம் பண்ணி கொடுத்து, வேலைக்கும் அனுப்பிட்டேன்.
''என் கடமையை சரியா செய்ய, இதைவிட பக்க துணையா, என் தாய் - தகப்பன் கூட, உதவி இருக்க முடியாது. இதோ, இன்னைக்கு, முதலாளி இங்கே வந்து, என் இத்தனை வருஷ உழைப்புக்கு ஒரு அங்கீகாரத்தை தந்துட்டாரு. எனக்கு இங்கே எந்த குறையும் இல்லை,'' என்ற கல்யாணியின் கண்களில் நிறைந்திருந்த நீர், ஆனந்தமாய் அவள் கன்னங்களில் கோடிட்டது.
''இதப் பாருங்கம்மா... உங்க உழைப்பிற்கான ஓய்வுத் தொகையும், ஓய்வூதியமும் கம்பெனி தரத்தான் போகுது. அதை மீறி, உங்க மேல இருக்கிற நல்ல அபிப்ராயத்தால கேட்குறேன். உங்களுக்கு இன்னும் ஏதாவது வேணுமா?'' அன்போடு கேட்டார், எம்.டி.,
''வேணாங்கய்யா... நிறைவா தோணும்போதே போதும்ன்னு நிறுத்திடணும்... தக்க இடத்துல நிறுத்த தவறின வண்டி, சரியான இலக்கை போய் சேராதுன்னு, எங்கய்யா சொல்லுவாக,'' என்றாள்.
''வாவ்...'' தன்னை மறந்து சத்தமிட்டார், எம்.டி.,
''ஆனா, எனக்கு ஒரு விண்ணப்பம். நிர்வாகத்துக்கு மட்டுமில்லீங்க, இங்கே இருக்கிற எல்லாருக்கும் தான். பியூன் கல்யாணி, இந்த இடத்துல பட்ட அவமானம் இல்ல; கல்யாணிங்கிற சக மனுஷி பட்ட வலிங்க,'' என்று, மெல்ல பேசியவளை, அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
அப்படியென்ன கேட்க போகிறாள் என்ற வியப்பு.
''ஐயா, 22 ஆண்டுகளாக இங்கே வேலையில இருக்கேன். கல்யாணிங்கிற பியூன் செய்த வேலைகளை அங்கீகரிச்சுருக்காங்க... ஆனா, கடைநிலை ஊழியரா, கல்யாணியை யாரும் அங்கீகரிக்கல...
''ஆமாங்க, என்னை மாதிரி வேலை பாக்குற எத்தனையோ கடைநிலை ஊழியம் பண்ற மனுஷங்களோட வலி இது... வீட்டுலயோ, இல்ல வேலையிலயோ ஏதாவது, 'டென்ஷன்' இருந்தா, எங்க மேலதான் எரிஞ்சு விழுவாங்க... ஏன்னா, நாங்க, பதிலுக்கு யாரையும் அலட்சியம் பண்ண முடியாதுங்கறதால...
''அந்த மாதிரி நாள்ல எல்லாம், ஜாதி கொடுமையை விட, பணிக் கொடுமை பெருசுன்னு, என்னை கலங்க வச்சிருக்கு. இனிமே, இந்த இடத்துக்கு யார் வந்தாலும், அவங்ககிட்ட உங்க கோபத்தை காட்டாதீங்கய்யா...
''முன்னொரு சமயம், எச்.ஆர்., சார் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு போயிருந்தேன். விசேஷம் முடிஞ்சு கிளம்பும்போது, 'வீட்டை சுத்தம் பண்ணிட்டு போங்க கல்யாணி'ன்னு சொன்னாரு. அப்போ தான் தெரிஞ்சது, அந்த இடத்திலயும் என்னை, பியூன் கல்யாணியா தான் பார்த்திருக்காரு, விருந்தாளியா பார்க்கலைன்னு...
''இன்னொரு முறை, அசிஸ்டென்ட் மேனேஜர் வீட்டு கல்யாணத்துக்கு போயிருந்தேன். எல்லாரையும் போல நானும் மொய் வெச்சேன். ஆனா அவரு, என்னை கூப்பிட்டு, கவரை கையில தந்து, 'நீங்களே பாவம், கல்யாணி... மொய்யெல்லாம் வேணாம்... முடிஞ்சா கூடமாட இருந்து உதவி பண்ணிட்டு, போகும்போது, நிறைய சாப்பாடு, பலகாரம் மீதமாகி இருக்கு, எடுத்துட்டு போங்க'ன்னாரு.
''மத்தவங்கட்ட, இதை நான் சொன்னப்போ, எல்லாரும் அவரின் குணத்தை பாராட்டுனாங்க. நான் மட்டும் தான், வலியோட வேதனையை அனுபவிச்சேன். அவருக்கு, 60 ஆயிரம் சம்பளம்ன்னா, எனக்கு, 10 ஆயிரம். ஆனா, அந்த சம்பளத்துல வாழ்றதாலயே நான், கை ஏந்திட்டு தான் இருக்கணும்ன்னு, ஏன் அவர் யோசிச்சார்...
''எனக்கும் நாலு இடத்துக்கு போகணும், கவுரவமா மொய் செய்யணும்ன்னு ஆசை இருக்க கூடாதா... அலுவலகத்துல இருந்து வந்தவங்களை விட, நான் தந்த கவர்ல வேணா காசு குறைவா இருந்திருக்கலாம். அதுக்காக என்னோட அன்பும், கவுரதையும் குறைவா இருக்கும்ன்னு எப்படி முடிவு செய்யலாம்...
''நமக்கு மேல வேலை பார்க்கிறவங்ககிட்ட இருந்து பணமும், கீழே இருக்கிறவங்ககிட்ட இருந்து உடல் உழைப்பும் மட்டும் தான் வேணும்ன்னு, சொல்றது என்ன நியாயம்,'' எனக் கூறி முடிக்க, சம்மட்டியை எடுத்து தலையைப் பிளந்தது போல் இருந்தது,
எச்.ஆர்., உட்பட அனைவருக்கும்.
''அது மட்டுமில்லீங்க, சில ஆண்டுக்கு முன், என் மூத்த புள்ளை தவறிட்டான். உடனே, நம் ஆபிஸ்ல இருந்து நிறைய பண உதவியும், விடுப்பும் குடுத்தாங்க. அதை நான் மறக்கவே மாட்டேன். ஆனா, அந்த நேரம், என் வீட்டுக்கு, கடைநிலை ஊழியர்கள் ரெண்டொருத்தரை தவிர, யாரும் வரல.
''அதுக்கு பிறகு, நான் ஆபிஸ் வந்தப்ப, யாரும் என்னை விசாரிக்கல; நான் அவங்க டேபிளுக்கு வேலையா போனப்ப தான், என்னாச்சுன்னு கேட்டாங்க... அதேநேரம், இதே ஆபிஸ்ல வேலை செய்ற ஒருத்தரோட அம்மா இறந்தப்போ, அத்தனை பேரும் அங்கே போனாங்க.
''இதெல்லாம் மனசுல வச்சுகிட்டு, கிளம்பிப் போகும் போது எல்லாரையும் நான் குத்திக் காட்டறேன்னு நினைக்க வேண்டாம். இதெல்லாம் நான் மாலையா கோர்த்து வச்சது, யார் கழுத்துலயும் போட்டுட்டு போகவும் இல்லீங்க. இந்த கூடத்துல மாட்டி வச்சுட்டு போகத்தான் ஆசைப்படறேன்...
''ஏன் தெரியுமா, நாளைக்கு இந்த இடத்துக்கு வர்ற கடைநிலை ஊழியரோட தன்மானத்தை, யாரும் மறுபடி கீறிப் பார்க்க கூடாது இல்லையா... படிச்சவங்க, படிக்காதவங்க எல்லாரும் தான் வேலை செய்றோம். படிப்புல வேணா வேறுபாடு இருக்கலாம். ஆனா, தன்மானம்கிறது எல்லாருக்கும் பொதுதானேங்க...
''அலுவலகத்தை தவிர மத்த இடங்கள்லயும், எங்களை கடைநிலை ஊழியராவே நடத்தாதீங்க... எங்களை மாதிரி கடைநிலை ஊழியர்களுக்கு மரியாதை கொடுங்கன்னு, நான் கேட்க மாட்டேன். ஆனா, எங்களையும் சக மனுஷங்களா மதிப்பு கொடுங்க... இதுதான்க என்னோட விண்ணப்பம்,'' என, கை எடுத்து கும்பிட்டாள்.
சில வினாடி, அங்கே அமைதி நிலவியது. பிறகு அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.

அது, அவளின் பேச்சுக்கு கிடைத்த பாராட்டல்ல, கருத்து வலிமைக்கும், அதில் இருந்த உண்மைக்கும் என்பது, கல்யாணிக்கும் புரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக