வியாழன், 16 ஏப்ரல், 2020

கேள்வி :....ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைகளைப் பற்றி விளக்கம் தர முடியுமா?


பதில் :.....

நமக்கெல்லாம் பணம் தருவதற்கு என்று ரிசர்வ் வங்கியிடம் பணக் கொள்கை எதுவும் இல்லை.

வேண்டுமானால், அதற்கு நமது ‘அண்ணனிடம்’ மனுக் கொடுத்து, அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.

எச்சரிக்கைகள்:
இந்த பதிவை ஒரு முறையாவது முழுமையாக படியுங்கள். முடிந்த அளவு எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது.
வழக்கம் போல் கடைசியில் ஒரு கிளைமாக்ஸ் இருக்கிறது .
ரிசர்வ் வங்கி எனபது நாட்டின் அமைப்புகளில் தலையானது.
அதன் மதிப்பை குறைப்பதுபோல் நாம் பேசக்கூடாது. அப்படி யாரும் பதிய வேண்டாம்.

 இந்திய ரிசர்வ் வங்கியால் வகுக்கப்படும் நாணயக் கொள்கை (Monetary policy) பற்றியது.

நாட்டின் பொருளாதார காவல்காரர்களில் முதன்மையானது ரிசர்வ் வங்கி. எல்லா நாடுகளுக்கும் ஒரு ரிசர்வ் வங்கி இருக்கும்.
அதன் கொள்கைகளில் முதன்மையானது, நாணயக் கொள்கை.
இந்த நாணயக் கொள்கை, இந்தியாவின் மொத்த பணப் புழக்கம் (money supply), வட்டி விகித நிர்வாகம் (Bench mark interest rates.) இதையெல்லாம் உள்ளடக்கியது.
இதை நிர்ணயிப்பது 'நாணயக் கொள்கைக் குழு'
இந்த குழுவின் கூட்டங்கள் வருடத்திற்கு 4 முறையாவது நடத்தப் படுகின்றன
ஒவ்வொரு கூட்டத்திற்கும் பின்னர் நாணயக் கொள்கை முடிவுகள் வெளியிடப் படுகிறன.


முன்னாடியெல்லாம் நாணயக் கொள்கைக் குழு என்று ஒன்று இந்தியாவில் இல்லை. ரிசர்வ் வங்கி பார்த்து அறிவிப்பதுதான் நாணயக் கொள்கை.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த MPC குழு தான், தற்போது நாணயக் கொள்கையை அறிவிக்கிறது.

இந்த குழுவில், ரிசர்வ் வங்கி உறுப்பினர்கள் 4 பேரைத் தவிர, இன்னும் இரண்டு வல்லுநர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு இருப்பார்கள்.
இது 2016ல் இந்த அரசாங்கத்தால் எடுக்கப் பட்ட ஒரு கொள்கை முடிவு. '
ஓகோ, அதுதான் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்து விட்டு போனாரா?' என்று கம்பு சுற்றுபவர்கள் பொறுக்கவும்

2015ல் இப்படியொரு கமிட்டி வேண்டுமா? என்று பரிசீலிக்க ஒரு கமிட்டியை போட்டார்கள், அந்த கமிட்டிக்கு உர்ஜித் படேல் தான் தலைவர். இப்படியொரு கமிட்டி அவசியம் என்று அந்த கமிட்டியில் உர்ஜித் படேல் தான் சொன்னார். (உஸ் அப்பா)
நாணயக் கொள்கையின் குறிக்கோள்கள் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கையை அவ்வப்போது மாற்றியமைகிறது. ஏன்?
இந்த நாணயக் கொள்கைதான், நாட்டின் விலைவாசி தடுமாறாமல் இருப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை நாடு அடைவதற்கும் பாதை வகுக்கிறது.
ரிசர்வ் வங்கி, தனது வட்டி விகிதங்களை (Policy Rates) கட்டுப்படுத்துகிறது. அடிக்கடி மாற்றுகிறது. ஏன்?
அதன் மூலம் நாட்டின் பண விநியோகத்தை கட்டுப் படுத்துகிறது.
எப்படி?
இது ஒரு ஐஏஎஸ் தேர்வுக்குக்கான வினா. கொஞ்சம் எளிமையாக பார்க்கலாம். இப்போதைக்கு CRR மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.


மற்ற விபரங்களுக்கு Repo, Reverse repo குறித்து விளக்கம் கூற முடியுமா? இதன் பயன்பாடு என்ன? என்ற கேள்வியை தொடருங்கள். மனதில் தைரியம் இருந்தால் TLTRO எனப்படும் நீண்ட கால ரெப்போ செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு கையாளுகிறது? என்ற கேள்வியையும் தொடருங்கள்.


ரிசர்வ் வங்கி அறிவிக்கும் ஒரு வட்டி விகிதத்தின் பெயர் CRR (Cash Reserve Ratio).
CRR - பண இருப்பு விகிதம் என்பது, ஸ்டேட் பேங்க் போன்ற மற்ற வங்கிகள், ரிசர்வ் வங்கியில் கட்டாயத்தின் பேரில் டெபாசிட் பண்ணி வைத்திருக்கும் வைப்புகளின் சதவிகிதம்.(Percentage)
கொரோனா பூச்சி இந்தியாவுக்கு வரும் வரை, இந்த CRR 4%.
ரிசர்வ் வங்கி இதற்கு எந்த வட்டியும் வங்கிகளுக்கு கொடுக்காது.
ரிசர்வ் வங்கி இப்படி 'ஏறக்கட்டி' வைத்திருக்கும் பணம் ரூ .4 லட்சம் கோடி!
ரிசர்வ் வங்கி 27.03.2020 அன்று இதை 3 சதவீதமாக குறைத்து அறிவித்தது. அதாவது ஜஸ்ட் 1%. குறைத்தது.
அடுத்த ஒரு நாளில் ரிசர்வ் வங்கி தன்னிடமிருந்து இந்திய வங்கிகளுக்கு மடை திருப்பி விட்ட பணம் சுமார் ஒரு லட்சம் கோடி!
அதாவது தனது ஒரு சதவீத CRR குறைப்பு மூலமாக , ரிசர்வ் வங்கி சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை (வங்கிகள் மூலமாக) நாட்டிற்குள் தள்ளிவிடுகிறது. எதற்கு?
நாட்டின் பணப்புழக்க அழுத்தத்தைக் குறைக்க.
கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டில் பணப்புழக்கம் ஒரு அழுத்த நிலைக்கு போகும், மக்கள் பாதிக்க படுவார்கள் என்று ரிசர்வ் வங்கி நினைத்தது. காரியத்தை முடித்தது.
இது ஒரு மிக மிக நுட்பமான விஷயம். இந்த நடவடிக்கைக்கு, கமிட்டி உறுப்பினர்களில், ஆறில் இரண்டு பேர் சம்மதிக்கவில்லை!

இதற்கு மேல் இது ஒரு குழப்படி கேஸ். நாமும் இந்த கோட்டை தாண்டி போக வேண்டாம்.

'அப்படியானால், ஆறு மாசத்துக்கு முன்னால அந்த 1.76 கோடி..' என்று ஆரம்பித்து விடாதீர்கள். முதலிலேயே சொல்லிவிட்டேன். ரிசர்வ் வங்கி மதிப்பை குறைப்பதுபோல் நாம் பேசக்கூடாது.

ஆக, நாட்டின் பணப்புழக்கம், மக்களின் வாங்கும் நுகர்வு திறன், பணவீக்கம் போன்ற சில பொருளாதார மாற்றங்களுக்கு ரிசர்வ் வங்கி, தனது வட்டி விகிதங்களை மாற்றுகிறது.
மேலும், ரிசர்வ் வங்கி பலசமயங்களில் 'திறந்த சந்தை செயல்பாடுகள்' (Open Market Operations) என்று நேரடியாக சந்தையில் இறங்கி ஒரு கலக்கு கலக்கும்.
இதையெல்லாம் விட மாறல் சூஸன் (Moral Suasion) என்று ஒன்று இருக்கிறது. (இருங்கள் ஓடிப் போய்விடாதீர்கள், இதோடு படம் கடைசி)
ஒரு அவசர தேவை இருந்தால், ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளை சில கடன் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு, அல்லது தளர்த்துமாறு வலியுறுத்தும்.
கொரோனா வந்ததால் நமக்கெலாம் ஒரு 3 மாசம் EMI தள்ளி போட சொல்லி வங்கிகளை ரிசர்வ் வங்கி சொன்னதுதான் Moral Suasion.
ரிசர்வ் வங்கி நடத்துவது ரொம்ப கஷடம். மிக திறமையாக, கவனமாக, செயல் பட வேண்டும். இதுவரை நமக்கு வாய்த்த ரிசர்வ் வங்கி கவர்னர்கள் சாமர்த்தியசாலிகள்.


ஒரு தன்மான வரலாறு


1991-ல் ரிசர்வ் வங்கி தன் கையிருப்பில் இருந்து, 67 டன் தங்கத்தை, அதாவது, இந்திய தாயின் கழுத்திலிருந்த தங்கத்தை அகற்றியெடுத்து, வெளிநாட்டில் அடகு வைத்து, நாட்டின் மானத்தை மீட்டது. விமானத்தில் தங்கம் ஏற்றப்பட்டு சென்ற அந்த காட்சியை பார்த்த வங்கியின் அதிகாரிகள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்.

அன்று வேறு வழியிருக்க வில்லை. நான்கு வாரங்களில் நாடு திவாலாகும் நிலைமை இருந்தது சமயம். Balance of payment crisis.
சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) எச்சரிக்கை விட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் திரு.யஸ்வந்த் சின்ஹா.
இந்த முடிவால், ஆட்சியில் இருந்த சந்திரசேகர் அரசு கவிழ்ந்தது.
அதே 1991 ஆம் ஆண்டில், நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் திரு.மன்மோகன் சிங். இவர் 1985 வரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர்.
1991-ல் அவர் போட்ட பட்ஜெட், இந்தியாவின் தலைவிதியை மாற்றிய பட்ஜெட்.
சிறிது காலத்தில், நாடு நல்ல நிலைக்கு திரும்பியது. பணத்தை சேர்த்து , கடனை செலுத்தினார்கள்.
அடகு வைத்த தங்கத்தை திருப்பி மீட்டார்கள். தாயின் காலடியில் சேர்த்தார்கள்.
ஆனால் தாய் நாட்டுக்கு வந்த இந்த அவமானத்தை மறக்க வில்லை திரு.சிங். அண்ணாமலை ரஜினி போல நாள் குறித்தார்.
2009-ஆம் ஆண்டு. 18 வருடங்கள் கழித்து, அவர் பிரதமராக இருந்த போது ஒரு நாள்.
இப்போது அதே சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) ஒரு தங்க ஏலம் ஏற்பாடு செய்தது.
அந்த ஏலத்தில் இந்திய பிரதமர் திரு.மன்மோகன் சிங் 200 டன் தங்கத்தை வாங்கினார்!
அடகு வைத்தது போல மூன்று மடங்கு தங்கத்தை விலைக்கு வாங்கினார்!
இந்திய தாயின் காலடியில் அது காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது! இது இந்தியரின் தன்மான வரலாறு

அதே போல், 2005–2008-ல் உலகமே வீட்டு கடன்களை அள்ளி கொடுத்து விட்டு பொருளாதார நெருக்கடியில் கண்ணீர்விட்டபோது, இந்தியா மட்டும் தப்பி பிழைத்தது.

அப்போதைய பிரபல நிதியமைச்சர் (யாரது!) சொன்னதை செய்ய மறுத்து, இரும்பு தூணாக நின்று, அன்றைய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு.ஒய்.வி.ரெட்டி, நாட்டை கைப்பற்றினார்.
எந்த ஒரு ரிசர்வ் வங்கி கவர்னரும், ‘இவர்களால்தான் நிலைமை கை மீறி போய் விட்டது’ என்று சொல்லுமளவுக்கு தவறேதும் செய்ததாக தகவல் இல்லை.

அப்படி கை மீற போவதுபோல எதாவது சமிக்ஞை தெரிந்தால், அவர்கள் கால் கடுதாசி கொடுத்து விட்டு வெளியேறி விடுகிறார்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக