கேள்வி :....எதன் அடிப்படையில் குறைந்த பட்ச மாத இருப்பு தொகை (AMB) என்பதை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன? இது பற்றி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன?
பதில் :.....
கொரோனா வருடம் | 20.04.2020 | வினா விடை அமர்வு |
2017-18 ஆம் ஆண்டில், அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சில முக்கிய தனியார் துறை வங்கிகளும் சேர்ந்து, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக (minimum balance requirement) தங்கள் வாடிக்கையாளர்களிடம் கிட்டத்தட்ட ரூ 5,000 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன!
ஒரு விஷயம்!
வாடிக்கையாளர் வைத்திருக்க வேண்டிய, குறைந்த பட்ச மாத இருப்புத்தொகை எவ்வளவு (Average Monthly Balance - AMB),
அதை பராமரிக்காத போது செலுத்த வேண்டிய அபராதத்தொகை (Penal Charges) எவ்வளவு - இந்த இரண்டையும் நிர்ணயம் பண்ணுவது, ரிசர்வ் வங்கி அல்ல!
இது பற்றி ரிசர்வ் வங்கி சொல்லுவதென்ன?
சேவைக் கட்டணங்களையும், அபராதங்களையும் நிர்ணயிக்கும் முடிவை அந்தந்த வங்கிகளே தீர்மானித்து கொள்ளலாம்.
வங்கிகள் தங்கள் இயக்குநர்கள் குழுவின் முன் ஒப்புதலுடன் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி செய்வது உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால் கணக்கை முடிக்க வேண்டியது தான்!
ரிசர்வ் வங்கி, 2015-ல் வங்கி சேவைகளுக்கு என்று ஒரு மாஸ்டர் சுற்றறிக்கை (Master Circular on Customer Service in Banks) வெளியிட்டிருக்கிறது. இந்த சுற்றறிக்கையில் (1) சேவைக் கட்டணங்களை பற்றி சொல்லியிருக்கிறது
தவிர மற்றொரு சுற்றறிக்கையில் (2) குறைந்தபட்ச இருப்புத் தொகையை நீங்கள் பராமரிக்கா விட்டால், வங்கி அபராதம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்களை கீழ் கண்டவாறு கொடுத்திருக்கிறது:
குறைந்த பட்ச இருப்புத் தொகையை வைத்துக்கொள்ள தவறிவிட்டால் வங்கி என்ன செய்ய வேண்டும்?
வங்கி எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் / கடிதம் என்று ஏதாவது வழியில் வாடிக்கையாளரை நினைவு படுத்த வேண்டும்.
அதாவது இந்த நினைவூட்டல் கடிதம் கண்டு ஒரு மாதத்துக்குள், வாடிக்கையாளர் இந்த ஒப்பந்த குறைபாட்டை சரி செய்ய விட்டால், அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப் படும்.
ஒரு வேளை அந்த ஒரு மாத காலத்துக்குள் வாடிக்கையாளர் வங்கியின் மனக்குறையை சரி செய்து விட்டால்?
வங்கி அபராதம் வசூலிக்க கூடாது.
இயக்குநர்கள் குழுதான் கட்டணங்களை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒரு மாதத்தில் எந்த அளவுக்கு AMB பற்றாக்குறையோ, அந்த அளவுக்குத்தான் அபராதம் வசூலிக்க வேண்டும்.
வேண்டுமானால் எதாவது ஒரு ஸ்லாப் முறை அமைத்துக்கொண்டு அது படி வேண்டுமானால் வசூலிக்கலாம்.
முக்கியமான ஒன்று. இப்படி அபராதம் பிடிக்கிறேன் பேர்வழி என்று உங்கள் கணக்கை எதிர்மறை இருப்புக்கு (negative balance) தள்ளி விட கூடாது.
அபராதக் கட்டணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் இந்தியாவின் பெரிய வங்கி ஒன்று பெரும் பணமுதலைகளுக்கு கொடுத்த கடன்கள் முங்கி போய்விட்டது. அதனால் வந்த நஷடத்தை சரி கட்ட , அந்த வங்கி இந்த அபராத கட்டணத்தை அதிகமாக வசூலித்து தப்பித்து கொண்டது. அதன் இயக்குனர் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் அரசு பதவியில் உள்ளவர்கள் !
ரிசர்வ் வங்கி, நடப்பு கணக்குக்கென்று தனியாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் அனைவருக்கும் ஒரு கணக்கு என்ற திட்டத்தின் கீழ் "அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு" (Basic Savings Bank Deposit Account Scheme) என்று ஒரு வகை சேமிப்பு கணக்கை எல்லா வங்கிகளும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறது.
அந்த கணக்கு தொடங்குபவர்களுக்கு, AMB கட்டணம், ATM கட்டணம் உட்பட, எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது.
இந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தேவை (minimum balance requirement) என்று எதையும் வலியுறுத்த கூடாது
ஆனால், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு' வைத்திருப்பவர்கள், அந்த வங்கியில் வேறு எந்த வகை சேமிப்பு கணக்கையும் தொடங்க முடியாது.
தவிர செயலற்ற கணக்கில் (inoperative accounts) குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததற்காக (minimum balance requirement) அபராதம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லையென்று தனி சுற்றறிக்கையில் (3) சொல்லியுள்ளது.
உங்கள் வங்கியில் வசூலிப்பது பகல் கொள்ளை என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.
இப்போதெல்லாம் வங்கிகளின் டேட்டா சென்டர்களில் (Data Centers) மற்ற வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, நடு இரவுக்கு பின்னர்தான் இந்த மாதிரி வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக