புதன், 29 ஜூலை, 2020

கேள்வி : பிறர் என்னை தவறாக பேசினாலும்,அடித்தாலும் அவரிடம் என்னால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை.மனம் அமைதியை மட்டும் விரும்புகிறது.இதை நான் எப்படி பார்ப்பது?

என் பதில் :


நீங்கள் ஒரு சராசரியான சரியான மனிதர் என்பதை தான் இந்த குணம் காட்டுகிறது.

ஒரு சிறிய உதாரணத்துடன் கூறினால் உங்களுக்கு புரியும் என்று கருதுகிறேன்.

எனக்கு இப்பொழுது வயது 46. எனக்கு 16 வயது இருக்கும்போது ஒரு சிறிய கிரிக்கெட் தகராறு. என்னுடைய நண்பன் ஒருவன் கொஞ்சம் திமிர் பிடித்தவன், மற்றும் பணம்படைத்தவன். வாயில் குதப்பி இருந்த பான்பராக் எச்சிலை என் மூஞ்சில துப்பினான் காரணம் அவனுடைய டீம் எங்க டீமிடம் தோற்று விட்டது.

நண்பர்களுக்குள் கேலியும் கிண்டல்களும் சகஜம்தானே அப்படித்தான் ஆரம்பித்த அந்த விளையாட்டு கொஞ்சம் பெரிதாகி என் மூஞ்சியில் துப்பிவிட்டான்.

எனக்கு கோபம் ஆத்திரம் அவமானம் எல்லாம் ஒன்று சேர அவனை எதிர்க்கவும் முடியாமல் அழுதுகொண்டே தனியாக உட்கார்ந்து விட்டேன்.

சிறுது நேரத்தில் தன் தவறை உணர்ந்து என்னிடம் நூறு தடவைக்கு மேல் மன்னிப்பு கேட்டு இருப்பான். ஆனால் நான் அவனிடம் பேசவே இல்லை.

இந்த சம்பவம் நடந்து 25 வருடம் ஆகியும் அவன் என்னை பார்க்கும்போதெல்லாம் கூனிக்குறுகி தான் பேசுவான்.

ஒவ்வொரு தடவையும் அவன் மனம் வருந்துவதை நான் கவனித்திருக்கிறேன்.

எனக்கும் ரொம்ப வலித்தது.... எப்போது தெரியுமா?

நான்கு மாதம் முன்பு அவன் இறந்து போனான். அப்போது அங்கு குழுமியிருந்த அவனது நெருங்கிய நண்பர்கள் அந்த சம்பவத்தை தான் நினைவு கூர்ந்தார்கள்.

உன் மேல் எச்சில் உமிழ்ந்ததை அவன் ஆயிரம் முறை கூறி வருத்தப்பட்டதாக அவனது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தார்கள்.

நீ அன்றைக்கு நீ அவனை அடித்து இருந்தால் கூட அவனுக்கு அவ்வளவாக வலித்து இருக்காது.

ஆனால் நீ ஒன்றுமே பேசாமல் ஒதுங்கி போய் விட்டதால் அவன் சாகுற வரைக்கும் வருந்தப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள்.

மௌனம் !!


உடலை வருத்தாமல் உள்ளத்தை வலிக்கச் செய்யும் ஒரு ஆயுதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக