வெள்ளி, 24 ஜூலை, 2020

கேள்வி : தங்களது கணவரையோ அல்லது மனைவியையோ நீங்கள் பார்த்த முதல் அனுபவத்தை இங்கே பகிர முடியுமா?


என் பதில் :...என் பதிலைவிட ...ஒரு புதுமையாக இருக்கட்டுமே ..எனக்கு தெரிந்த நண்பர்கள் கேட்டேன் ..இதில் எனது அலுவலக நண்பர் இவாஞ்சலின் சதீஷ்  அவர்களின் பதில்  ..புதுமையாகவும் ..சந்தோசமாகவும் இருந்தது ..



அது மிகப்பெரிய சம்பவம்… இல்லை இல்லை… சரித்திரம். ஏனென்றால் நான் தான் என்னவரை அவர் வீட்டிற்கு என் பெற்றோருடன் மாப்பிள்ளை பார்க்க சென்றேன். ஆச்சர்யமாக உள்ளதா? ஆம்… அது தான் உண்மை. அதற்கு சில முக்கியக் கரணங்கள் உண்டு. ஒன்று.. என் மாமியார் கை கால்கள் செயல் இழந்த நிலையில் சுகவீனமாக இருந்தார். எனவே அவரால் என் வீட்டுக்கு வர இயலவில்லை. இரண்டாவது, என் அப்பாவும் என் மாமனாரும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். நானும் என் கணவரும் சந்திப்பதற்கு முன்னமே திருமணம் முடிவாகி விட்டது. அதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே பெரிய formalities எதுவும் இல்லை.

சரி சம்பவத்துக்கு வருவோம்… எனக்கு அப்போது 22 வயது. ஒரு ஞாயிறு காலை ஆலயம் சென்று விட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றோம். வீட்டருகே சென்றவுடனே எனக்கு ஒரே படபடப்பு. கதவைத் திறந்தது என் கணவர் தான். போட்டோவில் பார்த்ததை விட நேரில் மிகவும் நன்றாக இருந்தார் (நல்லவேளை அப்போ photoshop எல்லாம் இல்லை). என் அம்மாவின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டு வீட்டுக்குள் சென்றேன். என் மாமனாரும் அப்பாவும் மிகவும் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டனர். என் அம்மாவும் என்னை இழுத்துக் கொண்டு என் மாமியார் அருகே சென்று உட்கார்ந்து விட்டார். எனக்கு தான் என்ன செய்வது என்று புரியவில்லை 🙄🙄🙄. சற்று நேரத்தில் காபி, முறுக்கு எல்லாம் வந்தது. எனக்கு படபடப்பில் ஒன்றும் தொண்டைக்குள் இறங்கவில்லை. என் கணவர் என்னிடம் சகஜமாக பேச முயற்சி செய்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்று விட்டார்.

ஒரு வழியாக பிரியாணி விருந்துடன் மாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிந்தது. இப்படி ஒரு நிகழ்ச்சி தமிழ்நாட்டிலேயே… இல்லை… இந்தியாவிலேயே முதல் முறையாக எங்களுக்கு தான் நடந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த சுவாரஸ்யமான கதையை என் 16 வயது மகளிடம் ஒரு நாள் கூறினேன். அவள், "என்னம்மா நீங்க… சினிமால வர்ற மாதிரி அப்பாவை ஒரு பாட்டு பாடவோ இல்லை டான்ஸ் ஆடவோ சொல்லி இருக்கலாம் இல்லை? நீங்க மிஸ் பண்ணிட்டீங்களே…" என்று உச் கொட்ட, "அட எனக்கும் தான் தோணிச்சு… பாவம் உங்க அப்பா பொழச்சு போட்டுமேன்னு விட்டுட்டேன்" என்று நான் பந்தாவாக சொன்னேன். ஆனால் அன்று எனக்கு இருந்த பயம், படபடப்பு… அப்பப்பா… அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் 😀😅😅

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக