காலமானார் கல்வெட்டு ஆய்வாளர் து. சுந்தரம்!🙏🙏😢😢
..கோட்டமங்கலம் வீரக்கம்பம்
ஆங்கிலேயருடன் போராடி வீரமரணம்: பாளையக்காரர்கள் நடுகல்லுக்கு பாதுகாப்பு
ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்த பாளையக்காரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நடுகல், இன்னும் பாதுகாக்கப்பட்டு, 'மாலக்கோவில்' எனும் பெயரில் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்டது சிஞ்சுவாடி. பாளையக்காரர்களின் ஆட்சி செய்த பகுதியாகும். இந்த பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர்கள், ஆங்கிலேயேருக்கு எதிராக போராடி இறந்தவர்கள்.இதன் பின், பாளையத்தை சேர்ந்த பலரும் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இப்பகுதியை ஆட்சி செய்ததற்கு அடையாளமாக இங்குள்ள பெருமாள் கோவில், நடுகல் சான்றாக உள்ளது. இதனை பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பழமையை பறை சாற்றும் இந்த நடுகல் பற்றி வரலாற்று ஆய்வாளர் சதாசிவத்துடன் இணைந்து, கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் ஆய்வு செய்துள்ளார். அப்போது, அவருக்கு கிடைத்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். நடுகல் வழிபாடுகல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: இறந்து போனவர்களுக்கு அவர்களின் நினைவாக கல் நட்டு வழிபடும் மரபு, தமிழகத்தில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதை நடுகல் வழிபாடு என்பர். கால்நடை வளர்ப்பு மிகுந்திருந்த பழமையான சமுதாயத்தில், கால் நடைகளை புலி போன்ற விலங்குளிடமிருந்து காக்கும் காவல்பணியில் ஈடுபட்ட காவல் வீரர்கள் நினைவாக கல் எடுப்பர்.இந்த வகை நடுகற்களில் வீரன் புலியுடன் சண்டையிடும் சிற்பம் இருக்கும். இதை புலிக்குத்தி கல் என்பர். போரில் வீரச் செயல் புரிந்த வீரர் நினைவாகவும் கல் எடுப்பர். இவ்விருவகை வீரர்களின் மனைவியர் உடன்கட்டையேறி உயிரை மாய்த்துக்கொண்டால் வீரர்களுக்கு எடுக்கும் நடுக்கல்லில் மனைவியர் சிற்பம் இடம் பெறும்.இவ்வகை கல் மாசதிக்கல் என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் வீரமாஸ்தி, 'வீரமாத்தி' என மாற்றம் பெற்றது. வீரக்கம்பம்மூன்றாவதாக ஒரு போரில் இறந்து போன வீரர்கள், அவர்களின் தலைவர்கள் என அனைவருக்கும் சேர்த்து போரின் நினைவாக எழுப்பப்படும் நடுகல் வீரக்கம்பம் எனப்படும். இவ்வகை நடுகல் நான்கு சதுரப்பக்கங்களையுடைய ஒரு துாண் வடிவில் பிரித்து, அதில் வீரர்களின் உருவங்களை சிறிய வடிவில் சிற்பங்களாய் செதுக்கியிருப்பர்.ஆண் உருவங்களோடு, பெண் உருவங்களும் கலந்திருக்கும். இவ்வகை நடுக்கல்லை ஊர் மக்கள் 'மாலக்கோவில்' என்ற பெயரில் வழிபடுகின்றனர். பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் இதுபோன்ற வரலாற்று தொடர்புடைய நடுகற்கள் உள்ளன. சிஞ்சுவாடி வீரக்கம்பம்இதுவும் ஒரு துாண் வடிவிலான அடுக்குநிலை நடுகல் வகையை சேர்ந்தது. ஐந்தாறு மரங்கள் சூழ்ந்த ஒரு வெளி, சுற்றிலும் வடிக்கப்படாத குத்துக்கற்கள், துாண்கள் போல அரணாக நின்றுள்ளது.நாட்டார்பாணியில் ஒரு சிறு கோவிலை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இடையிடையே முறையாக வடிக்கப்பட்ட துாண்களும், மூன்று சதுரப்பகுதிகள், இடையில் எண்பட்டைகள் கொண்டவை காணப்படுகின்றன. கோவிலின் சுற்றுச்சுவருக்காக அடுக்கப்பட்ட பெருந்துண்டு கற்களும், சிறு துண்டு கற்களும் ஆங்காங்கே ஒழுங்கின்றி பரவலாக உள்ளன. ஒரு சிறிய மேடையின் மையத்தின் நிறுத்தப்பட்டுள்ள இத்துாண், நடுக்கல்லில் எட்டு அடுக்கு நிலைகளில் மனித உருவங்கள் வரிசையாக நிற்கும் தோற்றத்தில் வடிக்கப்பட்டுள்ளன. ஆண் உருவங்கள், பெண் உருவங்கள் என இனம் காண இயலவில்லை. நாள்பட்ட எண்ணெய் பூச்சே இதற்கு காரணம். தவிர உருவங்களின் மேல் குங்குமப்பூச்சு. ஒன்பதாவது அடுக்கு, துாணின் விமானச்சிகரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.துாணை நெருங்கிய பகுதியில், வேல்கம்புகளும், சூலங்களும், கற்களும் நிறுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சுவருக்கு வெளியிலும், வேல் கம்புகளும், சூலங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மாலக்கோவில் எனும் பெயரில் மக்கள் வழிபாடு செய்கின்றனர். கோட்டமங்கலம், மெட்ராத்தி ஆகிய ஜமீன்களை அடுத்து, சிஞ்சுவாடியிலும் மாலக்கோவில் எனும் துாண் நடுகல் உள்ளது. சிஞ்சுவாடி நடுகல்லும், பாளையக்காரர் காலத்து போர்ச்சூழலை குறித்த நினைவுக்கல் சிற்பம் இது என கருதலாம். வரலாற்றுப்பழமை வாய்ந்த இத்தகை சின்னங்கள் தொல்லியல் துறையின் பொறுப்பில் இல்லாவிடிலும், மக்கள் வழிபாட்டு மரபின் வழியாக பாதுகாக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். இவ்வாறு, அவர் கூறினார்.தென்திருமணஞ்சேரி திருமணத்தடைகள் நீங்குவதற்கு திருமணஞ்சேரி சென்று பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். இந்த கோவிலில் வழிபடுபவர்களுக்கு திருமணத்தடைகள் நீங்குவதால் 'தென்திருமணஞ்சேரி' என அழைக்கப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பலர், இந்தக்கோவிலுக்கு வந்து வழிபட்ட பின், தங்களுக்கு திருமணம் நடந்ததாக தங்கள் கைப்பட எழுதி கோவிலில் வைத்துள்ளனர்.
நன்றி தினமலர் ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக