கேள்வி : இக்காலத்து இளைஞர்களிடம் நீங்கள் கற்றுக்கொள்ள நினைக்கும் விஷயங்கள் எவை?
என் பதில் :..
இக்கால இளைஞர்களிடம்(நானும் 🙋) பிடித்த விஷயங்கள் நிறைய விஷயங்கள் உள்ளன.
சமுதாயத்தில் எதெல்லாம் பேசக் கூடாது என்று கூறி நம்மை வளர்த்தார்களோ அதனைப் பற்றி பேசுவது; பேசுவதோடு மட்டும் நின்று விடாமல் நடைமுறைப்படுத்துவது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் விரும்பிய விஷயத்தை உறுதியுடன் செய்வது. விமர்சனத்திற்கு அஞ்சாமல் துணிந்து பேசுவது; செயல்படுவது.
அதற்கு உதாரணமாய் நான் பார்த்து வியந்த நபர் ரோஷினி என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிரவின் நிகம். புனேவைச் சேர்ந்தவர்.
இவர் இந்த நிறுவனத்தைத் தொடங்கியதற்கு காரணங்கள் உண்டு. இவர் 2011-இல் கல்லூரி பயின்று கொண்டு இருந்தார். ஒருமுறை அஸ்ஸாம் மாநிலத்திற்கு கல்வி சுற்றுலா சென்று இருந்த போது அங்குள்ள கிராமப் பகுதிக்குச் சென்று இருக்கிறார். அங்கு ஒரு பதின்பருவ சிறுமி துணி நெய்து கொண்டு இருந்தாள்.
அவளிடம் சென்று பள்ளிக்குச் செல்லவில்லையா என்று அவர் கேட்க, அதற்கு அவள் தன்னைக் கடவுள் தண்டித்து விட்டதாகவும் அதனால் தான் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்றும் கூறினாள்.
அவர் குழப்பத்துடன் அவள் அப்பாவிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு தான் தெரிந்தது, அவள் பூப்பெய்திய நிகழ்வைத் தான் அவ்வாறு கூறினாள் என்று. அந்த ஊரில் எவருமே பெண்கள் பூப்பெய்தி விட்டால் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்களாம்.
அதுமட்டுமின்றி அவளுடைய வீட்டில் மாதவிடாய் காலத்தில் துணி தான் உபயோகிப்பார்கள்.
அவள் வீட்டில் மட்டும் அல்ல அந்த ஒட்டு மொத்த ஊருக்கே மாதவிடாய் பற்றி விழிப்புணர்வு இல்லை .சில குடும்பங்களில் மாதவிடாய் காலத்தில் ஒருவர் பயன்படுத்திய துணியைத் தான் அக்குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களும் பயன்படுத்துவார்கள். இவ்வாறு அப்பகுதி மக்கள் மாதவிடாய் சுத்தம் இல்லாமல் மூடநம்பிக்கைகள் கொண்டு இருப்பதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாமையே காரணம் என்று உணர்ந்தார்.
அதன் பின்னர் தனது புனே மாவட்டத்துக்கு வந்த பிறகு மாதவிடாய் பற்றி அறிந்து கொண்டார். இதற்கு முன்பு மாதவிடாய் பற்றி அவருக்கு அவ்வளவாக தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நினைக்கவில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வந்த பிறகு, மாதவிடாய் பற்றியும் அக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள் குறித்தும் அறிந்து கொண்டார். இதுபோல இந்தியாவில் பல பகுதிகள் உள்ளன என்பதையும் அறிந்து கொண்டார்.
பின்னர் தான் வசிக்கும் மாவட்டமான புனேவில் இருக்கும் சேரிப் பகுதிகளைப் பார்வை இட்டார். அங்குள்ள பெண்களுக்கு மாதவிடாய் கால விழிப்புணர்வு உள்ளதா என்று விசாரித்தார். அங்குள்ள மக்கள் இவரைக் கடுமையாக திட்டியதும் உண்டு. சிலர் மனநிலை பாதித்தவர் என்றும் நினைத்தது உண்டு. இருந்தாலும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மேற்கொண்டு விசாரித்தார்.
அங்கேயும் பல பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லை. சுத்தமான கழிப்பிடங்கள் இல்லை. சொல்லப் போனால் கழிப்பிடங்களே இல்லை. மேலும் பல இடங்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் இருந்தன. சில பின்தங்கிய பகுதிகளில் மாதவிடாய் ரத்தத்தைத் தடுப்பது பாவம் என்றும் அப்பகுதி மக்களால் நம்பப் பட்டது. எனவே அவர்கள் மாதவிடாய் இரத்தம் தடுப்பதற்கு துணிகளைக் கூட பயன்படுத்தவில்லை. சிலர் மண்ணையோ சாம்பலையோ பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு பல மூட நம்பிக்கைகள் உள்ள பகுதிகள் உள்ளதை அறிந்தார்.
அதன் பிறகு ஆறு பேர் கொண்ட ஒரு குழுவுடன் ஒரு அமைப்பைத் துவக்கினார். அந்த அமைப்புக்கு தான் அஸ்ஸாம் மாநிலத்தில் சந்தித்த அச்சிறுமியின் பெயரை வைத்தார்.அவள் பெயர் தான் 'ரோஷினி '.இப்படி உருவானது தான் ரோஷினி அமைப்பு.
இந்த அமைப்பின் மூலம் பல பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்று பெண்களுக்கு மாதவிடாய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவார். சுத்தமாக இருப்பதன் அவசியத்தை எடுத்து உரைப்பார். இதனால் இவரை ' Period man of India ' என்று அழைப்பர். ' மாத விடாய் பற்றி பேசுவதே என் பணி ' என்று கூறுவார். இதற்காக இவர் பல துன்பங்களையும் விமர்சனங்களையும் கடந்து வந்துள்ளார்
மேலும் அவரின் குழு அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் சுத்தமின்றி இருப்பதை அறிந்தனர். இவர்களே அதனைச் சுத்தப் படுத்துவர். 6 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட குழுவில் தற்போது 250 தன்னார்வலர்கள் உள்ளனர். மேலும் இதற்காக அவர்கள் யாரிடமும் நன்கொடை வசூலிப்பது இல்லை. அந்த அமைப்பின் தன்னார்வக் குழுவினரே செலவைப் பார்த்துக் கொள்வர்.
இதனைப் பற்றி அவர் கூறும்போது தனக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரோஷினி அமைப்பின் கீழ், பார்வையற்றோர்க்கு உதவுவதற்காக, Readers and Writers project, குழந்தைகளுக்கு வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டிட Kitab express, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக Pink Project போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
நான் முதன் முதலாக ஒரு வார இதழில் இவரைப் பற்றி படித்தேன். மாதவிடாய் பற்றி தெளிவாக ஒரு ஆண் இவ்வளவு தெளிவாக பேசி நான் பார்த்ததில்லை. இவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
உலகம் மிகப் பெரியது. இங்கு நமக்கும் கீழே பல மனிதர்கள் உள்ளனர்.
நமக்கும் மேலே சுயநலம் விடுத்து அர்ப்பணிப்புடன் பல நன்மைகள் செய்வோர் பலர்.
நாம் இச்சமூகத்தில் இருந்து நிறைய பெற்றிருக்கிறோம். நிறைய பலன் அடைந்து இருக்கிறோம். அவற்றைப் பற்றி அறியாமலே ஒரு சமூகப் பிரிவு உள்ளது என்றால் நம்மால் முடிந்த சிறு உதவியாவது அவர்களுக்குச் செய்ய வேண்டும்.
எதிர்பார்ப்பின்றி உழைப்பவரும் உலகத்தில் உள்ளனர்.
நான் அறிந்த ஒரு பிரவின் நிகம் இவர். நான் அறியாமல் தன்னை வெளிக்காட்டாமல் பல பேர் பிறருக்காக வாழ்கின்றனர்.
மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேச பெண்கள் கூட தயக்கம் காட்டுவர்; ஆரோக்கியமான விஷயம் பற்றி பேச, சிந்திக்க பாலினம் ஒரு தடை இல்லை; யார் வேண்டுமானாலும் பேசலாம்.
பிறருக்கு உதவி செய்ய பணமோ படிப்போ ஆட்சியோ அதிகாரமோ தேவை இல்லை; மனம் இருந்தால் போதும்.
நாம் செல்லும் பாதையில் பிழை இல்லை என உணர்ந்தால் , விமர்சனங்கள் கண்டு அஞ்சக் கூடாது .
இவை போல பல விசயங்கள் . நான் இங்கே ஒருவரைத் தான் குறிப்பிட்டு உள்ளேன். இவர் போல பலர் உள்ளனர்.
நான் கல்லூரி படிக்கும் போது தான் இவரைப் பற்றி ஒரு வார இதழில் படித்தேன். அந்த வயதில் எனக்கு இவர் ஒரு ஆச்சர்யமாக இருந்தார். நாம் பொதுவாக சிறு கேலி, கிண்டல்களுக்கே அஞ்சி பல காரியங்கள் செய்யாமல் தவிர்த்து விடுவோம். ஆனால் இவர் பல இடங்களில் அவமானங்களைச் சந்தித்தாலும் தான் எடுத்த விசயம் நல்லது என உணர்ந்து பின்வாங்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
நல்லது என்று மனம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து விட்டால் விமர்சனங்களுக்கு அஞ்சி எடுத்த முடிவில் பின்வாங்கக் கூடாது என்பதே மிக முக்கியமாக இவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக