சனி, 11 ஜூலை, 2020

கேள்வி : உலகில் அதிகம் வருமானம் ஈட்டும் ஐம்பது நிறுவனங்களில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லாததற்கு காரணம் என்ன?
நியாயமான கேள்வி, சும்மா நச்சுனு கேட்டீங்க.

என் பதில் :..இதற்கு பதில் ..என் வெளிநாட்டு வாழ் நண்பர் ரங்கா (அட்லாண்டா ) அவர்களின் பதில் அளித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி ..

இந்த கேள்வியை மூன்று கால கட்டங்களாக பிரித்துக் கொள்ளலாம்:

நிறுவனத்தை தொடங்குதல்,
வளர்த்தல்,
தன் நிலையை தக்க வைத்துக் கொண்டு முன்னேறுதல்.
Ease of Doing Business - அதாவது எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள் என்று உலக நாடுகளை பல காரணிகள் கொண்டு வரிசைப்படுத்துவார்கள்.

2005ல் 116வது இடத்தில் இருந்த இந்தியா மேலும் கீழும் ஊஞ்சல் போல ஆடி, 2018ல் தான் இரட்டை இலக்கத்துக்கு 77 வந்துள்ளது.

இது மேலும் முன்னேறி 2019 ல் 63வது இடம். இது உலக வங்கி அளித்த ரிப்போர்ட்.

நிறுவனத்தை தொடங்குதல்:
ஒரு தொழில் நிறுவனம் தொடங்கும் போது எதிர்கொள்ளும் இடியாப்ப சிக்கல்கள் இருக்கே! அந்தந்த நிறுவனர்களுக்கு தான் தெரியும். என் பேச்சில் நம்பிக்கை இல்லையா?

ரத்தன் டாடாவிடமே கேளுங்கள்.

எல்லா பேச்சு வார்த்தையும் முடிந்து, இடமும் தேர்வு செய்து, மேற்கு வங்கம் சிங்குரில் நானோ பாக்டரி அமைக்க சென்றால்[1], தடாலடியாக ஒதுக்கப்பட்ட நிலத்தில் பிரச்சனை என்று எதிர் கட்சியான தில்லுமுல்லு காங்கிரஸ், மன்னிக்கவும் திரிணாமுல் காங்கிரசின் "நடமாடும் புளி" மம்தா பானர்ஜி தலைமையில், குபீர் போராளிகள் மேதா பட்கர், அருந்ததி ராய், அபர்ணா சென், கவுசிக் சென் என ஒரு கூட்டம் கிளம்பி விட்டது.

விஷயம் இது தான்:

உங்க பிராஜக்ட் வேல்யூ எவ்வளவு? என்ரூ ரஜினியிடம் கேட்ட கேள்வியை டாடாவிடம் முன்னரே கேட்டுள்ளனர். அவர் இந்தியாவின் பாரம்பரிய வழக்கப்படி, ஆபிஸ் ரூமுக்கு அழைத்து சென்று இவர்களை கவனித்திருக்க வேண்டும். சரியாக கவனிக்க வில்லை.

வெறுத்து போன டாடா, வங்கத்துக்கு டாட்டா காட்டி விட்டு குஜராத் சென்று விட்டார். ஆளானப்பட்ட டாட்டாவுக்கே தண்ணி காட்டிய கூட்டமது.

இந்தியாவில் ஒரு தொடக்க நிலை நிறுவனத்துக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் - ரெட் டேப்ஸ் எனப்படும் ஏகப்பட்ட விதிமுறைகள், கெடுபிடிகள், கமிஷன்கள்(டேபிளுக்கு மேலும், கீழும்), லைசன்ஸுகள், ஆட்சியாளர் தவிர கட்டப் பஞ்சாயத்து செய்யும் சில உதிரி கட்சிகள் - பெயர்கள் தான் உங்களுக்கே தெரிந்திருக்குமே!

இதையெல்லாம் மீறி, வலிகளை தாங்கிக் கொண்டு ஒருவர் நிறுவனம் தொடங்கி, அதை டாப் 50ல கொண்டு வரணும்.

அட்லாண்டாவில் எனது நிறுவனத்தை, 2 ஆன்லைன் பாரங்களை (Forms) தகவல்களை பூர்த்தி செய்து, ரிஜிஸ்டர் செய்தேன். நிறுவனத்தின் கடந்த வருடத்துக்கான வருமான வரியை தாக்கல் செய்து விட்டேன். கொரானாவுக்கு முன்பிருந்தே, இன்னும் ஒரு அரசு அதிகாரியையும் நேரில் பார்க்க வில்லை.

நிறுவனத்தை வளர்த்தல்:
ஒரு நிறுவனத்தை தொடங்கி, வாடிக்கையாளருக்கு எப்படி நமது பிராடக்டோ, சேவையோ கொண்டு சேர்ப்பது?

நேரிடையாகவா? ஏஜெண்டுகள் வழியாகவா?
ஏஜென்ட் கமிஷன் எவ்வளவு?
Brand எப்படி நிறுவுவது?
விளம்பரத்துக்கு எவ்வளவு செலவழிப்பது?
Break Even Point வரும் வரையில், ஆரம்ப கட்டத்தில் எவ்வளவு அடி தாங்க முடியும்?


இங்குள்ள நிலையை சொல்கிறேன்: நேரிடையாக வாடிக்கையாளரை அணுக, சொந்த கடை போட இங்கும் ஆயிரம் விதிமுறைகள் உண்டு. எந்த சமரசமும் கிடையாது.

"இத வெச்சுக்குங்க ஆபிசர், கையெழுத்தை போடுங்க!" என்றால் அட்லாண்டா ஜெயில் அனுபவங்கள் கேள்விக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்.

சரி, Retail Giants - பெரிய தலைகளை அணுகலாம் என்றால் எல்லாமே கார்ப்பரேட். ஒருவரையும் நேரிடையாக சந்திக்க முடியாது. நடுவில் ஒரு Third Party ஏஜெண்ட் இருப்பார். அவருக்கு உரிய கமிஷன் தொகையை வெட்ட வேண்டும். லீகல் தான்.

மனம் தளராத விக்ரமாதித்தனாய் முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன். மண்டையில் பத்து முடி குறைந்தது தான் மிச்சம்.

முன்னேறுதல்:
பொதுவாகவே, மெக்காலே மகான் அளித்த கல்வியறிவால் "அப்படியே செஞ்சுடலாம் தொரை!" என்று இந்திய கணக்கு பிள்ளைகளுக்கு கல்லாவில் காசை எண்ணி போடத் தான் விதியிருக்கே தவிர, கல்லா சாவி தொரை கையில் தான்.

என் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, அவனுக்கு ஒரு Project தந்தார்கள்:

அவனே ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும்.
அந்த பொருளுக்கு விலை நிர்ணயித்து, மார்க்கெட்டிங் பேப்பர்கள், யுக்திகள், வாசகங்கள் எல்லாம் தயார் செய்து அவன் சீனியர்களிடம் அதை விற்க வேண்டும்.
அந்த பொருள் மதியம் வரை சரியாக விற்பனை ஆகவில்லையெனில், விலையை மறு நிர்ணயம் செய்யும் யுக்தியும் தெரிய வேண்டும்.
அடுத்த நாள் வரவென்ன, செலவென்ன, லாபமா? நட்டமா? என்று கணக்கும் காட்ட வேண்டும்.
இந்தியாவில், நாம் எங்கே பின் தங்குகிறோம் என்று புரிகிறதா?

இந்தியாவில் மக்களின் மன நிலையை பற்றியும் சொல்ல வேண்டும்.

ஜியோ சிம் குடுக்கும் ஓசி சிம், தினமும் 1 ஜிபி டேட்டா இண்டெர்நெட்டும் வேண்டும், "கார்ப்பரேட் ஒழிக! " என்று இணைய சேகுவேராவாகவும் வலம் வர வேண்டும்.

ஒரு டஜன் குண்டூசி தயாரித்து, தொடர்ந்து ஒரு மாதம் சந்தைபடுத்தி, பொருள் ஈட்டிப் பாருங்கள். ஒரு தொழில் முனைவோரின் சங்கடங்கள் என்னவென்று ஒரு வேளை புரியலாம்.

சீனா பொருட்களை ஒழிப்போம்! என்று கோஷம் போடுவோம், இந்தியாவில் ஒரு நிறுவனர் வெளிநாட்டு பொருளுக்கு மாற்றாக ஒரு செயலியை(ex: JioMeet) கொண்டு வந்தால், நாம் அதை கேலியும் செய்வோம். முரண்பாட்டு மூட்டைகள் நாம்.

இதே மாதிரியான செயலியை ஏன் நம்மில் ஒருவர் உருவாக்கி, கூகிள் பிளே ஸ்டோரில் விடவில்லை?

எந்த ஒரு தொழில் முனைவரும், தம் செயல்பாடுகளை மேம்படுத்தி, அடுத்தடுத்த விஷயங்களில் முதலீடு செய்ய முடியுமா? என்று தொடர்ந்து கள நிலவரத்தை ஆராய்ந்து கொண்டு தான் இருப்பார். அதை பேராசை என்றோ திருப்தியேயில்லை என்றோ சொல்வது நம் முதிர்ச்சியின்மையே.

Entrepreneurship என்பது வேறு மாதிரியான கர்ம யோகம் அது. அதற்கு ஒரு தனி தில் வேண்டும். அடுத்தடுத்து வேறு விஷயங்கள் நோக்கி நம் கவனத்தையும் எனர்ஜியையையும் செலுத்திக் கொண்டே இருப்பவர்க்கு தேவையற்ற சிந்தனைகள் வர வாய்ப்பில்லை.

பின் குறிப்பு: படித்து முடித்ததும், "கார்ப்பரேட் ஒழிக!" என்று சொல்லி விட்டு ஒரு ரூபாய் உங்க வீட்டு உண்டியலில் போடவும். அந்த உண்டியலை திருப்பி பாருங்கள், அதுவும் சீனாவில் இருந்து தான் வந்திருக்கும்.

நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக