புதன், 25 அக்டோபர், 2017

பாறை எண்ணெய் அல்லது பெற்றோலியம்

என்பது புவியில் சில பகுதிகளில் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை எண்ணெய். இவ்வெண்ணெய் நீர்ம நிலையில் உள்ள பல ஐதரோகார்பன்களின் கலவை ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, ஆல்க்கேன்கள் ஆகும். இவற்றின் நீளம் C5H12 இல் இருந்து C18H38 வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை எரிவளி அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், திண்ம நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் நிலக்கரி ஆகும்.

இயற்கையில் கிடைக்கும் பாறை எண்ணெயில் உலோகமற்ற தனிமங்களான கந்தகம், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்றவையும் காணப்படலாம். பொதுவாக இது கறுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.

வரலாறு
பாறை எண்ணெயை முதன் முதலாக 1556 இல் ஜெர்மன் கனிமவியலாளர் ஜியார்ஜியஸ் அகிரிகோலா (Georgius Agricola) என்று அறியப்பட்ட, "கியார்கு பௌவர்" (Georg Bauer) என்பவர் பயன்படுத்தியதாக அவருடைய ஆய்வுநூல் தெரிவிக்கின்றது[1]. ஆனால் 100 ஆண்டுகளுக்கும் முன்னர், மே 26, 1908 ஆம் நாள் பெர்சியாவில், ஒரு பிரித்தானியக் கும்பினி எண்ணெய்க் கிணறு ஒன்றை வெட்டி எண்ணெய் எடுத்ததே[2] இன்றைய பாறை எண்ணெய்ப் பயன்பாட்டுக்கு வழிவகுத்த முதல் நிகழ்வு. "டார்சி” (D'Arcy) என்பவர் 1901 ஆம் ஆண்டு பெர்சிய அரசிடம் இருந்து பெற்ற உரிமத்தின்படி, ஈரானில் எண்ணெய் இருக்கும் இடத்தைத் தேடினர். பணமின்றி அவரது கும்பினி முழுகும் தருவாயில் இருந்தபொழுது, கும்பினியைச் சேர்ந்த ஜியார்ஜ் ரேய்னால்ட்ஸ் (George Reynolds) என்பவர் மஸ்ஜித்-இ-சுலைமான் (Masjid-i-Suleiman) என்னும் இடத்தில் 1,180 அடி ஆழத்தில் தோண்டிய பொழுது, எண்ணெய் குபுக்கென்று மேல் பரப்புக்கு மேலே, 75 அடி உயரமாய் பீய்ச்சி அடித்தது. இக் கண்டுபிடிப்பின் பயனாய் ஆங்கிலோ-பெர்சிய எண்ணெய் நிறுவனம் (Anglo-Persian Oil Co) உருவாகியது. பின்னர் அது பற்பல வடிவங்களில் உருமாறிப் பின் 1954 இல் பிரித்தானியப் பாறை எண்ணெயாகவும் (British Petroleum), அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு ”பி.பி” (BP) ஆகவும் உருப்பெற்றது.

உருவாகும் முறை
பாறை எண்ணெயைக் கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய் என்றும் கூறலாம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரிகள் மடிந்து (மரித்துப்) போன பின், கடல் அடியில் மண்ணுள் புதையுண்டு, அங்கு ஏற்பட்ட அழுத்தத்திலும் வெப்பத்திலும் அழுகி, கோலுரு நுண்ணுயிர்களால் (பாக்டீரியாக்களால்) சில மாற்றங்கள் அடைந்து, சுற்றி இருந்த மண்ணோடும், உப்புக்களோடும் சில வேதிவினைகளின்பாற்பட்டும் இப்படிக் கச்சா எண்ணெயாகவும் நிலத்தடி வளிமமாகவும் மாறுகின்றன. பிறகு உயர் அழுத்தங்களால் புவியின் பாறை வெடிப்புக்களுக்குள் சென்று எண்ணெய் வளங்களாக மாறுகின்றன. அதனாலேயே இன்றும் பல எண்ணெய்க் கிணறுகள் கடல்களின் மீது அமைந்திருக்கின்றன.


பாறை எண்ணெயில் காணப்படும் ஆக்டேன் என்னும் ஐதரோகார்பன் எட்டு கரிம அணுக்கள் கொண்டது. கறுப்பு நிற உருண்டைகள் கரிமத்தைக் காட்டுகின்றன, வெள்ளைநிற உருண்டைகள் ஹைட்ரஜன் அணுக்களைக் காட்டுகின்றன, கோடுகள் ஒற்றைப் பிணைப்புகளைக் காட்டுகின்றன.
மண்ணடியில் இருந்து எடுக்கும் எண்ணெயில் அடங்கி இருக்கும் வேதிப்பொருட்களின் அளவுகள் உருவான சூழலுக்கு ஏற்றாற்போல இடத்துக்கு இடம் வெகுவாக மாறும்

உற்பத்தியும் உச்சமும்

உலகில் பாறை எண்ணெய் பயன்படுத்தும் நாடுகள். நிறத்தின் அடர்த்திக்கு ஏறார்போல பாறை எண்ணெயின் பயன்பாடு இருக்குமாறு வரையப்பட்டுள்ளது.

உலகில் பாறை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்

இற்றையாண்டுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருப்பது சவுதி அரேபியா தான். ஆனால் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவே எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகித்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட தொழில்கள் சிறந்து விளங்கின. இந்த வளமும் போகமும் தொடர்ந்து நிலைக்கும் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இந்த வளமான நிலை எப்போதும் நிலைக்காது என்று 1950 வாக்கில் ஒரு எண்ணெய் வள ஆய்வு நிபுணர் கணித்துக் கூறியிருந்தார். அவர் பெயர் மேரியான் கிங் ஹப்பர்ட் (Marion King Hubbert). பொதுவாக எண்ணெய் கண்டுபிடிப்பு, பயன்பாடு, இவற்றையெல்லாம் வைத்து ஆய்ந்து உருவகப் படுத்தி, ஒரு கணிப்பைச் சொல்லி இருந்தார். ஒரு மணி-வளைவு (bell curve) போல எண்ணெய் வளம் உச்சத்தை (ஹப்பெர்ட் உச்சம், Hubbert Peak) அடைந்து பிறகு குறைந்து விடும் என்று அவர் கணித்தபடியே எழுபதுகளில் எண்ணெய் உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து போனது.


மணி-வளைவைப் பின்பற்றும் எண்ணெய் உற்பத்தி, 1956இல் மேரியான் கிங் ஹப்பர்ட் முன்வைத்தது.
அமெரிக்க எண்ணெய் உற்பத்தியைப் போலவே உலக எண்ணெய் உற்பத்தியும் (உற்பத்தி என்பதே தவறான சொல்லாடல் என்று சிலர் கருதுகின்றனர் - கண்டுபிடிப்பு என்பதே சரி) அதே மணி-வளைவைத் தழுவி இருக்கிறது என்றும், தற்போது அந்த வளைவின் உச்சத்தில் இருக்கிறோம் என்றும் சில ஆய்வாளர்களும் அறிஞர்களும் கருதுகின்றனர் (The End of the Age of Oil). ஆனால் இத்தகைய கணிப்புக்கள் எல்லாம் தோராயமானது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இயற்கையில் இருந்தது அல்லது இப்போது இருப்பது எவ்வளவு என்று கணக்கிட்டதும் ஒரு குத்துமதிப்பான கணக்குத் தான். இருப்பினும் எந்த இயற்கை வளத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதன் அடிப்படையிலும், கண்டுபிடித்து வெளியெடுக்கும் வேகத்தைவிட பயன்படுத்தும் வேகம் அதிகமாய் இருப்பதாலும், இந்த ஹப்பெர்ட் உச்சம் உலக எண்ணெய் வளத்திற்கும் உண்டு என்பது ஒரு வாதம்.

விலை

ஒரு பேரலுக்கு நூற்றிப் பதினேழு டாலர் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் என்பது 42 அமெரிக்க கேலன்கள், ஒரு கேலன் சுமார் மூணே முக்கால் லிட்டர். ஆக, ஒரு பேரல் என்பது சுமார் 160 லிட்டர்கள்.

சில ஆண்டுகளுக்குள்ளாகவே விலை இவ்வளவு தூரம் கூடியும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கும் வழிகளைக் கையாளவில்லை. எண்ணெய்ப் போக்குவரத்துக்குப் பயன்படும் கப்பல்கள் புதிதாய் நிர்மாணிக்கப் படவில்லை. எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலைகள் (refineries) புதிதாகக் கட்டப்படவும் இல்லை. இவை எல்லாமே இந்த எண்ணெய் வளம் குறைந்து வருகிறது என்பதற்குச் சான்றுகள் என்று தங்கள் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார்கள் ஹப்பர்ட் உச்சக் கோட்பாட்டுக்காரர்கள். நிலத்தடியில் இருந்தால் தானே எண்ணெய் உற்பத்தியைக் கூட்ட முடியும். அதனால் தான் விலை உயர்வடைந்தாலும் உற்பத்தி கூடவில்லை என்கின்றனர்.

எதிர்காலம்

எண்ணெய் வளம் குறையக் குறையப் பிற மூலங்களில் இருந்து ஆற்றலைப் பெறும் முறைகள் அதிகரிக்கலாம். வருங்காலத்தில், மக்கட்தொகை அதிகம் உள்ள இந்தியா, சீனா முதலிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் இன்னும் அதிகரிக்கும்.

இன்னும் நுட்பியல் வளர்ச்சிகள் கூடிய எண்ணெய் கண்டுபிடிப்புக்கும் உற்பத்திக்கும் உதவலாம். மீண்டும், ஆற்றல் தேவைகளுக்கு உலகம் கரிக்கும் அணுச்சக்திக்கும் அதிக முக்கியத்துவம் தரக் கூடும். கரிவழி ஆற்றல் மாசு நிறைய உண்டு பண்ணுவது. ஆனால் கரி வளம் இன்னும் நிறைய இருக்கிறது என்று கருதுகின்றனர். இவை தவிரப் பிற புதிய மூலங்கள் மூலமும் ஆற்றாலை உருவாக்கலாம் என்று ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கனடாவின் எண்ணெய்கலந்த மணல்வெளிகள், காற்று, கதிரொளி, கடல் பேரலைகள், ஹைட்ரொஜன் இவற்றில் இருந்தெல்லாம் ஆற்றலை உருவாக்கும் முறைகள் வளரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக