கேள்வி : குழந்தைகளை வளர்ப்பதில் இன்றைய பெற்றோர்கள் செய்கின்ற தவறுகள் என்னென்ன என்று கூறமுடியுமா ?
என் பதில் : ஒண்ணே ஒண்ணு ..கண்ணே கண்ணு ...
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றைக் குழந்தை மட்டுமே உள்ளனர். இப்படி தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எளிதில் வருவதில்லை. அண்ணன் தான் ஓட்டிய சைக்கிளை தனது தம்பிக்கு விட்டுக் கொடுத்தல். அக்கா தான் ஆசையாக வாங்கிய ஒரு அணிகலனை தன் தங்கைக்கு விட்டுக் கொடுத்தல் போன்ற அனுபவங்கள் இல்லாத காரணத்தால் ஒற்றைக் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்து வாழ்வதன் அவசியம் தெரிவதில்லை. விட்டுக் கொடுத்தல், தன் பொருளை கூடப் பிறந்தோருக்கு பகிர்தல் போன்ற குணங்கள் இல்லாமலேயே ஒற்றைக் குழந்தைகள் வளர்கின்றனர். இன்றைய பெற்றோரும் குழந்தைகளிடம் "பிறருடன் உன் பொருளைப் பகிராதே" என்று கூறி வளர்த்து வருகின்றனர். இது சிறிய வயதிலேயே குழந்தைகளின் மனதில் "இது எனது பொருள், இது எனக்கு மட்டுமே சொந்தம்" எனும் ஆதிக்க மனப்பான்மையை ஆழ விதைத்து விடுகிறது.
இன்றைய பெற்றோருக்கு பெரும்பாலும் ஒற்றைக் குழந்தையாக இருப்பதால், அவர்கள் விரும்புவதையெல்லாம் தனது சக்திக்கு மீறி இருந்தாலும் அதை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். அப்படி வாங்கப் பட்ட பொருட்களின் மதிப்பையும், அதை வாங்குவதற்கு பெற்றோர் போட்ட உழைப்பையும் அந்த குழந்தைகள் உணர்வதேயில்லை.
வெற்று கவுரவத்திற்காகவும், பக்கத்து வீட்டு குழந்தை அந்த பெரிய தனியார் பள்ளியில் படிக்கிறது என்பதற்காகவும் தனது குழந்தையையும், தனக்கு வசதி இல்லாவிட்டாலும் தனியார் பள்ளியில் பல லட்சம் செலவு செய்து சேர்ப்பது. இன்றைய அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கப்பெறுகிறது. அரசுப் பள்ளிகளில் படிப்பது தனது குழந்தைக்கு கவுரவக் குறைவு என்று கருதாமல் அங்கே படிக்க வைக்கலாம். வாழ்க்கையையும் சமூகத்தையும் படிக்க அரசுப் பள்ளியை விட சிறந்த பல்கலைக்கழகம் அந்த குழந்தைக்கு வேறு எங்கும் கிடைக்கப் போவது இல்லை.
பாட்டு, யோகா, கராத்தே போன்ற வகுப்புகளில் தனது குழந்தைக்கு ஆர்வமோ, விருப்பமோ இல்லாவிட்டாலும் வெற்று கவுரவத்திற்காக சேர்த்து விடுவது.
பள்ளியில் எடுக்கும் மதிப்பெண், வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்று குழந்தைகளை நம்ப வைப்பது. இது குழந்தைகளை கடும் மன நெருக்கடிக்கு உள்ளாக்கி விடும். உண்மையில் நமது வாழ்க்கையில் அந்த மதிப்பெண்கள் பயன்படப் போவதேயில்லை.
தனது குழந்தை வெளியே சென்று வெயில் உடலில் படுமாறு விளையாட அனுமதிக்காதது.
செல்லிடப் பேசி பயன்பாட்டை குழந்தைகளிடம் ஊக்குவிப்பது.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடாதது.
அதீத கண்டிப்பு எனும் பெயரில் அடித்து வளர்த்தல். அல்லது, அடிக்காமலேயே அதீத செல்லம் கொடுத்து வளர்த்தல். இந்த இரண்டுமே பெரும் தவறுதான். கண்டிக்க வேண்டியவற்றிற்கு கண்டிக்க வேண்டிய அளவில் கண்டித்து வளர்க்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் குழந்தைகள் ஒட்டாத அளவிற்கு வளர்த்தல் தான் அவர்கள் செய்யும் மிகப் பெரும் பிழை. இதனால் குழந்தைகள் அவர்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் நெருக்கம் ஏற்படாமல் போகிறது.
எனது சுற்றத்தில் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் உள்ள பெற்றோரின் வளர்ப்பில் எனக்கு தவறு எனப் பட்டவற்றை மட்டுமே இங்கேக் குறிப்பிட்டுள்ளேன். இதைவிடவும் அதிகமான தவறுகள் இருக்கலாம்.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக