கேள்வி : நீங்கள் அசந்து தூங்கிய மிகவும் பொருத்தமற்ற தருணம் எது?
என் பதில் :
15 வருடங்களுக்கு முன் கார் வாங்கிய புதிது.கோவையிலிருந்து நான் மற்றும் எனது உறவினர் குடும்பத்தினர் என இரண்டு கார்களில் மதுரை சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு மதுரையை சுற்றிப்பார்த்துவிட்டு வர முடிவு செய்தோம்.
அதன்படி முதல்நாள் சென்று அங்குள்ள "அதிசயம்" என்ற தீம் பார்க்கில் அனைவரும் ஜாலியாக விளையாடிவிட்டு மதுரையிலேயே இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் மீனாட்சி அம்மன் தரிசனம் முடித்துவிட்டு பகல் ஒரு மணி அளவில் வீட்டுக்கு திரும்புகிறோம்.
அருமையான வழவழப்பான தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக காரை செலுத்திக்கொண்டு வருகிறேன்.
முதல் நாள் தீம் பார்க் விளையாட்டு¸ இரவு எல்லோருடனும் அரட்டை கச்சேரி அடுத்த நாள் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியது என எல்லாரும் கடுமையான சோர்வில் இருந்தார்கள்.
அதனால் கார் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அனைவரும் தூங்க ஆரம்பித்துவிட்டனர்.
எனக்கும் லேசாக கண் சொக்கியது. இருந்தாலும் நான் மிகவும் ஸ்டெடியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு காரை தொடர்ந்து இயக்கி வந்தேன்.
நான் அவ்வப்போது ஒரு நொடி கண்ணை சட்டென்று மூடி திறந்து கொண்டே வந்தேன். ஏனெனில் தூக்கம் கெட்டதால் உண்டான கண் எரிச்சலுக்கு அது இதமாக இருந்தது.
ஒரிடத்தில் வரும்போது எனக்கு முன்னால் வெகு தூரத்தில் ஒரு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு அதிசயம் நடந்தது.
அது என்னவென்றால் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அந்த அரசு பஸ் திடீரென சாலையில் காணவில்லை. எனக்கு ஒரே ஆச்சரியம்.
என்னடா இது மாயம் என்று மண்டை குழம்பியது.
ஏனெனில் வளைவுகளற்ற சாலையில் வெகு தொலைவில் செல்லும் வாகனங்களைககூட எளிதில் பார்க்கமுடியும் நிலையில் இந்த பஸ் எப்படி கண்ணுக்கெட்டிய தொலைவுவரை காணவில்லை.
அவ்வளவு வேகமாக பஸ் போக சாத்தியமில்லை. ஆனாலும் பஸ் கண்ணுக்கு தென்படவில்லை.
எதேச்சையாய் நான் ரியர்வியூ மிர்ரில் பார்க்கும் போதுதான் தெரிந்தது. அந்த பஸ் எங்கள் காருக்கு பின் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்தது.!
அப்பொழுதுதான் நடந்த அபத்தம் புரிந்தது.
எதேச்சையாக நான் பஸ்ஸை கடந்து செல்ல சில மீட்டர்கள் லேன் மாறிய நிலையில் வழக்கம் போலக் கண்ணை சிமிட்டி இருக்கிறேன் ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக கண்ணைத்திறக்க சில விநாடிகள் என்னை அறியாமலேயே தாமதமாகி இருக்கிறது.
அதாவது சில விநாடிகள் தூங்கியிருக்கிறேன். ஆனால் உள்ளுணர்வு காரணமாக மீண்டும் உடனே கண்ணைத் திறந்துவிட்டேன். ஆனாலும் அதற்குள் கார் வந்த வேகத்தில் பஸ்ஸை ஓவர் டேக் செய்து நூறு மீட்டர்களுக்கு மேல் என்னுடைய கட்டுப்பாடு இல்லாமலேயே ஓடியிருக்கிறது.
இது புரிந்தவுடன் எனக்கு உடல் சில்லிட்டுப்போனது.
உடனே காரின் வேகத்தை குறைத்து ஒரு சர்வீஸ் ரோட்டில் இறக்கி ஒரு மர நிழலில் நிறுத்திவிட்டு அப்படியே ஸ்டியரிங் மேல் சாய்ந்து விட்டேன். அரைமணி நேரத்திற்கு மேல் ஒய்வெடுத்துவிட்டுதான் மீண்டும் வண்டியை கிளப்பினேன்.
குடும்பத்தினரை பார்க்கிறேன் அவர்கள் ஏதுமறியாமல் தூங்கியபடியே உள்ளனர்.
இன்றும் இதை நினைத்தால் நொடி நேரத்தில் என் கவனக்குறைவால் அவர்களை சிதைக்கயிருந்தேனே என்ற குற்ற உணர்வு என்னை வாட்டும்.
கார் டிரைவிங் என்பது சாதாரணமான விஷயமல்ல. அது பயணிப்போர்களின் பாதுகாப்புக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தரவேண்டிய மிக மிக பொறுப்பான ஒன்று. இதில் தவறு செய்தால் ..அவ்வளவுதான். தற்பொழுது எல்லாம் இரவு நேரம் பயணம் ..நீண்ட தூர பயணங்கள் ..என்கிற போது ..முழுமையான ஓய்வு எடுத்துவிட்டு பயணிப்பது என்று முடிவெடுத்தேன் ...
தூக்கம் கெட்டநிலையில் கார் ஓட்டும்போது ஒரே ஒரு விநாடி மூடித் திறந்து கொள்ளுகிறேனே ப்ளீஸ் என்று கண் எப்படி கெஞ்சும் என்பது ஒரு சிலரே உணர்ந்திருப்பர். ஆனால் அதற்கு என்றும் இடம் தரக்கூடாது.!
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக