பாரம்பரிய கலையை காக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு தேவராட்டம், உறுமி சத்தத்துடன் கற்றுத்தரப்படுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், தேவராட்டம் ஆடுவது இன்றும் தொடர்கிறது. தேவர்களால் ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்பட்டு, வேட்டைத்தொழிலை அடிப்படையாகக்கொண்ட சமூகத்தினரின் வாழ்வில் அங்கமாக, இந்த தேவராட்டம் அமைந்துள்ளது.உறுமி மேளமும், காலில் கட்டப்படும் சலங்கையும் இந்த ஆட்டத்தை மெருகேற்றுகிறது. அதேபோல், ஒரே நேரத்தில், இசைக்கு ஏற்ப சீராக கால்களையும், கைகளையும் கொண்டு ஆட்டக்காரர்கள், காண்போரை பரவசமடையச்செய்வர்.
உடுமலை அடுத்த தீபாலப்பட்டி, எத்தலப்பநாயக்கர் தேவாரட்டக் குழுவினர், கடந்த, 10 ஆண்டுகளாக, தேவராட்டம், கும்மி அடித்தல் போன்ற கலைகளை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் பயிற்சி அளித்தும் வருகின்றனர்.ஊரடங்கு காலத்திலும், அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பள்ளி மாணவர்களுக்கு தேவராட்டக் கலை, உறுமி சத்தத்துடன் கற்றுத் தரப்படுகிறது. இப்பயிற்சியில், 15 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.குழுவினர் கூறுகையில், 'பயிற்சியாளர் ராமராஜ், மாணவர்களுக்கு உரிய முறையில் தேவராட்டத்தைக் கற்றுத்தருகிறார். உறுமி வாசிப்பாளர்களாக கிருஷ்ணசாமி, அசோக் குமார், சுந்தர்ராஜ், தயாநிதி ஆகியார் உள்ளனர்.
பாரம்பரிய கலையை காக்கும் வகையில், அடுத்த தலைமுறையினருக்கு தேவராட்டம் கற்றுத் தரப்படுகிறது,' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக