எழுதிவிட்டுக் கடந்துவிடலாம் என்று தோன்றியது.
'அவசரம் இல்லை பொறுமையாகவே கிளம்பி வா' என்று ஊரிலிருந்து அழைப்பு வரவும் அப்பாவுக்கு போன் செய்தேன். கொஞ்சம் லேசான வயிற்றுவலி என்றார். ஆனால் அவருடைய குரலில் லேசான வலி இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் ஊரடங்கு காலத்தில் இருந்த சிக்கல்களை மனதில் கொண்டு சென்னையில் இருந்தவாறே அவருக்கான மருத்துவ வழிகாட்டுதல்களை செய்து கொண்டிருந்தேன். முதல் நாளுக்குப் பிறகு அப்பாவிடமிருந்து போன் எதுவும் இல்லை. அவர் தூங்குகிறார், வெளியே போயிருக்கிறார் இப்படியாகவே பதில் வந்தது. மனதுக்குள் ஏதோவொரு பதற்றம் தொற்றிக் கொண்டது.
அடுத்த நாள் அழைப்பில் அப்பா சைக்கிளில் போன போது மயக்கம் போட்டு விழுந்துவிட்டதாகவும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் சொன்னார்கள். சென்னையிலிருந்து ராணிப்பேட்டைக்கு கிளம்ப வேண்டிய தேவை இருந்தது. ஊரடங்கில் பேருந்துகள் இயங்கவில்லை. இ.பதிவு செய்வதற்கான இணையதளமும் அன்றைய நாளில் முடங்கி இருந்தது. அப்பா நலமென்று உறவுகள் சொன்னாலும் உள்ளுக்குள் இருந்த பயம் நான் எப்படியாவது ஊருக்குப் போயாக வேண்டுமென்றே உணர்த்தியது. தவிர அப்பாவின் குரல் கேட்டு இரண்டு நாட்களுக்கு மேலாகி இருந்தது. அவர் போனை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் புரியாமல் இதயம் வெடித்துக் கொண்டிருந்தது.
நண்பர்கள் சிலர் காரில் அழைத்துச் செல்ல முன் வந்தார்கள்.சென்னையில் நான் இருக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு போவதற்குள் நான் ஊருக்குப் போக வேண்டுமென படபடத்துக் கொண்டிருந்தேன். உறவினர் ஒருவரின் லாரி சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதாக தகவல் கிடைக்கவும் உடனடியாக என் பயணத்தை லாரியில் மாற்றிக் கொண்டேன். லாரியில் போறீங்களா? என்று வருத்தப்பட்டார்கள் சிலர். அது தானே என் அப்பாவின் மூலம் எனக்கு சோறு போட்டு படிக்க வைத்த வாகனம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.
வீடு போய் சேர இரவு 8 மணி. லேசான தூரல் வேறு. தங்கை வீட்டில் படுத்துக்கிடந்தார் அப்பா. இதற்கு முன் அப்படியொரு கோலத்தில் பார்த்ததில்லை நான். கண்கள் அழவும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவரை தொட்டு எழுப்பினேன். 'ஹாஸ்பிட்டல் கூப்பிட்டாலும் வர மாட்டேங்குறார். நீ வந்தா பாத்துக்கலாம்'னு சொல்றார் என புலம்பித் தீர்த்தாள் தங்கை. ஏதோ சாதாரண வயிற்றுவலி என்றுதான் சொன்னார்கள். ஆனால் வந்து பார்த்தால் மிக மோசமான உடல்நிலை பாதிப்பு. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி. விடாமல் விக்கல். கொஞ்சமாக தண்ணீர் கொடுதாலும் வாந்தி.நான் வந்ததைப் பார்த்து அழ ஆரம்பித்தார். உட்கார முடியாமல் பொத்தென்று கட்டிலில் விழுகிறார். கடைசியாக பேத்தியைப் ( என் மகளை) பார்க்க வேண்டுமென ஏதேதோ உளறுகிறார்.
மண்டைக்குள் எதுவும் ஓடவில்லை. உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அவரை சேர்த்துவிட்டு இரவெல்லாம் நான் மட்டும் ஒற்றை ஆளாய் தவித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் இருக்கும் வீடு என்பதால் பாதுகாப்பு கருதி தங்கையை மருத்துவமனைக்கு வர வேண்டாமென சொல்லிவிட்டேன்.
கொரானா காலம் என்பதால் கோவிட் டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் என வந்த பிறகே அட்மிஷன் போட முடியும் என்றார்கள். பிறகு நெகட்டிவ் வந்தது. சிகிச்சைக்குத் தேவையான ஸ்கேன்கள், இரத்தப் பரிசோதனை எல்லாம் முடிந்த பிறகு சிறுநீரக நோய்த் தொற்றின் பாதிப்பு குறித்து தெரிய வந்தது. தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்தார். அதன் பிறகு வீட்டில் இருந்து சிகிச்சை. நேரடியாகச் சிறுநீர் கழிக்க முடியாதென குழாய் இணைப்பு மூலம் பாலிதீன் பையைப் பொருத்தியிருந்தார்கள். முதல் நான்கைந்து நாட்கள் அவருக்கு பாதி அளவில் தான் நினைவிருந்தது. அவர் என்னைத் தவிர வேறு யாரையும் அவருடன் இருக்க விரும்பவில்லை. இறுக்கமாக என் தோள்களை பற்றிக் கொண்டு மெதுவாக நடப்பார். மலம் கழித்தாலும் சிறுநீர் பையை சுத்தம் செய்தாலும் கழிவறைக்குள் நானும் உடன் இருக்க வேண்டும். தினமும் குளிக்க வைத்து உடல் துவட்டி ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அப்பா 72 வயது குழந்தையாகியிருந்தார் எனக்கு. இப்படியே கடந்தன சில நாட்கள். ஊட்டிவிட்டுக் கொண்டிருக்கும் போதே சட்டென வாந்தி எடுத்துவிடுவார். மொத்தமாக சுத்தம் செய்துவிட்டு, ஒரு வாய் சாப்பிட மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருப்பேன். மெதுமெதுவாகவே அவருக்கான சிகிச்சைகள் பலன் கொடுக்க ஆரம்பித்தன.
ஆரம்ப நாட்களில் எதுவுமே அவர் நினைவில் இல்லை. ஒரே கேள்வியை திரும்பத்திரும்ப புரிய வைக்க வேண்டிய அளவுக்கு உடல் சோர்ந்திருந்தார். இரண்டாம் வாரத்தில் அவர் முகத்தில் நல்ல தெளிவிருந்தது. அவருக்குப் பிடிக்குமென தினமும் செய்தித்தாள்கள் வாங்கிக் கொண்டுபோய் படிக்கக் கொடுத்திருந்தேன். இயர்போன் செருகிவிட்டு செய்திச் சேனல்களையும் பழைய பாடல்களையும் போட்டுக் காட்டினேன். அவர் இயல்புக்குத் திரும்பத் திரும்ப நானும் உயிர் பிழைத்துக் கொண்டிருந்தேன்.
ஒருவழியாக மருத்துவ வாசம் கடந்து இயல்புக்கு திரும்பியாயிற்று. இப்போது அவர் பூரண நலம். மறுபடியும் சைக்கிள் எடுத்து ஓட்டக் கூடாதென மன்றாடி சொல்லிவிட்டு வந்துவிட்டேன். வயதாகும் பெற்றோர் நம்மை தாயாக்கி அவர்கள் நமக்குப் பிள்ளைகளாகிவிடுகிறார்கள்.
'நீ மட்டும் வரலைனா இந்நேரம் புல்லு மொளைச்சிருக்கும்' என்றார் கிளம்பும் போது. 'வாயைக் கழுவுப்பா... எவ்ளோ பயமுறுத்திட்டல்ல நீயி..'என்று செல்லமாக கோபிக்கவும் அவர் வாய்விட்டுச் சிரித்தார். இதற்குத் தானே ஆசைப்பட்டேன்.
மருத்துவமனை, காவல்நிலையம், நீதிமன்றம் இங்கெல்லாம் அதிகநாட்கள் போய் வருகிற சோதனை கிடைக்காமல் இருந்தால் போதும். வாழ்க்கை வரமென்று புரிந்து கொண்டேன்.
இப்போது எழுதிக் கடந்துவிட்டேன். இன்றிரவு நிம்மதியாய் கொஞ்சம் இசை கேட்கணும்....
பொன் விமலா .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக