வியாழன், 22 ஜூலை, 2021

 வெள்ளையனைத் தூக்கில்போட்ட பாளையம் .....


ஆம்! 


வெள்ளையன்தான் எண்ணற்ற இந்தியர்களைத் தூக்கில் போட்டிருக்கிறான். சுட்டும் கொன்றிருக்கிறான்.


போரில் பல வெள்ளையர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.


ஆனால் வெள்ளையன் ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் இருந்திருக்கிறார்!


அவர் தான் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள தளி பாளையப் பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையகாரர் எத்தலப்ப நாயக்கர்! 


அங்கு தூக்கிலிடப்பட்ட வெள்ளைக்காரனின் சமாதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது.


ஆதாவது மைசூர் மன்னராக இருந்த திப்பு சூல்த்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்  வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பின்னால் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டு வரும் நோக்கில் பாளையங்களுக்குத் தூதர்களை அனுப்புகிறார்கள்.


அப்படித் தளி பாளையப்பட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரூ கெதிஸ்! 


அப்போது தளிப் பாளையக்காரராக இருந்த எத்தலப்ப நாயக்கர்  வெள்ளையர்களின் வருகையைக் கண்டு கொதித்துப் போனார்.


அவர்களைத் தூதர்களாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிக் கைது செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒருவனை மட்டும் இந்த இடத்தில் தூக்கில் போட்டனர்! 


அந்த இடத்துக்கு இன்றும் தூக்குமரத் தோட்டம் என்று பெயர்.


அந்த வெள்ளையனுக்கு ஒரு சமாதியும் அதன்மேல் கல் சிலுவையும் உள்ளது. 


சமாதியை மூடியுள்ள கல்வெட்டில் அங்கு வெள்ளையன் புதைக்கப்பட்ட விபரம் உள்ளது. 


அந்த இடத்தை விரிவாக ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்று விபரங்கள் கிடைக்கலாம்.


அந்த இடம் வெள்ளையனைத் தூக்கிலிட்டுக் கொன்று புதைத்த இடம் என்று நம்ப நல்ல ஆதாரங்கள் உள்ளன!


முதலாவது அங்குள்ள கல்வெட்டில் வெள்ளையன் புதைக்கப் பட்ட செய்தி உள்ளது. 


இரண்டாவது அந்தக் கல்வெட்டில் ஆங்கிலேயனின் பெயர் உள்ளது. 


மேலும் பலவலுவான காரணங்கள் :  


அந்தக் காலகட்டம் திப்புசூல்தானை வீழ்த்தியபின்னால் ஆங்கிலேயர் அனைத்துப் பாளையங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம்....(ஏறக்குறைய 1800 ம் ஆண்டு) 


அந்தச் சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறு இரும்புத் தடுப்பு வேலை பழைய முறையில் அமைந்துள்ளது. ஆதாவது கொல்லுப் பட்டறையில் செய்யப்பட்டுள்ளது.


கல்வெட்டும் பழைய ஏடுகளில் காணப் படுவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது. 


ஆதாவது எழுத்துக்களில் அதற்குக் கொஞ்ச காலம் முன்னதாக வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அங்கு பின்பற்றப் படாமல் பழைய முறையில் அமைந்துள்ளது. மாற்றம் முழுமையாக அப்போது நடப்புக்கு வரவில்லை போலும்?....


எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள அந்தச் சமாதி மட்டும் ஆங்கிலேயன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது!..


வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னால் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாளையங்களின் அணியில் முக்கியப் பங்கு வகித்தது இந்த இடம் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு ஆகும்! 


வெள்ளையனுடன் நடந்த போரில்தான் எத்தலப்பநாயக்கரும் கொல்லப்பட்டார்!


அந்தச் சமாதியில் அமைந்துள்ள கல்வெட்டில் ஒரு தந்திரமான வாசகமும் உள்ளது.


ஆதாவது வெள்ளையனைத் தூக்கில்போட்ட இடம் என்று இருந்தால் வெள்ளைக்காரர்களால் சிக்கல் வரும் என்று தெய்விகமாகி அடங்கின சமாதி என்று  கல்வெட்டு இருக்கிறது!...


அந்த இடத்துக்குச் சென்று வந்த நமக்கே இவ்வளவும் தோன்றுகிறது என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும். 


அந்தக் கால வெள்ளையர் ஆவணங்கள் ஆராயப் பட்டால் அங்கு தூக்கிலடப்பட்ட வெள்ளைக்காரன் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்!..


பலரும் வந்து பார்வையிட்டாலும் அந்த இடம் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்ற வருத்தம் அந்தப் பகுதி மக்களிடம் ஆழமாக இருக்கிறது!....


சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு துருப் பிடித்துப் போய் உள்ளது. இப்படியே விட்டால் விரைவில் அழியும் வாய்ப்பு உள்ளது.


அதனால் அதன் அடிப்படைத் தோற்றம் மாறாமல் எண்ணைப் பூச்சால் துருப் பிடித்தல் தடுக்கப் படவேண்டியது உடனடிக் கடமை ஆகும். 


அங்கு எடுக்கப்பட்ட படங்கள்.....📚📚✍️✍️



இந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களை ஆவணப்படுத்தி கடந்த 2018 ஆண்டு மே 19 .உடுமலையில் நகராட்சி திருமண மண்டபத்தில் .உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்  மூலம் .கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ,செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களின் தலைமையில் "தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர்" என்ற நூல் வெளியிட பட்டது ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக