திங்கள், 6 நவம்பர், 2017


தினமலர் முதல் பக்கம் Date....05-11-2017...பொது செய்தி தமிழ்நாடு


பாளையக்காரர்களின் சுதந்திர போராட்ட வரலாறு: தொல்லியல் துறை ஆய்வு

உடுமலை:உடுமலை அருகே, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் அழிக்கப்பட்ட பாளையக்காரர்கள் வரலாற்றை கண்டறிய, தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ளது தளி பேரூராட்சி. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன், இப்பகுதி பாளையம், எனப்படும் ஆட்சி முறையின் கீழ் இருந்துள்ளது. எத்தலப்பர் எனப்படும் வம்சாவளியினர் இப்பகுதியை ஆட்சி செய்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் அழிக்கப்பட்டுள்ளனர்.பி.ஏ.பி., திட்டத்தில், திருமூர்த்தி அணை கட்டும்போது, அப்பகுதியில், புதைந்திருந்த எத்தலப்ப மன்னர்களின் சிலைகள், கண்டறியப்பட்டு, பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தளி பாளையம் குறித்து, பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இது குறித்து, 'கம்பள விருட்சம்' எனும் அறக்கட்டளை சார்பில், முதல்வருக்கு, கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, தொல்லியல் துறை சார்பில், ஆதாரங்களை கண்டறிந்து, சுதந்திர போராட்ட வரலாறு குறித்த, தகவல்களை சமர்ப்பிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொல்லியல்துறை கோவை மண்டல ஆய்வாளர்கள், நந்தகுமார், ஆறுமுகம் தலைமையிலான குழுவினர், தளி சுற்றுப்பகுதியில், ஆய்வு நடத்தினர்.காண்டூர் கால்வாய் அருகிலுள்ள சிலைகள், பாலாற்றின் கரையிலுள்ள கல்வெட்டு, ஆங்கிலேய வீரனை எத்தலப்பர் துாக்கிலிட்ட துாக்கு மரத்தோட்டம் உட்பட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கல்வெட்டுகளை படியெடுத்த, குழுவினர், பிற தகவல்களையும் சேகரித்து சென்றுள்ளனர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போரில், தீபகற்ப கூட்டணி என்ற பெயரில், பழநி அருகே விருப்பாட்சி முதல் கேரளா வரையிலான பாளையக்காரர்கள் ஒருங்கிணைந்து போராடியுள்ளனர். இதில், தளி பாளையக்காரர்களும் பங்கேற்று, போரிட்டுள்ளனர். போருக்கு பிறகு, தளி பாளையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களுக்கான ஆதாரங்களை கண்டறியும் வகையில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தியுள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக