புதன், 29 நவம்பர், 2017

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தம் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'பேட் மேன்'
மலிவு விலை நாப்கின்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் வாழ்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 'பத்மன்' படத்தின் போஸ்டரை பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் வெளியிட்டார்.
அருணாச்சலம் முருகானந்தம் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கியுள்ளது
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாகத் திகழும் அக்‌ஷய் குமார் தற்போது கோல்டு, மொகல், பேட் மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் '2.O' படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்நிலையில், அக்‌ஷய் நடித்து வரும் 'பேட் மேன்' படத்தை ஆர். பால்கி இயக்குகிறார். இந்தப் படம் மிலவு விலை நாப்கின்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த தொழில் அதிபரான அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இப் படத்தில் சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம். இசை - அமித் திரிவேதி.
இதையடுத்து 'பேட் மேன்' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'சூப்பர் ஹீரோ வரும் 2018 ஜனவரி 26-ஆம் தேதி வருகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் படத்தின் நாயகி சோனம் கபூரும் படத்தின் போஸ்டரை ரீடுவிட் செய்திருக்கிறார். அதில், மகாத்மா காந்தி கூறிய பொன்மொழியான, 'உலகம் உன்னை கவனிக்க வேண்டுமென்றால் நீ ஒரு மாற்று சக்தியாக இரு' என்பதை குறிப்பிட்டு, 'ஒரு எழுச்சியூட்டும் கதையுடன் பேட் மேன் வரும் குடியரசு நாளில் வெளி வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
உண்மைக் கதையுடன் காமெடி உள்ளிட்ட ஜனரஞ்சக அம்சங்கள் கலந்து உருவாகி வரும் 'பேட் மேன்' திரைப்படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக