ஞாயிறு, 19 நவம்பர், 2017

கற்பனை உலகை காண்பிக்கும் கதைகள்!உயிர் மூச்சாக பாதுகாக்கும் மூதாட்டிகற்பனை உலகை காண்பிக்கும் கதைகள்!உயிர் மூச்சாக பாதுகாக்கும் மூதாட்டி


உடுமலை;'ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. அவரோட உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி பாதுகாப்பாய் இருந்துச்சு,' என குழந்தைகளை கற்பனையும் காவியமும் கலந்த உலகத்துக்கு அழைத்து செல்லும் பாட்டிகள், முற்கால வாழ்வியலின் அடையாளமாக உள்ளனர்.
கதை என்றாலே, குழந்தைகளுக்கு அவ்வளவு பிரியம். அதிலும் பாட்டி சொல்லும் கதைகளில், கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் திகட்டவே திகட்டாது. இப்படிப்பட்ட பாட்டிகளை இனி வரப் போகும், தலைமுறைகள் மிகவும் 'மிஸ்' பண்ணுகின்றனர்.

ஜல்லிபட்டி ஊராட்சியில் உள்ள ஒரு நுாலகத்தில் நடந்த, நுாலக வார விழாவில், குழந்தைகளுக்கு கதை சொல்வதும் ஒரு நிகழ்வாக இருந்தது. பள்ளியின் ஆசிரியர் உடன் இருந்தும், புதிய இடத்தையும், இடம் நிறைய புத்தகங்களையும் பார்த்து, ஆர்வத்தில் இருந்தனர் குழந்தைகள். அங்குமிங்குமாய், அனைத்தையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளை, கதைசொல்லும் நிகழ்ச்சி என்றதும், வரிசையில் வந்து அமர்ந்துகொண்டனர்.
கதைகள் என்றாலே, யானைகளும், பூனைகளுமே நினைவில் வரும் நிலையில்தான் இன்றைய குழந்தைகள் உள்ளனர். யார்தான் யானையையும், பூனையையும் அழைத்துவர போகிறார்கள் என்ற ஆர்வத்தில், இருந்தவர்களின் முன்பு, அமர்ந்தார், 85 வயது, திருமலையம்மாள் பாட்டி.
அடடே, பாட்டி வடை சுட்ட கதையா என குழந்தைகள் கேலிச் சிரிப்புடன் முணுமுணுப்பையும் துவங்கினர். கதைகளம் ஆரம்பமாகியது.

கதை கூறலாம் என பாட்டிக்கு உரக்க சொல்லிய தருணத்தில், புதிர்கதைகளா, வரலாற்று கதைகளா என குழந்தைகளுக்கு 'சாய்ஸ்' கொடுத்தார் பாட்டி.
எள்ளில் பிறந்து, எள்ளில் வளர்ந்த எண்ணெய் செக்கின் மகள், பூவில் பிறந்து பூவில் வளர்ந்த ராஜா என பாட்டி போட்ட புதிருக்கு விடை தெரியாமல் விழித்தனர் குழந்தைகள். அவகாசம் அளித்தும் விடை அறியாமல் தவித்த குழந்தைகளுக்கு புதிரை விடுவித்தார் பாட்டி.
இது, திருமலையம்மாள் ஸ்பெஷல்ஜல்லிபட்டி ஊராட்சியில் நடக்கும், கோவில் விழாக்களில் துவங்கி, ஒரு குழந்தை பிறக்கும் நிகழ்வு வரை, அனைத்திலும் இந்த பாட்டியின் பாட்டு இல்லாமல் இருக்காது.

கதை கேட்டால், மகாராஜா, மகாராணி என்ற கற்பனை கதைகள் மட்டுமில்லாமல், உடுமலையின் உண்மை நிகழ்வுகளாக உள்ள பல வரலாறுகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். தளி பாளையக்காரர், எத்தலப்பர் உள்ளிட்டவர்களின் ஆட்சிக்காலத்துக்கே அழைத்து செல்வார். கருப்புசாமி, அம்மன், விநாயகர் என தெய்வங்களை அழைத்து பாடுவதிலும் வல்லவர்தான் இந்த பாட்டி.

புது மண தம்பதியரை, மணம் முடிக்கும், நிகழ்விலிருந்து, மறுவீடு அழைத்து வரும் வரை, பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் பாடி அழைக்கும், வழக்கம், இன்னும், இக்கிராமத்தில் இருப்பதற்கு, திருமலையம்மாள் பாட்டியும் காரணம்தான்.சடங்கு, தாலாட்டு, ஏறு உழுவது, நடவு செய்வது, திருமணம், என பாட்டியின் கை வசம் பல நாட்டுப்புற பாடல்கள் உள்ளன.
பாட்டிகள் வடை மட்டுமல்ல பல வரலாற்றுகளையும் புதையாமல் கதையாக பாதுகாக்கும் பொக்கிஷங்கள் என்பதற்கு திருமலையம்மாளும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்...

நன்றி :தினமலர் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக