செவ்வாய், 4 மே, 2021

 கேள்வி : புதுமணத் தம்பதியருக்கு நீங்கள் வழங்கக்கூடிய சிறந்த நிதி ஆலோசனை என்ன?


என் பதில் : 


'ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழையலாம். ஆனால் ஒரு பணக்காரனால் இறைமையை உணர முயாது' ,


'எல்லாக் கெட்டதுகளின் பின்புலமும், மோசமானப் பணம்தான்',


'பணக்காரர்களால் நல்லவராக இருக்கவே முடியாது',


'Behind every great fortune. there is a crime'. -இப்படி பணத்தைப் பற்றி நாம் தப்பும், தவறுமாகப் புரிந்துக் கொண்டு, பணம் பற்றிப் பேசுவதில் தயக்கம் கொண்டிருந்த காலங்கள் உண்டு!


அன்று, நானும் அந்த 'சம்பிரதாயக் கருத்து' கும்பலில் ஒருத்தனே !


சில 'நல்லவர்கள்', மற்றும் புத்தகங்கள் மூலமே விவேகத்தைப் பெற்றேன். என் வாழ்க்கையைக் கூறு போட்டுப் பார்த்து, என் எண்ணங்களைச் சீரமைத்துக் கொண்டேன்.


ஒருவரின் சுயமதிப்பு, வெற்றி, வளமை, சமூக நிலை, மன நிம்மதி, செல்வாக்கு, மகிழ்ச்சி இவற்றின் மீது பணம் ஒரு வசீகர ஆளுமையைக் கொண்டுள்ளது என இன்று நான் உணர்கிறேன்.


பணம் இல்லாத நிலை ஒரு இழுபறி வாழ்க்கையையும், கவலை, குற்றவுணர்வு, பயம், மன இறுக்கம், விரக்தியையும் தரும். உடல் நலனும் கெடும். பணம் நமக்கு 7 வது அறிவு போலாகிவிட்டது!


இனி,


நான் பெற்றதிலிருந்து, சில அறிவுரைகள் அல்ல பரிந்துரைகள்!


நீங்கள் சம்பாதிப்பது இருவர் என்றாலும், ஒருவரே என்றாலும் சரி, உங்கள் வருமானத்தின் முதல் செலவு, 15% சேமிப்பாக இருக்கட்டும். 10% பொழுது போக்குச் செலவுகள். 5% எளியோர்க்கு உதவ, (நம் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?) அடுத்தவரை மகிழ்ச்சியாக்க என எடுத்து வையுங்கள்.


உங்கள் ஊதியம், முதலீடுகள், கடன் , காப்பீடு, பங்கு பத்திரங்கள், மாதத்தவணைகள் குறித்து உங்கள் இருவருக்குள் வெளிப்படைத் தன்மை (transparency) இன்றியமையாதது. பேசுங்கள், இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள்.


100 ரூபாய் வருவாயாக வீட்டிற்குள் வந்தாலும் சரி, செலவாகப் போனாலும் சரி அது உங்கள் இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.


பெற்றோருக்குப் பண உதவி செய்வது, கடன் அடைப்பது சார்பாக நிறையப் பிரச்சனைகள் உங்கள் இருவரிடையே வரலாம். திருமணத்திற்கு முன்பே அதைத் தீர்மானித்துவிடுங்கள்.


உங்கள் தேவைகளை அனுசரித்து (budget) வரவு செலவு பட்டியலிடுங்கள். அது பற்றாக்குறைப் பட்டியலாக (deficit budget) இராமலிருக்கட்டும்.


தினமும் இரவு வரவு, செலவு கணக்கு எழுதுங்கள். அது தேவையற்றச் செலவுகளைக் குறைக்க உதவும்.


உடையது விளம்பேல் - உங்கள் நிதி நிலைமையைப் பற்றி வெளியாட்களிடம் தேவை இன்றிப் பேச வேண்டாம்.


என்னை போன்று ,நிதி ஆலோசகர்களை நாடுங்கள். பணம், எப்படி பணம் பண்ணும் என்றுச் சொல்லித்தருவார்கள்.


சமூகத்தில் நீங்கள் நல்லவராக இருக்கவேண்டியது உங்கள் பொறுப்பும், கடமையும் அல்லவா? அது போன்றே பணக்காரர் ஆவதற்கான உரிமையும், தகுதியும் உங்களுக்கு இருக்கிறது என நினைத்துச் செயல்படுங்கள்.


அதற்காக, பணத்தையே பூஜித்துக்கொண்டு இருக்காதீர்கள். அதனிலும் மேன்மையான, விலைக் கொடுத்தும் வாங்க முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு!


பணத்துக்காக அற்ப விஷயங்களில் சமரசம் கூடாது.


பணம் பெருக்கும் முயற்சியில் 'வாழ' மறந்துவிடாதீர்கள்.


பணத்தைத் தேடும் முயற்சியில் நீங்கள் 'காணாமல்' போய்விடாதீர்கள். குடும்பமும், உறவுகளும் அவசியம்!


என்றும் நம் நினைவில் இருக்க வேண்டியவை :


பணம், நமது விருப்பங்களுக்காக வேலை செய்யும் பணியாள், அவ்வளவே!


MONEY IS NOT EVERYTHING! IT'S ONLY A MEANS TO ACHIEVE OUR ENDS / GOALS!


நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக