கேள்வி : நம் கண்முன் ஒரு விபத்து நடக்கும்போது உடனடியாக செயல்பட முடியாமல் திகைத்து நிற்பதற்கான காரணம் என்ன?
என் பதில் :
கேள்வி கொஞ்சம் சரி, கொஞ்சம் தவறு.
ஏன் சரி?
காரில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறீர்கள், டமாரென பக்கவாட்டில் வந்து இடித்து விடுகிறார்கள். கொஞ்சம் ‘ஷாக்’ ஆகி மூளையில் உள்ள நியூரான்கள் குழம்பும், அப்படியே அதிர்ந்து உட்கார்ந்து விடுவீர்கள், எனவே சரிதான்.
ஏன் தவறு?
முதலில் கொஞ்சம் குழம்பினாலும், மூளை உடனே ஆபத்து என ஆபாயமணி ஒலிக்கும், அட்ரினலின் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும்.
‘அட்ரினலின்’ (Adrenaline) ஹார்மோனை Flight or Fight hormone என்பார்கள். விபத்து ஏற்படுத்திய நபரிடம் போய் ‘டேய் இடிக்கறதுக்கு என் கார்தான் கிடைச்சுதா’ என ஆக்ரோஷமாக சண்டையிட வைப்பது -Fight. இடித்த மாத்திரத்தில் அந்தநபர் ஜெட் வேகத்தில் ‘எஸ்ஸாகிவிடுவது’ Flight. இரண்டுக்கும், ஐயா ‘அட்ரினலின்’ தான் காரணம்.
எப்படி மூட்டைப்பூச்சி கடிச்சா, வலியே இல்லாம ரத்தம் போகுதோ, அதேமாதிரி அட்ரினலின் சுரந்தா தற்காலிகமாக வலியே தெரியாம போகும்.
டூவீலர் விபத்துல நிறைய பேருக்கு காலில்/கையில் ரத்தகாயம் ஏற்படும். ஆனாலும் வண்டி ஓட்டிட்டு வீட்டுக்கு வந்துருவாங்க, வலி தெரியாது. வீட்ல வந்து பார்த்தா ரத்தம் இருக்கும், அடுத்தநாள் வலிக்கும். இந்த வலியில்லாத நிலை அட்ரினலின் செய்ற வேலைதான்.
சரி, பெரிய விபத்து, ஆபத்தான நிலைமையில் இருந்து மீண்டு வந்தால்? Post traumatic Stress Disorder, (அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம்) வரலாம். நினைவு இழப்பு வரலாம். கஜினி படம் மாதிரி.
விபத்தால் நினைவு இழந்த ஒரு நபர், ஒரு வழக்கின் தீர்ப்பை முடிவு செய்தார். அந்த முக்கிய சம்பவத்தை ப்ளாஷ்பேக்கலாம் .
ஆகஸ்ட் 1997
இதயங்களின் இளவரசி அவள், பேரழகி.கமீலா என்கிற தோழியோடு உறவில் இருந்துகொண்டு, தனக்கு துரோகம் செய்த கணவனையும், அரச பதவியையும் தூக்கி எறிந்தவள். முன்னாள் கணவனை பழிவாங்குவதாக எண்ணியோ அல்லது உண்மையான அன்புக்கு ஏங்கியோ, சில தவறான உறவுகளிலும் சிக்கிக் கொண்டவள். எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இந்த ஏக்கப்பார்வை,சாந்தமான பேச்சு, மக்களை ‘நம் இளவரசி தூயவள்’ என்றே சொல்லவைத்தன. விவாகரத்தாகி பிள்ளைகளை விட்டு தனியாக வசித்தாலும், அரசி எலிசபெத், சார்லஸ் எல்லாரையும் விட பிரபலமாக இருந்தாள் டயானா. அதற்கு கொடுத்த விலை ‘பேப்பரஸி’ எனப்படும் ‘எங்கு சென்றாலும் தொடரும் அடாவடி புகைப்படக்காரர்கள்’.
அந்த நாள்-
பாரீஸ் ரிட்ஸ் ஹோட்டலில் டயானா, காதலனும் எகிப்திய தொழிலதிபர் டோடி அல் ஃபயீத்துடன் தங்கியிருக்கிறார். இருவரும் பாரில் நன்றாக குடித்து இருந்தார்கள், திரும்ப ஹோட்டல் கிளம்ப யத்தனித்தனர். அவர்களோடு, ஓட்டுநர் பால், டோடியின் மெய்காப்பாளர் ரீஸ் ஜோன்ஸ் இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.
இவர்கள் காரை, பேப்பரஸி படை சிலமைல் தொலைவில் துரத்துகிறது. ஓட்டுநர் பேப்பரஸியை தவிர்க்க வேகமாக ஓட்ட, ஒரு டனலில் கார் கவிழ்ந்து விபத்து. டோடியும், ஓட்டுநர் பாலும் spot out.
டயானாவுக்கு பெரிதாக காயமில்லை என்றனர் முதலில். வரவேண்டிய ஆம்புலன்ஸ் வழக்கம்போல தாமதமாக வந்தது! மருத்துவமனை அழைத்துசெல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காது, டயானா இறந்ததாக அறிவித்தனர்.
இந்த கோர விபத்தில் பிழைத்த ஒரே ஒருவர் மெய்காப்பாளர், ரீஸ் ஜோன்ஸ் மட்டுமே.
இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் இருநாடுகளிலும் பிரிட்டிஷ் அரச குடும்பம்தான் டயானாவை சதி செய்து தீர்த்து கட்டியதாக வதந்தி பரவியது.
டயானா, டோடி மூலம் கர்ப்பமானதாகவும், இது இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு தெரிந்து ‘கவுரவ கொலை’ செய்துவிட்டார்கள் என எல்லாரும் நம்ப துவங்கினர். விபத்துக்கு இருந்த ஒரே சாட்சி ‘ரீஸ் ஜோன்ஸ்’ உயிருக்கு போராடி வந்தார்.
ரீஸ் ஜோன்ஸ் 1 மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு, உயிர் பிழைத்தார். டோடியின் அப்பா, Mohammed al fayed இவருக்கு ஏகப்பட்ட பிரஷர் கொடுத்தார். ம்ஹும், ரீஸ் ஜோன்ஸுக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லை, காரில் ஏறியது, விபத்தானது மட்டுமே நினைவில் இருந்தது.
வலது டிரெவர் ரீஸ் ஜோன்ஸ் (Trevor Rees Jones), இடது டயானா சென்ற கார், பாரீஸில் விபத்தான போது
டோடியின் தந்தை முகமது அல் ஃபயீத், இச்சம்பவமே ஒரு திட்டமிட்ட கொலை, ரீஸிற்கும் இதில் தொடர்பு உண்டு என விசாரணை கமிஷன்முன் வாதிட்டார். ரீஸ் வேண்டுமென்றே நினைவு தப்பியதாக நடிப்பதாகவும், இவரை இங்கிலாந்து ‘secret service’ இயக்குவதாகவும் குற்றம் சுமத்தினார்.
விசாரணை கமிஷன், உளவியல் நிபுணர்களை வைத்து சோதித்தது. Post traumatic stress disorder (PSTD) ஆல் ரீஸ் நினைவு இழந்தது உண்மையே என தீர்ப்பானது. மேலும் இங்கிலாந்து அரச குடும்பத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று விசாரணையை மூடியது.
தப்பிப்பிழைத்த ரீஸ், தனக்கு இருந்த பாதி நினைவுகளை ஒரு புத்தகமாக வெளியிட்டார். இப்போது ஒரு சின்ன ஊரில், sports store இல் வேலை பார்த்து ஜீவனைக் கழித்துக்கொண்டு இருக்கிறார்.
ஆக ஒரு Memory loss ஆன PTSD நபரால் சாட்சியளிக்கப்பட்டு, டயானா இறப்பு, விபத்தாகவே வரலாற்றில் பதியப்பட்டது.
முடிவாக-
விபத்தினால் முதலில் அதிர்ச்சி, பின்னர் அட்ரினலின் பாய்ச்சல், வலிமறக்க செய்யும் நிலை, அட்ரினலின் அதிகமாக சுரந்ததால் வரும் அதீத செயல்பாடு (ADHD), நினைவு இழப்பு (permanent Memory loss), அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் (PTSD), குறிப்பிட்ட சம்பவம் மட்டும் மறப்பது (Selective Amnesia) என உளவியல் ரீதியில் பல பின்விளைவுகள் ஏற்படலாம். விபத்து ஏற்பட்டால், உடம்போடு, மனசையும் உற்றுநோக்குங்கள்!
கேள்வி என்னவோ, ‘ஏன் திகைக்கிறோம்’ என்கிறது. ஆனா, பந்தை ஏரியாதாண்டி அடித்தது விழிப்புணர்வாக இருக்கட்டுமே என்றுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக