சனி, 15 மே, 2021


கேள்வி : ரத்த சொந்தத்திற்குள் திருமணம் செய்யகூடாது என்பது ஏன்?


என் பதில் : 


இந்தக் கேள்வியும் இதற்கான பதிலும் பல சந்ததிகளைக் காப்பாற்றும் சங்கதிகள் கொண்டது.


இந்த கேள்விக்கு வெகுகாலமாக பதில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.


அக்காள் மகளை திருமணம் செய்து கொள்வது, தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைப்பது என இன்றைக்கும் தமிழ்நாட்டில் அதிக அளவில் உறவுகளுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது.


இந்து மதத்தினர் அதிக அளவில் உறவுகளுக்குள் திருமணம் செய்வதை விரும்புகின்றனர். இவ்வாறு உறவுகளுக்குள் திருமணம் செய்வதன் மூலம் பரம்பரையாக வியாதிகள் சந்ததிகளுக்குள் கடத்தப்படுவதோடு புதிது புதிதாக நோய்கள் ஏற்படுகின்றன.


ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் அவர்களின் சந்ததியினர் குறைபாடுடைய மரபணுக்களோடு பிறக்க வாய்ப்புண்டு என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.



வெண்குஷ்டம்


பொதுவாக வெண்குஷ்டத்தைப் பொறுத்தவரை 20,000 நபர்களில் ஒருவருக்குத் தோன்றலாம். ரத்த சொந்த சந்ததியினருக்கு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.



சிறுநீர் குறைபாடு


ஃபினைல்கீடோன்யூரியா (Phenylketonuria) என்னும் சிறுநீரகக் குறைபாடு சாதாரணமாக 25,000 நபர்களில் 1 நபருக்குத்தான் ஏற்படும்.ஆனால் உறவுத் திருமண சந்ததியினைரப் பொறுத்தவரை 25,000 நபர்களில் 13 நபர்களுக்கு இக்குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.



ஜப்பானில் ஆய்வு


ஜப்பானில் மேற்கண்ட ஒரு ஆய்வில் உறவினரல்லாமல் திருமணம் செய்த நபர்களில், மேற்கண்ட குறைபாடுகளால் 1000 பேருக்கு 55 பேர் இறந்துள்ளனர். ஆனால் உறவுத் திருமணத்தால் 116 பேர் இறந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ரத்த உறவுகளில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவ அறிவியல் அறிவுறுத்துகிறது.



ரத்த அழிவு சோகை


தெரிந்தே நாம் செய்யும் தவறுகளால் நம் சந்ததிகளை பாதிக்கக் கூடிய வியாதி தான் ‘இரத்த அழிவு சோகை'. பெரும்பாலூம் இரத்த சோகையைப் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது ஆனால் ரத்த அழிவுச் சோகையைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம்.



தலசீமியா


‘ரத்த அழிவுச் சோகை' என்பது மரபு வழிக்கோளாறால் வரக்கூடிய நோய், இந்நோய்க்கு ‘தலசீமியா' என்று பெயர். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் முடிப்பவர்களின் வாரிசுகளையே இது அதிகம் தாக்குகிறது.


ஆப்பிரிக்க - ஆசிய வம்சாவழியில் வரக்கூடிய குழந்தைகள்தான் ‘தலசீமியா' பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிவப்பு ரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்று சொல்லப்படுகிற ஒரு புரதம். இது தான் ஆக்சிஜனை உடலுக்குள் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லும்.


ஹீமோகுளோபின் அமைப்பு


ஒட்டு மொத்த ஹீமோகுளோபின் அமைப்புகளில் கோளாறு ஏற்படுகிற போது ரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படும். அதன் விளைவாக ஒவ்வொரு செல்லுக்கும் போக வேண்டிய ஆக்சிஜன் தடைபடும். வயிற்றில் உள்ள கரு, பிறந்த குழந்தை, வளர்ந்த பிள்ளைகள் என்று எந்த வயதிலும் இந்த நோய் பாதிக்கலாம்.


வளர்ச்சிக்குறைபாடு


நோய்க்குக் காரணமான குறைபாடுள்ள மரபணு அக்குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது இரண்டு பேரிடமிருந்தும் போகலாம். பிறந்த குழந்தையாக இருந்தால் வயிறு ஊதிப்போவது, கல்லீரலும் எலும்பு மஜ்ஜையும் வீங்குவது, தலை வீங்குவது, இதயம், சிறுநீரகத்தோட செயல் குறைவது, களைப்பு ஏற்படுவது போன்ற பலவித அறிகுறிகள் இருக்கும். அம்மாவோட வயிற்றில் இருக்கும்போதே இந்தப் பிரச்சனை தீவிரமாகி குழந்தையைப் பாதிக்கும் பட்சத்தில், குழந்தை இறந்தே பிறக்கலாம் அல்லது வளர்ச்சிக் குறைபாடுகளோடு பிறக்கலாம்.


ரத்தம் ஏற்றுதல்


பிறக்கும் போதே மஞ்சள் காமாலை அதிகமாக இருக்கும். வேகமான மூச்சிறைப்பையும் பார்க்கலாம். இதற்கான ஒரே தீர்வு மாதம் தவறாமல் அக்குழந்தைக்கு ரத்தம் ஏற்ற வேண்டும். அப்படி ரத்தம் ஏற்றும்போது இரும்பு சத்து அதிகமாகி அதன் விளைவாக வேற பிரச்சனைகள் வராமல் இருக்க மாத்திரைகள் கொடுக்க வேண்டியிருக்கும்.


கருவை கலைக்கலாம்


முதல் குழந்தைக்கு இந்த நோய் இருக்கும் பட்சத்தில் பெற்றோர் மரபணு கவுன்சலிங்கும் பரிசோதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தக் குழந்தைக்கும் நோய் தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.


நோய் தாக்கக்கூடிய ஆபத்து இருந்தால் அடுத்த கர்ப்பத்தைக் கலைப்பதுதான் ஒரே வழி. ஒரு வேளை இரண்டாவது குழந்தைக்கு நோய் ஆபத்து இல்லை என்று தெரிந்தால் அந்த குழந்தையோட ரத்தத்தை முதல் குழந்தைக்கு ஏற்றலாம்.


நெருங்கிய சொந்தம் வேண்டாமே


இரண்டாவது குழந்தையின் எலும்பு மஜ்ஜையை முதல் குழந்தைக்கு செலுத்தியும் குணமாக்கலாம். ஆனால் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் அதிக நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். நெருங்கிய உறவுக்குள் மணம் முடிப்பதைத் தவிர்க்கச் சொல்லி அழுத்தமாக அறிவுறுத்துகிறார்கள்.


சந்ததிகளுக்கு சமாதி


நெருங்கிய உறவுகளுக்குள் மணம் முடிப்பதால் குழந்தைகள் பிறப்பதில் இத்தனை பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அறிந்த பின்பும் உறவுகளுக்குள் திருமணம் முடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.


எனவே அக்காள் மகளை கட்டுகிறேன்... தாய்மாமனை திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று சந்ததியினருக்கு பெற்றோர்களே சமாதி கட்டாதீர்கள்...இது ஒரு விழிப்புணர்வு பதிவு  மட்டுமே ..திருமணம் உங்களின் விருப்பம் ..நன்றி ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக