ஞாயிறு, 2 மே, 2021

 

கேள்வி : மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத வாழ்க்கையின் சில யதார்த்தமான விடயங்கள் என்ன?


என் பதில் : 


இன்று சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் தன் பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுப்பதில்லை.


காதல் திருமணத்தை மட்டும் சொல்லவில்லை.பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையாக இருந்தாலும் அது பெண்ணின் விருப்பமின்றி நடைபெறுகிறது.


இன்று ஓரளவுக்கு மாறினாலும். இன்னும் பெருவாரியான பெற்றோர்களுக்கு அந்த ஏற்றுக்கொள்ளும் தன்மை வரவில்லை. சாதி, மதம், பொருளாதார பிண்ணி அவர்கள் கண்களை மறைத்து விடுகிறது.


பல பெண்கள் கட்டாய திருமணத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அதற்காக பெற்றோர்கள் செய்வதை சரி என்று கூறமுடியாது.


விருப்பமில்லாத திருமண வாழ்க்கையில் நுழைவது நரகத்தை விட கொடுமையானது. அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.


அப்படியென்றால் எல்லோரும் காதல் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. எந்த முறை திருமணமானாலும் அது பெண்ணின் முழு சம்மதத்துடன் நடக்க வேண்டும்.


இன்று தினம் தினம் எண்ணற்ற காதல் ஜோடிகள் காவல் நிலையங்களில் தஞ்சம் புகுகின்றன. அந்தளவுக்கு பெற்றவர்கள் மனதில் வன்மும் வன்முறையும் புதைந்து கிடக்கிறது.ஆனால் பெற்றவர்களே கண்கண்ட தெய்வம் என்று இந்த சமூகம் சொல்லும்.


ஒரு காலத்தில் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. அதை இன்று நினைத்துப் பார்த்தால் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமாக தெரியும். அதைப் போல பின்னாள் வரும் சந்ததியினர் இப்பொழுது நடக்கும் கெளரவக் கொலைகளை பார்த்து ஏளனம் செய்வார்கள்.


ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்து விட்டு இன்னொருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது மிகுந்த மனத்துயரத்தை ஒரு பெண்ணிற்கு கொடுக்கும்.


பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளிடம் சாதகபாதகங்களை சொல்லி புரிய வைக்கலாம்.ஆனால் நிர்பந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஆணுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகள் இருப்பதில்லை.


ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் மிகுந்த பாகுபாடு இருப்பது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.


தன் பெண்பிள்ளைகளின் உறவை முறித்துக்கொண்டு எந்த ஒரு ஒட்டு உறவின்றி எண்ணற்ற பெற்றோர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


அப்படி என்றால் அயோக்கியனை தேர்ந்தெடுத்தால் என்ன செய்வது.? எல்லா பெண்களும் சினிமாவில் காண்பிப்பது போன்று பரதேசிகளையே விரும்புவதில்லை. அது போன்ற சூழ்நிலையை பற்றி இங்கு பேசவரவில்லை. நல்ல மாப்பிள்ளையாக இருந்தும் நிராகரிப்பவர்களைப்பற்றி பேசுகிறேன்.


தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். நீங்கள் சொற்கத்திற்கே சென்றாலும் அங்கு சுதந்திரம் இல்லை என்றால் ஒரு பயனும் இல்லை. அதைப் போலத்தான் நீங்கள் எவ்வளவு அழகான வாழ்க்கை அமைத்துக்கொடுத்தாலும் அதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் எல்லாம் வீண்தான்‌.


காதல் தெய்வீகமானது, புனிதமானது, அழகானது என்று துதிபாட இங்கு வரவில்லை. பெண்ணின் சம்மதமும் விருப்பமும் தான் இந்த பதிவின் மையக்கருத்து.


ஆண்களும் பெண்களும் எத்தனையோ கனவுகளுடன் திருமண பந்தத்தை தொடங்குகிறார்கள். ஆனால் தம் வாழ்க்கைத்துணை வேறுவழியின்றி நம்மை மணக்கிறார்கள் என்று பல பேருக்கு தெரிவதில்லை. உண்மை எப்பொழுதும் ஒளிந்துகொண்டு தான் இருக்கும்‌.


ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதை பல பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.


நன்றி ....வாழ்க்கை வாழ்வதற்கே ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக