செவ்வாய், 5 செப்டம்பர், 2017

என் அன்பு நண்பரின் மணி அவர்களின் அறக்கட்டளை ..எப்படி செயல்படுகிறது ...அவ்பொழுது கேட்டு தெரிந்து கொள்வேன் ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையும் இப்படித்தான் செயல்படவேண்டும் ...என்னுடைய விருப்பம் ....

 

தீராத பயணங்கள்

கீர்த்தி நாராயணனை அழைப்பது என்று முடிவாகியிருந்தது. தொடர்ந்து தொடர்பில் இருப்பவர். கடலூர்காரர். பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் முடித்துவிட்டு மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வருமான வரித்துறை துணை ஆணையராக இருக்கிறார். 
கிராமப்புற ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறோம் அல்லவா? - அது குறித்து தெரியாதவர்களுக்காக- அரசுப் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான பயிற்சி இது. பெற்றோர்களை இழந்தவர்கள், கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள், நாடோடிகளின் குழந்தைகள் என்று பதினாறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் ஒரு பயிற்சி வகுப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுமை மேம்பாடு, மொழி சார்ந்த பிரச்சினைகள், தன்னம்பிக்கை என கலவையான பேக்கேஜ். 
அத்தகையதொரு பயிற்சி வகுப்புக்காகத்தான் கீர்த்தி நாராயணன் வந்திருந்தார். என்ன தலைப்பில் அவர் பயிற்சியளிக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தோம். பல மாணவர்களிடமும் இலக்கு என்பதன் குறித்தான புரிதல் இல்லை. கேட்டால் ‘படிச்சு முடிச்சு வேலைக்கு போகணும்’ என்றுதான் சொல்வார்கள். ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான துறைகள் இருக்கின்றன. அதில் எந்தத் துறை, எந்த வேலை என்பது பற்றிய தெளிவான சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  ‘இந்தத் துறையில் இந்த வேலை’ என்ற தெளிவுடன் இருக்கிற மாணவர்கள் வெகு சொற்பம். கிராமப்புற மாணவர்களிடம் அதைப் பற்றி விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது. அதனால் ‘இலக்கு நிர்ணயித்தல்’ என்பதைப் பற்றி மட்டுமே அவரது பயிற்சி வகுப்பு அமைந்திருந்தது. ஒரு தீக்குச்சியை உரசி வீசுவது போலத்தான். அதிலிருந்து அவர்கள் வெளிச்சம் பிடித்துக் கொள்வார்கள்.
கோழிக்கோட்டிலிருந்து ஈரோடு வரைக்கும் தொடரூர்தியில் வந்திருந்தவர் ஈரோட்டிலிருந்து அரசுப் பேருந்து ஏறிவிட்டு அழைத்திருந்தார். ‘கவர்ண்மெண்ட் பஸ் நின்னுச்சு ஏறிட்டேன்..’ என்றார். ‘இங்க வாங்க சாப்பிட்டுக்கலாம்’ என்றால் ‘பஸ் ஸ்டாண்டிலேயே சாப்பிட்டுட்டேன்’ என்றார். புரிந்து கொள்ளவே முடியவில்லை. துணை ஆணையர் தகுதியில் இருக்கும் ஒருவர் அரசுப் பேருந்தில் ஏறி, பேருந்து நிலையத்தில் உணவை உண்டுவிட்டு பயிற்சி வகுப்புக்கு வருகிறார் என்றால் எப்படிப் புரிந்து கொள்வது? அரசுத்துறையில் எவ்வளவோ மனிதர்களைப் பார்க்க நேர்கிறது. அலுவல் உதவியாளாராக இருக்கிறவர்கள் கூட முகம் கொடுத்து பேசாத சிஸ்டம் நம்முடையது. 
‘பஸ் ஸ்டாண்ட்ல நல்ல சாப்பாட்டுக்கடையே இல்லையேங்க’ என்றேன். 
‘ஒரு நாள்தான? ஒண்ணும் ஆகாது..அங்கேயே இருங்க..நானே வந்துடுறேன்’ என்று வந்துவிட்டார்.

மதியம் இரண்டரை மணிக்குத்தான் பயிற்சி வகுப்பு தொடக்கம். ஓய்வு கூட இல்லை. பேருந்திலிருந்து இறங்கியவர் ஒரு காபியைக் குடித்துவிட்டு எங்களுடனேயே சுற்றத் தொடங்கினார். விடுமுறை தினங்களில் அரசு தாமஸூக்கும், கார்த்திகேயனுக்கும், எனக்கும் சுற்றுகிற வேலை நிறைய இருக்கும். பயனாளிகளைப் பார்ப்பது, பள்ளிகளுக்குச் சென்று வருவது, காலனிகளைப் பார்ப்பது என்று நிற்க நேரமிருக்காது. எங்களுடனேயே வருவதாகச் சொன்ன கீர்த்தியை அழைத்துக் கொண்டுதான் ஒவ்வோரிடத்துக்கும் சென்றோம். சலிக்காமல் சுற்றினார்.
இத்தகைய இளம் அதிகாரிகள் களத்தில் இறங்கிச் சுற்றுவதும் நிலவரங்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்வதும் உருவாக்கக் கூடிய விளைவுகள் நீண்டகால பலன்களை உருவாக்கும். அதிகாரிகள்தானே எல்லாமும்? உதயச்சந்திரனும் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்தான். சவிதாவும் அதே பதவியில் இருந்தவர்தான். இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
பகல் முழுவதும் சுற்றியலைந்த பிறகு மதிய உணவை முடித்துவிட்டு பயிற்சி வகுப்பை ஆரம்பித்தார். மூன்றரை மணி நேரம். மாணவர்கள் அசையாமல் இருந்தார்கள். உண்மையிலேயே இவ்வளவு சிறப்பாக பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பயிற்சியாளர் நகர்ந்த பிறகு மாணவர்களிடம் நான் தனியாகப் பேசுவதுண்டு. பயிற்சி எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வதைவிடவும் அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள்? என்ன கிடைத்தது? அடுத்த பயிற்சி வகுப்பில் என்ன மாதிரியான பயிற்சியை அளிக்கச் சொல்லி பயிற்சியாளரிடம் பேச வேண்டும் என கணக்குப் போடுவதற்கு இந்த உரையாடல் அவசியம். மனப்பூர்வமாகச் சொல்கிறேன் - மாணவர்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். 
மிகச் சீரிய தயாரிப்பு. தயாரிப்பு என்பதைவிடவும் உளப்பூர்வமாக மாணவர்களிடம் பேசினார். இதுதான் தேவையாக இருக்கிறது. ‘அவர் நல்ல பேச்சாளர்..அவரைக் கூப்பிடலாமே’ என்று யாரையாவது யாராவது சுட்டிக்காட்டுவதுண்டு. மேடையில் பேசுகிற வணிக ரீதியிலான பேச்சாளர்களும் பயிற்சியாளர்களும் அவசியமே இல்லை. அதை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். இந்தச் சமூகத்திற்கும் அதன் விளிம்பில் இருக்கும் மாணவர்களுக்கும் தம்மால் எதையாவது செய்ய முடியும் என்கிற நம்பிக்கையிலும் ஆர்வத்திலும் பயிற்சியளிக்க முன்வருகிறவர்கள்தான் நமக்கான தேவை. அவர்கள் மேடைப் பேச்சாளர்களாகவோ துல்லியமான பயிற்சியாளர்களாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால் 100% உழைப்பை இந்தப் பயிற்சிக்காக வழங்குகிறார்கள். 
மாணவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். இறுக்கமாக அமர்ந்திருப்பார்கள். இப்பொழுதெல்லாம் நெகிழ்ந்து பயிற்சியாளர்களிடம் சகஜமாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள். ‘எப்படி படிச்சீங்க?’ ‘என்ன பிரச்சினைகளைச் சந்தித்தீர்கள்?’ என்றெல்லாம் அவர்கள் ஆர்வமாகக் கேட்பது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. இத்தகைய கேள்வி கேட்கும், உரையாடும் மாணவர்களை உருவாக்குவதுதான் எங்களது முதல் இலக்கு. அதை மூன்றாவது பயிற்சியில் முழுமையாக அடைந்திருக்கிறோம். இன்னமும் காலமிருக்கிறது. செதுக்கிவிட முடியும்.
காலாண்டுத் தேர்வுகள் முடிந்தவுடன் பள்ளிகளுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கான பயிற்சி. கடந்த வருடம் இப்படியானதொரு பயிற்சியை நடத்தினோம். உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை- எழுபத்தைந்து மாணவர்களுக்கான பயிற்சி அது. எப்படி படிக்க வேண்டும், எப்படி நேர மேலாண்மை செய்வது என்றெல்லாம் கலந்து சொல்லிக் கொடுத்தோம். பவித்ராவையும், அய்யாவையும், சாமிநாதனையும், அசாரையும் அங்கேதான் கண்டறிய முடிந்தது. அங்கிருந்துதான் அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டுக்கான பட்டறைகளை காரைக்கால் மாவட்டத்திலிருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். நவம்பர் மாதத்திற்குப் பிறகு தொடங்கலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கேசவன் சுழி போட்டிருக்கிறார். காரைக்காலில் நடத்திவிட்டு அதற்கடுத்து ஒட்டன்சத்திரம் மாதிரியான சில ஊர்கள்- இப்படியே ஐந்தாறு இடங்களிலாவது நடத்திவிடலாம்.
அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு,

என் பெயர் கேசவன். காரைக்கால் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றி வருகிறேன். தங்களுடைய நிசப்தம் தளம் வாசித்து வருபவன். நான் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகின்றன. என்னுடைய மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் உரையாட் வருகை தந்தால் உதவியாக இருக்கும். மாணவர்களிடம் உரையாடும் போது நான் அறிந்து கொண்டது: முற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர். ஆங்கிலம் தெரியவில்லை தாழ்வு மனப்பான்மை பெரும்பாலும் அனைத்து மாணவர்களிடமும் உள்ளது. பேசுவதற்கு மிகவும் தயங்குகிறார்கள்..

தாங்கள் காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தரவேண்டும். இங்குள்ள தன்னார்வலர்களுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவது எப்படி என பயிற்சி அளிக்க வேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.

மாவட்ட ஆட்சியருக்கு நன்றி. நிச்சயமாக எங்கள் பங்களிப்பு இருக்கும்.

செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் தடாலடியாகச் செய்ய முடியாது. முதலில் நமக்குப் புரிதல் உண்டாக வேண்டும். பயிற்சி பெறுகிறவர்களுக்கான தேவைகள் என்ன, பயிற்சியாளர்களிடம் என்னவிதமான தயாரிப்புகளைக் கோர வேண்டும் என்றெல்லாம் தெளிவு பெற வேண்டியிருக்கிறது. அதனால்தான் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.
செல்ல வேண்டிய தொலைவு வெகு தூரம் என்று தெரியும். ஒன்றும் பிரச்சினையில்லை- அபிநயாக்களும், கீர்த்தி நாராயணன்களும் துணையாக இருக்கும் போது அசார்களையும், அங்குராஜ்களையும், ஜெயக்குமார்களையும் உச்சத்திற்குக் கொண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சனிக்கிழமையன்று பயிற்சியரங்கு முடிந்தவுடன் மழை தூறிக் கொண்டிருந்தது. தமது பையைத் தோளில் போட்டுக் கொண்டு கோழிக்கோடுவுக்கு தொடரூர்தியில் ஏறினார். சொல்ல மறந்துவிட்டேன் - டிக்கெட் கூட அவருடைய காசுதான்.
தேங்க்யூ கீர்த்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக