கேள்வி : பெரும்பாலான நபர்களுக்குத் தெரியாத கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் எது?
என் பதில் :
"கையில் வெண்ணைய வச்சிக்கிட்டு நெய்யிக்கு அலைந்தானாம்"
மேற்குறிப்பிட்ட பழமொழிக்கு தகுந்தவாறுதான் இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் மனநிலையும் உள்ளது. எதற்காக இப்படி சொல்கிறேன் என்றால் இன்று மலையாளம்,கன்னடம், தெலுங்கு திரைப் படங்களை பார்த்துவிட்டு தமிழ் படம் அந்த அளவுக்கு ஏன் இல்லை என்று இங்க சில கேள்விகள் வலம் வருவதை பார்க்க முடிகிறது.
தமிழிலும் பல அபாரமான படங்கள் உள்ளது. அதுவும் தமிழில் நாம் கேள்விபடாத பல நல்ல படங்கள் தமிழ் ரசிகர்களாலே இறுதிச்சடங்கு நடத்தி சமாதிகட்டி விட்டனர்....ஏனென்றால் நாம்தான் சிறிய பட்ஜட் படங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே..சினிமா துறையில் 10 பேர் வாழ்ந்தார்கள் என்றால் 100 பேர் அடையாளம் தெரியாமல் காணமல் ஆக்கப்படுகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை. ஆதலால் பெரிய பெரிய ஸ்டாருங்க படத்தை மட்டும் கொண்டாடாமல்..இது போன்ற சில நல்ல படங்களையும் ஆதரியுங்கள் தோழமைகளே!
இந்த கேள்விக்கு ஏற்கனவே ரசிகர்களிடம் பாரம், நெடுநல்வாடை போன்ற பெரும் வரவேற்பை பெறாத சில நல்ல தமிழ் படங்களை சிலர் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் நான் பார்த்த சில நல்ல தமிழ் படங்களை இங்கு பட்டியலிடுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
1.ஒரு கிடாயின் கருணை மனு.
2017 இல் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும் தரமான ஒரு படம் என்று நான் இங்கு சொல்லுவேன். அதற்கு முக்கிய காரணம் ஒரு எதார்த்தமான திரைப்படம் என்பதாலே.புதுமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா என்பவரால் இயக்கப்பட்ட இப்படத்தின் நாயகன் விதார்த்.. நாயகி ரவீணா (அறிமுகம்).மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.. கிராமத்தினரின் அடாவடி, அலப்பறை, நக்கல், நய்யாண்டி என சிரிப்பலையுடன், சென்டிமண்ட் என பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் ஒரு படம்.. படத்தில் சில திருப்பங்களுடன் மனித உயிரைக் குறித்து இவ்வளவு கவலை கொள்ளும் சக மனிதர்கள், ஆடு, மாடுகளைப் பற்றி ஏன் கவலையேபடாமல் வெட்டித் தள்ளுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம்...இந்த படத்தை பற்றி இன்னும் நிறையா சொல்லிக்கிட்டே போகலாம். ஆதலால் பார்க்காதவர்கள் குடும்பத்துடன் பார்த்து ரசியுங்கள்.
2. கமலி From நடுகாவெரி.
இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியிட்டார்கள். தனுஷ் நடித்த கர்ணன் என்ற திரைப்படத்துடன் வெளியானதால் இந்த படத்தை யாரும் அவ்வளவாக கண்டு கொல்லவில்லை என்பதே உண்மை.. புதுமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்...கதாநாயகி, நாயகன் எல்லாம் கயல் ஆனந்திதான்... பெயரளவில் நாயகனாக ரோகித் சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரதாப் போதன், இமான் அண்ணாசி போன்ற பல நடிகர்களும் நடித்துள்ளனர். சண்டைக் காட்சி, கலவரம் என்று எந்தவித தொந்தரவும் இல்லாத அருமையான ஒரு படம்.. எந்த வித வசதியும் இல்லாத கிராமத்திலிருந்து தான் நினைத்ததை அடைய(ஒரு தலை காதலுக்காக) கமலி (கயல் ஆனந்தி) என்ற பெண் ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணித்து எவ்வாறு வெற்றி காண்கிறாள் என்பது தான் கதையின் கரு..ஒரு வகையில் பெண் பிள்ளைகளின் படிப்பின் அவசியத்தையும் இந்த படம் உணர்த்துகிறது.இந்த படத்தை பார்க்காதவர்கள் குடும்பத்துடன் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்..
3. இஃக்லூ (Igloo)
இந்த பெயரை கேட்டவுடன் வேற்று மொழி படம் என்று நினைக்க வேண்டாம். இஃக்லூ என்பதற்கான அர்த்தம் இந்தப் படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்.இந்தப் படம் ஒரு வெப் மூவி என்பதால் யாரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஜீ5 ப்ளாட்பார்மில் இந்த படம் உள்ளது. பரத் மோகன் என்னும் புதுமுக இயக்கனரால் படமாக்கப்பட்டது. இது ஒரு ரொமாண்டிக் டிராமா வகையை சார்ந்த படமாகும்..இந்த படத்தை நீங்கள் பாருங்கள் கண்டிப்பாக உங்களை நெகிழ வைக்கும். ஒரு சிறந்த படம் பார்த்த அனுபவம் உண்டாகவில்லை எனில் என்னை கேளுங்கள்.. படத்தின் நாயகி புற்று நோயால் அவதிப்பட்டு இறுதியில் நாயகனை விட்டு உயிர்விடும் போது நம் நெஞ்சை உலுக்கி நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது..படத்தில் ஒரு சில லிப் லாக் காட்சிகள் உள்ளதால் முதலில் நீங்கள் பார்த்து விட்டு குடும்பத்துடன் பார்க்கலாமா என முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தரமான படம். படத்தின் இறுதி காட்சியில் நீங்கள் அழுதால் நான் பொறுப்பல்ல.
4. குற்றமே தண்டனை.
இந்த படம் ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இந்தப் படத்தை நான் ஜீ திரை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். பார்த்த முதல் கனமே திரையரங்கில் பார்க்காமல் தவற விட்டுவிட்டோமே என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவுக்கு ஒரு தரமான கிரைம் திரில்லர் மூவி. ஏன் இந்த படம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. காக்கா முட்டை இயக்குனர் M.மணிகண்டன் என்பவரால் இயக்கப்பட்ட இப்படத்தின் நாயகன் விதார்த்.நாயகி ஐஸ்வர்யா , பூஜா தேவாரியா மற்றும் ரகுமான், நாசர் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.....இந்த படத்தை புதிதாக பார்ப்பவர்கள் படத்தின் இறுதியில் ஒரு பெரிய தரமான டிவிஸ்ட் காத்துகிட்டு இருக்கு என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.2016 இல் வெளிவந்த இப்படத்தை பார்க்காதவர்கள் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.
5. டுலெட் (ToLET)
கண்டிப்பாக உலகம் போற்றக்கூடிய ஒரு தமிழ் படம் என்றால் இதை சொல்வேன்.ஏன் என்றால் நீங்களே படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாத இந்தப் படத்தை இயக்கிய செழியன் அவர்கள் ஒவ்வொரு காட்சியும் உணர்வுப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் செதுக்கி வைத்திருப்பார்.. எழுத்தாளராக இருக்கும் நாயகன் தற்போது குடியிருக்கும் வாடகை வீட்டிலிருந்து வேறு ஒரு நல்ல வீட்டிற்கு குடி பெயர நினைக்கிறார். ஆனால் வறுமையின் காரணமாக படாத பாடு படும் நாயகன் எப்படி வேறு ஒரு நல்ல வீட்டிற்கு குடிபெயர்ந்தார் என்பது தான் கதையின் கரு. அவருடைய வறுமையை காட்சிப்படுத்தும் விதம் கண்டிப்பாக படம் பார்க்கும் நமக்கும் வலியை ஏற்படுத்தும். இந்த படத்தை எந்தக் காரணம் கொண்டும் தவற விடாதீர்கள். நெட்ப்ளிக்ஸில் உள்ளது. தேசிய விருது பெற்ற இப்படத்தை நிச்சயமாக குடும்பத்துடன் பாருங்கள்.
6. அப்பா
2016 இல் இயக்குனர் சமுத்திரகனியால் இயக்கி நடிக்கப்பட்ட ஒரு படம்தான் இது..இந்த படம் வெளியான சமயம் ரஜினி நடித்த காலா படமும் வெளியிடப்பட்டதால் அப்பா படத்திற்கு ஒரு சில திரையரங்கமே கிடைத்தது. இந்தப் படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அப்பா மகனுக்கு இடையே இருக்கும் உறவு எப்படி இருக்க வேண்டும், எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதை அழுத்தம்,திருத்தமாக சொல்லக்கூடிய ஒரு படம். நல்ல திரைக்கதை, நல்ல நடிப்பு என குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு சிறந்த படம் இது. பார்க்காதவர்கள் பார்த்து மகிழுங்கள்.
7. கே.டி என்னும் கருப்புத்துரை.
2019இல் வெளியான இந்த படத்தை மதுமிதா என்ற பெண் இயக்குனர் இயக்கி இருப்பார்.ஒரு வயதானவரையும், ஒரு சிறுவனையும், வைத்துக் கொண்டு, செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை என இரண்டையுமே எதார்த்தமாக கையாண்டிருப்பதோடு, வாழ்க்கையின் மறுபக்கத்தை ரொம்ப சாதாரணமாக விளக்குவது தான் ‘கே.டி (எ) கருப்பு துரை’ படத்தின் கதை கரு. எழுத்தாளர் மு.இராமசாமி கருப்புத்துரையாகவும், குட்டி என்ற சிறு வயது கதாபாத்திரத்தில் நாகவிஷால் ஆகியோர் தங்களது நடிப்பை கனகச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். வயதாகிவிட்டால் எல்லாமே முடிந்துவிடாது என்பதை உயிரோட்டமாக விளக்குகிறது இந்த படம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தரமான படம் இது.
8.8 தோட்டாக்கள்.
இந்தப் படம் ஆக்ஷன், கிரைம், திரில்லர் வகையை சார்ந்த படம். 2017 இல் வெளிவந்த இந்தப் படம் புதுமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் என்பவரால் இயக்கப்பட்டது. படத்தின் நாயகன் சத்யா மற்றும் நாயகி அபர்ணா இருவரும் அறிமுகங்களாக இந்த படத்தில நடித்துள்ளனர். மேலும் நாசர், பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.....இந்த படத்தை அஜித், விஜய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் நம்ம ஆளுக ஆகா ஓகோ என்று கொண்டாடி தீர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.புதிதாக வேலைக்கு சேரும் இளம் போலீஸ் எஸ்.ஐயிடம் (நாயகன்) ஸ்பெஷல் கேஸ் ஒன்றிற்காக 8 குண்டுகள் நிரப்பப்பட்ட கைதுப்பாக்கி ஒன்றை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வழங்குகிறார். அதை தன் கவனக்குறைவால் தொலைக்கும் எஸ்.ஐ படும் பாடும், அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் பயன்பாடும் தான் இந்த "8 தோட்டாக்கள்" படத்தின் கரு. நேரம் கிடைத்தால் இந்த படத்தையும் பாருங்கள். கண்டிப்பாக விருவிருப்பாக இருக்கும்.
9.தேன்.
ஓர் இரு மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் வலிகளை எதார்த்தமாக கூறியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியவர் கணேஷ் விநாயகன். நாயகன் தருண்குமார், நாயகி அபர்ணா..... படத்தின் முடிவில் சில அரசு அதிகாரிகளின் அலட்சியங்களையும் சொல்லி இருக்கிறது இப்படம்.. படம் முடிவில் சில காட்சிகள் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். குடும்பத்துடன் பார்க்க கூடிய படம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.
10.மெஹந்தி சர்க்கஸ்.
குக்கு, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகனின் அண்ணன் சரவண ராஜெந்திரனின் அறிமுக படம் தான் இந்த மெஹந்தி சர்க்கஸ். 2019 இல் வெளியான இந்த படத்தின் பாடல் (கோடி அருவி, வெள்ளாட்டு கண்ணழகி) அனைவரும் கேட்டிருப்பீர்கள்.ஆனால் படத்தை பார்த்திருப்பீர்களா என்று எனக்கு தெரியாது. ஒரு தரமான காதல் கதை படம் இது. நாயகனின் காதுலுக்கு பல தடைகள்,தடங்கள்கள் ஏற்படுகிறது இதனை முறியடித்து எவ்வாறு தனது காதலியை கரம் பிடித்தார் என்பதே கதையின் கரு. இறுதி காட்சியில் சர்கஸ் கேங்கில் இருக்கும் நாயகியை பல அடி தூரம் நிற்க வைத்து அவர் மீது கத்தி படாமல் நாயகன் வீசும் காட்சி நம்மை பதைபதைக்க வைக்கும்.அனைவரும் பார்க்க கூடிய ஒரு சிறந்த தரமான படம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.
11. மேற்கு தொடர்ச்சி மலை.
இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு பெறுமை சேர்த்த படம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு தரமான படம். லெனின் பாரதி என்பவரால் இயக்கப்பட்ட இந்த படம் மலைவாழ் மக்களின் கடினமான வாழ்வியல் முறையை பிரதிபலிப்பதாக இருக்கும். படத்தின் நாயகன் ஆண்டினி, நாயகி காயத்திரி தங்களது நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர்....விவசாயம் செய்ய நிலம் வாங்க ஆசைபடும் நாயகன் சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து முடிவில் நிலம் வாங்க முடியாத காரணத்தையும், கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் அழுத்தம், திருத்தமாக சொல்லும் படம்தான் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை. பார்க்காதவர்கள் இருப்பீர்கள் ஆனால் இன்றே பாருத்துவிடுங்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு உணர்வு பூர்வமான படம் இது.
12. செத்தும் ஆயிரம் பொன்.
இந்தப் படத்தை பலரும் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.2019 இல் வெளிவந்த இப்படத்தை ஆனந்த் இரவிச்சந்திரன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்கி இருப்பார்... படத்தை பொறுத்த வரையில் பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களே நடித்துள்ளனர். முக்கியமாக பாட்டிக்கும், பேத்திக்கும் இடையில் நடக்கும் ஒரு கதைதான் இது... தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வரலாம் ஆனால் சில படங்களே அந்த படத்தை பற்றி உங்களை பேச வைக்கும்.நிச்சயமாக இந்த படம் உங்களை பேச வைக்கும்.... இயற்கையின் அமைப்பில் இறப்பின் முக்கியத்துவமும், மனித வாழ்வில் அதன் மகத்துவமும் பற்றி பேசுகிறது இந்தப் படம். மரணத்தை கொண்டாடுவதே இறந்தவரின் வாழ்வுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அஞ்சலி என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர்.....குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம். நிச்சயமாக இந்தப்படத்தை குடும்பத்துடன் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.
இது போன்று பலருக்கு தெரியாத கொண்டாட வேண்டிய படங்கள் தமிழில் பல உள்ளது. இப்பதிவை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் பார்ப்பதற்கு ஏதுவாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருப்பதற்கு இது போன்ற சில சிறிய பட்ஜட் படங்களும் பெறும் பங்காற்றுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இது போன்ற நல்ல படங்கள் எதற்காக திரையரங்கத்தில் ரசிகர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது தான் புதிராகவே உள்ளது.
இது போன்று எவ்வளவோ படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட தவறவிட்டு விட்டனர் என்பது தான் ஒரு வருந்தத்தக்க விடயம்...இவ்வளவு ஏன் இங்கு கூட பல நல்ல தரமான பதில்களும் பலரது கண்களுக்கு தெரியாமல் உள்ளது என்பது மற்றொரு வருந்ததக்க விடயம். ஆக நல்ல சினிமா படங்களை கொண்டாடுங்கள் அது மட்டும் இல்லாமல் பலர் எழுதும் நல்ல பதில்களையும் ஆதரியுங்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக