ஞாயிறு, 27 அக்டோபர், 2019

பணிக்கு செல்லும் பெண்கள்......

 பணிக்கு செல்லும் பெண்களுக்கு அதிகார ஏணியில் இன்று பல பெண்கள் இருபது வருடங்களுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத நிலைகளில் அமர்ந்துள்ளனர். ஆகவே நிர்வாக பொறுப்பிலுள்ள ஆண்கள் உள்ளாகும் அனைத்து மனப்பதட்டங்களுக்கும் இத்தகைய பெண்களும் உள்ளாக வாய்ப்புண்டு.

அதிகார வர்க்கத்தில் ஆண்களுக்கு நிகரான நிலையிலுள்ள பெண்களுக்கு ஆண்களுக்கு இல்லாத பொறுப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அலுவலகத்தை நிர்வகிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு வீட்டு நிர்வாகத்தில் அதே அளவுக்கு பங்கு இல்லை என்பதும் உண்மை. குறிப்பாக, பெண்கள் பணிக்கு செல்லாத காலத்தில் இருந்துவந்த குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இன்றும் அவர்கள் தலையில் சுமையாக உள்ளது.

குடும்பத்திற்கு தேவையானவற்றை (சமையல் சாமான்கள் எனப்படும் மளிகை, காய்கறி ஆகியவற்றிலிருந்து டாய்லெட்றி எனப்படும் சில்லறை பொருட்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போவதுண்டு) கொள்முதல் செய்வது, சமைப்பது, குழந்தைகளுடைய வீட்டுப் பாடம் உட்பட அவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வது , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக/பேராசிரியராக பணிபுரியும் பெண்களுக்கு அடுத்த நாள் எடுக்க வேண்டிய பாடங்களுக்கு தயார் செய்வது, தேர்வுத்தாள்களை திருத்துவது ஆகியவை வெறுப்பையளித்தாலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களில் சில.

எனவே ஆண்களை விடவும் அதிகமான அளவு மன உளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்றால் மறுப்பதற்கில்லை.

இதை எப்படி எதிர்கொள்வது?

அ) குடும்ப நிர்வாகத்தில் ஆண்களை ஈடுபடுத்துவது

புருஷ லட்சணம் சம்பாதிப்பது மட்டுமே என்பதுபோன்ற பண்டைகாலத்து நிலைப்பாட்டை முழுமையாக கைவிடுவது. சமையலில் இருந்து குழந்தைகளை குளிக்க வைத்து, உடை மாற்றி, உறங்க வைப்பது வரை ஆண்களையும் துவக்கத்திலிருந்து (அதாவது திருமணம் ஆன நாளிலிருந்தே) ஈடுபடுத்துவது. குடும்பத்தில் ஆண்கள் செய்யத்தகாத வேலை என்று ஒன்றுமே இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். வீட்டு அலுவல்களுக்கென பல்வேறு இயந்திரங்கள் பயன்பாட்டிலுள்ள இன்றைய சூழலில் எந்த அலுவலையும் எவ்வித கவுரவு இழப்பும் இல்லாமல் ஆண்களாலும் திறம்பட செய்ய முடியும் என்பதை ஆண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பெண்களால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பார்கள். அவற்றுள் கணவனை தன்வயப்படுத்தி குடும்ப அலுவல்களில் தனக்கு உதவியாய் இருக்கச் செய்வதும் ஒன்று. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும் என்பதுபோன்று ஆண்களை அவர்கள் வழியிலேயே சென்று குடும்ப அலுவல்களில் சரிபாதியை அவர்கள் தலையில் சுமத்துங்கள். உங்களுடைய சுமை வெகுவாக குறைந்துபோகும்!

ஆ) குழந்தைகளுக்கு அவர்களுடைய பொறுப்பை உணர்த்துவது

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் அவர்களுடைய அனைத்து விஷயங்களிலும் உதவி செய்ய முயல்வது தேவையற்றது. ஆங்கிலத்தில் இதைத்தான் Spoon feeding என்பார்கள். உண்ணும் உணவிலிருந்து, உடுத்துவது, படிப்பது என எல்லாவற்றிலும் அவர்களுக்கு உதவ முயலாதீர்கள். இப்போதெல்லாம் குடும்பத் தலைவிகளின் பெரும்பாலான நேரம் இதற்காகவே செலவிடப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு தேர்வு என்றால் அது குடும்பத்தலைவிகளுக்கே தேர்வு என்பதுபோலாகிவிட்டது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தேர்வு என்று தொடங்குகிறது என்பது கூட தெரிவதில்லை. இத்தகைய குழந்தைகள் தேர்வுகளில் வேண்டுமானால் முதலிடம் பிடிக்க முடியும் ஆனால் வாழ்க்கையில் முழுமையாக வெற்றிபெறுகிறார்களா என்பது சந்தேகமே. வாழ்க்கையின் வெற்றி என்பது நல்ல வேலையில் அமர்வதும் கைநிறைய ஈட்டுவதும்தான் என்றால் ஒருவேளை அது இத்தகைய குழந்தைகளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் திறம்பட நிர்வகிக்கக் கூடிய நல்ல நிர்வாக திறனுள்ளவர்களாக உருவாக சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய திறன் மிகவும் அவசியம். அதை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர்த்துவது மிக மிக அவசியம். இதனால் தங்களின் பாரமும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இ) வீட்டில் முதியவர்களின் வழிகாட்டுதல்

சமீப காலங்களில் nuclear family எனப்படும் நான், என் கணவர், என் குழந்தைகள் என யாரையும் குறிப்பாக கணவனின் குடும்பத்தினரை சார்ந்திராத குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவருவதை காண முடிகிறது.

வீட்டில் உடன் வசிக்கும் முதியவர்களால் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உணரும் பெண்கள் தாங்களும் அந்த நிலையை அடையப் போகிறவர்கள்தான் என்பதை கவனத்தில் கொள்வதில்லை. Generation gap எனப்படும் இரண்டு தலைமுறைகளுக்கிடையில் அபிப்பிராய பேதம் ஏற்படுவது மிகவும் சகஜம். ஆனால் இத்தகைய முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. சச்சரவும் சல்லாபமும் கலந்ததுதான் தாம்பத்தியம் என்பார்கள். கட்டியவனுடன் சல்லாபமும் அவனுடைய குடும்பத்தாருடன் சச்சரவும் என்பதைத்தான் முன்னோர்கள் இப்படி நாசூக்காக கூறி வைத்துள்ளனரோ என்னவோ.

ஒரு குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு கருத்து பேதங்களுக்கும் அதனால் ஏற்படும் சச்சரவுகளுக்கும் முதியோர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட பல சமயங்களில் காரணங்களாகிவிடுகின்றன. குறிப்பாக கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்துவிட்டால் குழந்தைகளை பேணுவதற்கு வீட்டில் முதியவர்கள் மிகவும் அவசியம். பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் குழந்தைகளுக்கு யாரும் இல்லாத வீடு ஒரு பெரிய வெற்றிடத்தை அவர்களுடைய மனதில் ஏற்படுத்துவதுதான் அவர்களால் ஏற்படும் பல சச்சரவுகளுக்கு காரணிகளாக அமைகின்றன . இந்த வெற்றிடத்தை போக்க வீட்டிலிருக்கும் தாத்தா, பாட்டியால் நிச்சயம் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். மேலும் குடும்பம் மற்றும் அலுவலகம் ஆகிய இருவேறு சுமைகளை ஏற்கனவே சுமந்துக்கொண்டிருக்கும் பெண்கள் குழந்தைகளை பேணுவது என்ற பாரத்தையும் தனியே சுமக்க வேண்டுமா என்ன?

வீடு - அலுவலகம். இரண்டும் வெவ்வேறுதான் என்றாலும் இவை இரண்டுமே நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒன்றில் நாம் எந்த அளவுக்கு வெற்றிபெறுகிறோமோ அந்த அளவுக்குத்தான் மற்றதிலும் வெற்றிபெற முடியும் என்பதில் ஐயமில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக