தீபாவளி நினைவுகள் -பலகாரம்
தீபாவளி நினைவுகள் — 1
——————————————-
நடு வயதுக்காரர்களுக்கு இப்போதும் தீபாவளி பற்றிய பழைய ஞாபகங்கள் பக்ஷணங்கள்போலவே சுவையாகத்தான் இருக்கும். சின்ன வயதில் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளிக்கு மனசு தயாராகிவிடும். நண்பர்களோடு பேச்சு தீபாவளியைப் பற்றி மாத்திரமே இருக்கும். எத்தனை ஸ்வீட், எத்தனை ட்ரஸ், எவ்வளவு பட்டாசு என்ற பேச்சில் நிறைய புருடாக்கள் இருக்கும். மிஷினுக்குப்போய் மாவு அரைத்து வருவது எனக்குப் பிடிக்காத வேலை. முதல் காரணம் கும்பல். இரண்டாவது, மிளகாய்ப் பொடி அரைக்கவும் மற்றவை அரைக்கவும் தனித்தனி மிஷினும் தனித்தனி வரிசையும். நான் ஒருவனே இரண்டையும் அரைத்துவர அனுப்பப்படுவேன். அண்ணன், தம்பி அக்கா எல்லோருக்கும் நிறைய ஹோம் வொர்க்கோ அல்லது திடீர் வயிற்று வலியோ வந்துவிட நான் மட்டும் பைத்தியம் போல் மாட்டிக்கொள்வேன். கூட இரண்டு முறுக்கு தருவதான பொய் வாக்குறுதியில் ஏமாந்து சிங்காரவேலன் கமல் மாதிரி உடம்பெல்லாம் பைகளையும்( அழுக்கு வெய்ட் வேறு) பாத்திரங்களையும் சுமந்துகொண்டு போய் அம்மாவின் அன்புக்கும் பாத்திரமாவேன்.
மாவு அரைக்கும் மில்லில் முதல் நாளே கல்லை அடையாளமாகப் போட்டுவிட்டுப்போனவர்கள் நான் போய் ஒரு மணி கழித்துத்தான் வந்தாலும் அவர்கள்தான் ஸீனியர்களாகக் கருதப்பட்டு பரமபதத்தில் பாம்பு கடிபட்டவனாய் கடைசிக்குப்போய் விடுவேன்.( இதைச் சொன்னால், எனக்குத் துப்பு இல்லை என்று சொல்வான் வயிற்று வலியால் துடித்துகொண்டிருந்து நான் கிளம்பிப்போன பத்து நிமிஷத்திற்கெல்லாம் வயிறு சரியாய்ப் போகும் என் தம்பி ). ரெண்டு வரிசையிலும் பாத்திரங்களையும் பைகளையும் வைத்துவிட்டு கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நமக்கு முன் கேழ்வரகு அரைக்க வைத்திருந்தால் நாம் அரிசியோ கடலைப்பருப்போ அரைக்க முடியாது. மறுபடியும் சீனியாரிட்டி தள்ளிப்போகும். அதை வேறு கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் துப்புக்கெட்டுப்போய்விடுவேன் என்பதோடு இல்லாமல் முறுக்கும் ஐயர்ன் டானிக் சாப்பிட்டவன் டாய்லெட் போல கருப்பாக இருக்கும். ” ஏன் முறுக்கு செவந்துபோச்சு?” என்று கேட்பதற்கு பதிலாக,” ஏன் கறுத்துப் போச்சு?” என்று கேட்கும்போதெல்லாம் எல்லோரும் என்னையே முறைப்பார்கள். அடிஷனாலாக இரண்டு இல்லை, எல்லா முறுக்கையும் எனக்கே கொடுத்துவிடுவார்கள்.
கடலை மாவை கடலைமாவு அரைத்தபின்னும், அரிசியையும் அணிமாறாமலும் அரைத்துவரவேண்டும் என்றால் யாரவது ஒருவர் வீட்டில் திட்டு வாங்கியே ஆகவேண்டும்.
இது தவிர மிளகாய் வரிசையின் பக்கம் கண் வைத்துக்கொள்ளவும் வேண்டும். அங்கும் ஹைப்ரிட் ஆகிவிடக்கூடாது. போஸ்ட் பேஸ்ட் ரிசர்வேஷனைவிட இது கஷ்டம். இதுதவிர, மில்காரன் அம்மாசொல்லிவிட்ட அளவை ஒத்துக்கொள்ளமாட்டான். அரை கிலோ அதிகம் என்று சொல்லி கூடக்காசு வாங்கிவிடுவான். நானே அளவுகளை மாற்றிச் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. மிளகாயோடு மல்லி, மஞ்சள், எள், இலை தழை குச்சி என்று எதெதையோ போட்டு வைத்து ( வாசனைக்காம்) அதற்கும் மில்காரனிடம் திட்டுவாங்கவேண்டியிருக்கும். சிலசமயம் இந்த கூட்டணி தான்யங்களால் மிஷின் நின்றுபோனதும் உண்டு. தனித்தனியாய் ( தனியா என்று இதனால்தான் பெயரோ?) லோகல் பாடி எலெக்ஷன் போல அரைத்துவரவும் கட்டளை இருக்கும். இவ்வளவு தடைகளைமீறி அரைத்தபின், பாத்திரங்களை உடனே மூடிஎடுத்துக்கொண்டு வர முடியாது. கொஞ்சம் காற்றாட வைத்துக்கொண்டு வரவேண்டும். பலசமயங்களில் காற்று ரொம்ப ஆடிவிட அதனால் வந்த துன்பங்களும் அதிகம். மிளகாய் அரைக்கும்போது வந்த தும்மலின் தொடர்ச்சியோடு வீடு போய்ச்சேரும்போது மணி எட்டாகியிருக்கும். அம்மா மட்டும் சாப்பிடாமல் எனக்காகக் காத்திருப்பாள். குழைந்த சாதமும் ரசமும் ” உனக்கு மாத்திரம்தான்” என்று போடும் வடாமும் அம்மாவின் அன்பை ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் காட்டும்...
தீபாவளி நினைவுகள் நாளையும் தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக