தீபாவளி நினைவுகள் – 2
—————————————–
வாங்கிவைத்திருக்கும் வெடிகள் கொஞ்சமாகவே தெரியும் ஒவ்வொரு தீபாவளிக்கும்.
நண்பர்களின் வீடுகளில் வாங்கியிருப்பது எப்போதும் அதிகமாகவே தெரியும். எல்லோரும் தீபாவளிக்கு
ஒரு வாரத்திற்கு முன்பே வெடிகளை வெடிக்கத் தொடங்கியிருப்பார்கள். இங்கோ தீபாவளிக்கு
முதல் நாள்தான் வெடியே வாங்கலாமா என்று யோசிப்பார்கள். எல்லாம் வறுமைதான். அது அப்போது
புரிந்ததே இல்லை. வெடிப்பவர்களின் வீட்டின் முன் ரெண்டு காலையும் அகற்றி நின்றுகொண்டு
கைகளைப் பின்பக்கம் பிணைத்துக்கொண்டு ஸ்டாண்- அட்- ஈஸில் அவர்கள் வெடிப்பதை நானே வெடித்ததாய்
நினைத்து சந்தோஷம் கொண்டிருப்பேன்.
வீட்டில் சகோதரர்களுடன், ரொம்ப லேட்டாக வாங்கிய வெடியைப் பிரித்துக்கொள்வதில்
அவ்வளவு சீக்கிரம் உடன்பாடும் காணமுடியாது. வழக்கம்போல நான் இளிச்சவாயனாகி நிறைய கேப்
டப்பாக்களோடு லொடுக்கு சீட்கள் கிடைத்த அதிமுக கூட்டணிக் கட்சிமாதிரி வருவேன். கொடுத்த
ஒரே ஒரு சர வெடியையும் டிஸ்மேண்டில் செய்து ஒத்தை வெடிகளாக்கி ரொம்ப நேரம் வெடிப்பேன்.
மதியம் அப்படி வெடித்துக்கொண்டிருந்த ஒரு நாள், தூக்கம் கெட்டுப்போன கடுப்பில் எல்லாவற்றையும்
பிடுங்கி சாக்கடையில் போட்டுவிட்டான் பக்கத்து வீட்டுக்காரன். யாரிடமும் சொல்லாமல்,
வெடிக்காத வெடிபோல நான் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தேன்.
ஒரு தீபாவளின் நாளின் முன்தினம் வெடிவாங்கப்போகும் குழுவில்
நானும் சேர்த்துக்கொள்ளப்பட்டு டவுனுக்கு ஐந்து மைல் நடந்துபோனோம். வெடி வாங்கப்போகும்
உற்சாகத்தில் நடப்பது ஒன்றும் ஸ்ரமமாகத்தெரியவில்லை. வரும்போது பஸ்ஸில் வந்துகொள்ளலாம்
என்று பெரியவர்கள் தீர்மானம் செய்து கொண்டதில் எனக்கு ஒன்றும் பங்கு இல்லை என்றாலும்
கூட்டணி தர்மத்தில் சிறிய கட்சிகளின் கருத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது எனக்கு அப்போதே
தெரிந்திருந்தது. பெரிய கடைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இருப்பதிலேயே வெளிச்சம் கம்மியான
கடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து ( அங்குதான் ரேட் கொஞ்சம் கம்மிஎன்று டேபுலேஷனில் தெரிந்தது)
வெடிகளை ரெண்டே செகண்டுகளில் ஆர்டர் செய்துவிட்டார்கள். எனக்கு அங்கு இருந்ததிலேயே
ஒரு ராக்கெட்மட்டும்தான் பிடித்திருந்தது. சந்திராயன்போல இருந்த அதை ரொம்ப அலங்காரம்பண்ணி
பாதுகாப்பாக வைத்திருந்தான் கடைக்காரன். தாய்க்கலன் சந்திரனில் நிற்பதுபோல நின்றுகொண்டிருந்தது
அது. நான் பார்த்துகொண்டிருந்ததை கவனித்த கடைக்காரன், அது ஐந்து ரூபாய் என்று காங்கிரஸ்
சின்னத்தைக்காட்டினான். அதோடு, அந்த ராக்கெட் மேலேபோய் ரெண்டு தடவை வெடிக்கும் டபுள்ஷாட்
என்று பில்ட் அப் கொடுத்தான். ரஷ்ய க்ரயோஜனிக் உதவியோடு செய்ததுபோல அதை வாஞ்சையோடு
எடுத்து தடவிக்கொடுத்தான். ஒரு பக்கம் பார்த்தால் கட்டிங் ப்ளேயர் போலவும் இருந்தது
அது. சிகப்புக் கலர் பேப்பர் அலங்காரத்தில் மெல்லிய பளபளப்பான பாலித்தின் பேப்பர் சுற்றப்பட்டிருந்ததில்
குண்டு பல்பின் வெளிச்சம் ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்தியிருந்தது.’ மொத்தமாகவே ஐம்பது
ரூபாய்க்குத்தான் பட்டாஸ் வாங்குவார்கள் போலிருந்த சமயத்தில் ஒரு ராக்கெட் மாத்திரம்
ஐந்து ரூபாய்க்கு வாங்குவார்களா என்ன’, என்ற கேள்வியெல்லாம் காதல் கொண்ட மனதிற்கு தெரியுமா
என்ன? நான் ஒன்றுமே பேசாமல் ப்ரமை பிடித்ததுபோல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த திக்கில்
என் பெரிய அண்ணனும் பார்க்க நான் அந்த ராக்கெட்டை நோக்கிக் கைகாட்டினேன். அதெல்லாம்
நம் குடும்பத்துக்கு சரிவராது ; வேண்டுமென்றால் இதை வாங்கிக்கொள் என்று இருப்பதிலேயே
ஒல்லிப்பிச்சானாய் இருந்த ஒரு ராக்கெட்டைக்காண்பித்தான் என் அண்ணன். எனக்கு அழுகை பிய்த்துக்கொண்டுவர,
கடைக்காரன் ” புள்ள கேக்குதில்ல, வாங்கிக்குடுங்க சாமி. வருஷத்துக்கு ஒரு தீபாவளிதானே”
என்ற உபரியான தகவலையும் கொடுத்தான். என் அழுகை இன்னும் பெரிசாகியது, வருஷத்துக்கு ஒரு
தீபாவளிதானே என்ற சோகத்தினால். இப்போது எதிர்பாராமல் என் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தார்
எப்போதும் சாந்த ஸ்வருபீயான என் அப்பா. நான் இன்னும் சத்தமாய் அழ ஆரம்பித்தேன். சீன்
கிரியேட் ஆவதைத் தவிர்க்க உடனே என் அண்ணன் என்னைக் கூட்டத்திலிருந்து தள்ளிக்கொண்டு
வெளியே வந்துவிட்டான். என்னைக் கூட்டிக்கொண்டுவந்ததே தப்பு என்றும் ஒரு முறை திருப்பதியில்
நான் டெம்பரரியாகக் காணாமல்போயிருந்தபோது தேடிக்கண்டுபிடித்திருக்கவே கூடாது என்றும்
இன்னும் ஃப்ளாஷ் பேக்கில் போய் நான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கௌண்டில் சரிசெய்யமுடியாத
திருத்தங்களை வார்த்தைகளில் போட்டுக்கொண்டிருந்தான். இதனிடையே, அப்பா மீண்டும் சாந்தஸ்வரூபியாகி,
என்னை அடித்ததற்கு ப்ராயச்சித்தமாயாய் அந்த ராக்கெட்டையே வாங்கிவந்திருந்தார். கடைக்காரனும்,
என்னை செட்யுஸ் பண்ணினதற்குப் ப்ராயச்சித்தமாய் ஒரு ரூபாய் டிஸ்கௌண்ட் கொடுத்திருந்தான்
( மொத்தத்தில்தான் ). கதை இங்கே முடியவில்லை.
தீபாவளி அன்று ராக்கெட்டை லான்ச் செய்வதென்றும் வீட்டிற்கு எதிரே
உள்ள ட்ரைனேஜ் மூடியை லான்ச்சிங்க் பேடாகவும் இஸ்ரோ ரேஞ்சுக்கு திட்டமிட்டிருந்தோம்
நானும் என் அன்புத்தம்பியும். எங்களின் பெருமைமிகு தருணமே அந்த தீபாவளியின் இரவாக இருக்கப்போவதாக
பகலையெல்லாம் சாதரணமாகச் சில்லரை விஷயங்களில் கவனம் செலுத்தாது கழித்தோம். அந்தக் குறிப்பிட்ட
சுபயோக வேளை நெருங்க நெருங்க அட்ரீனலின் ரொம்பப்படுத்தியது. தம்பிக்கு அந்த ராக்கெட்,
நிலாவில் போய் லேண்டாகி வெடித்தால் அங்கு வடைசுட்டுக்கொண்டிருக்கும் கிழவிக்கு ஏதாவது
ப்ராப்ளம் வந்து நிலா க்ளீன் ஸ்லேட்டாகிவிடுமோ என்ற அச்சம்வேறு. ” எல்லாரும் போந்தாரோ
போந்தென்றெண்ணிகொள்” என்று சரஸ்வதி டீச்சர் சொல்லிக்கொடுத்த திருப்பாவையின்படி தம்பி
வந்த நண்பர்களை எண்ணிக்கொண்டிருந்தான். மழைவேறு ராகெட்டை விண்ணுக்குள் செலுத்துவதைத்
தடை செய்ய சதிபண்ணிக்கொண்டிருந்தது. சரியாக 7.31க்கு கௌண்ட் டவுன் ஆரம்பித்து நானும்
என் தம்பியும் சேர்ந்து அந்த ராக்கெட்டின் அனியாயத்துக்குக் கொஞ்சமான திரியில் நடுங்கிக்கொண்டே
எரியும் கம்பிமத்தாப்பை வைத்தெடுத்தோம். ஒரு புள்ளி நெருப்பு ஒட்டிக்கொண்டிருந்து எப்போதுவேண்டுமானாலும்
அணைவேன் என்று பயப்படுத்திக்கொண்டிருந்தது. எல்லோரும் மகரஜோதிக்குக் காத்திருக்கும்
ஐயப்ப பக்தர்கள்போல காத்திருந்தார்கள். தம்பியோ ரெண்டு மூன்றுதடவை டாய்லெட் போய்வந்தான்.
கடைசியாக யாரும் எதிர்பாரா தருணத்தில் ராக்கெட் கிளம்பி சரியாகப்
ப த்தடி மேலெழும்பி ஒருதடவையும் உடனேயே அவசரமாக மறந்துபோய்விடக்கூடாது என்பதுபோல ரெண்டாவது
தடவையும் வெடித்துவிட்டுத் தாயகம் திரும்பிவிட்டது. நண்பர்களெல்லோரும் ஓவென்று கத்திக்கொண்டு
திரும்பிப்பார்க்காமல் ஏதோ அபர காரியத்துக்கு வந்தவர்கள்போல் ஓடிவிட்டார்கள். எங்களால்
அன்றிரவு மட்டுமல்ல சில வாரங்களுக்கே தூங்கமுடியாமல் போயிற்று. அந்தத் தீபாவளிக்கு
வாங்கியதில் மிச்சமிருந்ததையும் வெடிக்கமனமில்லை. ஆனால் என் பெரியண்ணன் மட்டும் ரொம்ப
சந்தோஷமாயிருந்ததுபோல எனக்குப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக