செவ்வாய், 22 அக்டோபர், 2019

கேள்வி :நீங்கள் எதற்காக மலரும் நினைவுகளாக எதை நினைத்து சிரித்தீர்கள்?

பதில் :


மூன்று வருடங்களுக்கு  முன் நான்‌ பண்ண வேலையே தான்!

இடம்: சமையலறை

செய்யும் வேலை: புதினா சாதம் செய்வது

அரைக்க வேண்டியவற்றை வதக்கி ஒரு தட்டில் வைத்திருந்தார் அம்மா

“நான் அரைக்கிறேன் மா” என்று நானே வாயை கொடுத்தேன்

“இதில் இருப்பதில் கொஞ்சம் போட்டு அரைக்க வேண்டும். அது அரைந்ததும் இன்னும் கொஞ்சம் போட்டு அரைக்க வேண்டும். மிக்ஸி ஜார் குட்டியா இருக்கு பாத்து அரைக்கனும்”

“கவலையே வேண்டாம் எல்லாம் பக்காவா பண்ணிடுவேன்.”


சரி என்று என்னை நம்பி என்னிடம் கொடுத்து விட்டு, வெங்காயம் நறுக்குவதற்காக இரண்டு அடி தள்ளி தரையில் உட்கார்ந்தார் அம்மா. நமக்கு தான் மூளை வேற லெவல்ல யோசிக்குமே.

வதக்கி வைத்த புதினாவை கொஞ்சம் மிக்ஸியில் போட்டேன். “அடடே! இன்னும் கொஞ்சம் இடம் இருக்கே. இன்னும் கொஞ்சம் போடுவோம்.” இப்படியே இடம் இருக்கிறது என்று தட்டில் இருந்த மொத்தத்தையும் முதல் சுற்றுக்கே திணித்து விட்டேன்.


“சூப்பர்! ஒரே சுத்துல வேலை முடிஞ்சிரும்‌. அம்மா பாராட்ட போறாங்க.” என்று நினைத்துக் கொண்டே மிக்ஸியை சுற்றியது தான் தாமதம் நான் அழுத்தி வைத்த அழுத்தம் தாங்காமல் மிக்ஸி மூடி பறந்து போக‌, என் அம்மா வேறு தரையில் உட்கார்ந்திருந்தாரா அவரின் முடியெல்லாம் பசுமையாக மாறி விட்டது.

"ஆத்தாடி! இன்னிக்கு இருக்கு கச்சேரி." எனக்கு பயத்தில் கை கால் எல்லாம் உதர ஆரம்பித்து விட்டது‌‌. ‌

அம்மாவோ நிமிர கூட இல்லை. ஹாலிலிருந்து அப்பா வந்து “பரவாயில்லையே! உங்கம்மாக்கு பச்சை கலர்‌ Dye கூட நல்லாருக்கு” என்றாரே பார்க்கனும் அம்மா குபீர் என்று சிரித்து விட்டார்.

எனக்கு சிரிக்கலாமா என்று கூட சரியாக தெரியவில்லை

ஹி…. ஹிஹி… ஹிஹிஹி…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக