புதன், 9 அக்டோபர், 2019

எனது நண்பரின் மகளின் உணர்வு ....

பெற்றோரின் அருமையை எந்த வயதில் புரிந்து கொள்ள முடிந்தது?

கல்லூரியில் படிக்கும் வரையில் தினமும் காலையில் தேநீர் கோப்பையுடன் தான் எழுப்புவாள் என் அம்மா.

தினசரி நாளிதழை படித்துக்கொண்டே தேநீர் அருந்திவிட்டு, கல்லூரிக்கு தயாராகி சென்றுவிடுவேன் நான்.

வீட்டிலிருந்த வரையிலும் ஒரு சிறு உதவியும் செய்ததில்லை என் பெற்றோருக்கு.

மாலை வீட்டுக்கு வந்ததும் மீண்டும் தேநீர் கையில் கொடுக்கப்படும். எனக்கு தெரிஞ்சி ஒரு துரும்பையும் வீட்டில் உள்ள போது எடுத்து போட்டதில்லை.

மிஞ்சி போனால் என்றாவது ஒரு நாள் டீ போடுவேன். அதுவும் என் பிள்ள என்னா டேஸ்ட்டா டீ போடும், அப்படினு அம்மா சொன்னால் தான். சான்ஸே இல்ல அந்த ரோஸ்மில்க் டீ போடுவியே? அது போட்டு தாயேன் என்று வீட்டில் இன்னொருவரும் புகழ்ந்தால் தான்.

எனக்கு தெரிஞ்சி நான் செய்த ஒரே வேலை என் துணியை அயர்ன் பண்ணுவது மட்டும். அப்புறம் பயங்கரமா அரசியல் பேசுவது.

வெங்காயம் கூட உரிச்சி குடுத்ததில்லை. தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் மட்டும் ஒரு சொம்பை எடுத்துட்டு ஓடுவேன்.

வீட்டை விட்டு சென்ற பின் தானே தெரிந்தது அம்மா அப்பாவின் அருமை எல்லாம்.

கொஞ்சமா? நஞ்சமா? என் தெய்வமே.

அழாத நாள் இல்லை.

ம்மா என்னமா? சப்பாத்திக்கு சென்னா வச்சிருக்க? ஒரே போரு…அதுக்கு பதிலா சிக்கன் வச்சிருக்களாம்ல? … அப்படினு வக்கனையா கேட்டதெல்லாம் நினைச்சி ஒரு கண் வழியே அழுது கொண்டே வெங்காயம் வெட்டிய நாட்கள். ஆமா, நம்ம ஊத்துற தோச கூட ரவுண்டா வராது. உலக வரைபடத்தையே பார்க்கலாம் நாம போடுற சப்பாத்தியில. வட்டமாக வந்ததே இல்ல. அப்படியே அந்த சப்பாத்தி கட்டையாலயே என் மண்டையில போட்டுப்பேன். ஆமா, அம்மாவின் அருமை தெரிஞ்சிடுச்சில.

2 முட்டை வாங்கிட்டு வாம்மா.

அப்ப பத்து ரூவா கமிஷன் குடு. வீட்டுக்குள்ளயே கொள்ளையடித்த கும்பல் நானெல்லாம்.

வேலை தேடும் போது, எதுக்கு முட்டை எல்லாம் வாங்கி காச விரயம் பண்ணனும்னு இருந்த 20 ருபாயையும் பத்திரப்படுத்திய போது உண்மையிலே உரக்க உணர்ந்தேன்.

அப்பவெலலாம், காபியை கையில் கொடுத்தால் தான் கண்ணே திறப்பேன்.

அம்மா: பல்ல விளக்கிட்டு வந்து தான் குடியேன்..

நான்: நீ ஒரு நாள் பல்லு விளக்காம குடியேன்.

அம்மா: ச்சீ மனுஷன் குடிப்பானா?

நான்: அப்படி தான் எனக்கும்.

இந்த விதண்டாவாதம் பண்ணியதன் விளைவை எல்லாம் பேச்சுலர்ஸ் PG ரூம்ல ஒரு வாய் டீ, காபியே இல்லாமல் வாழ்ந்த போது தான் அறிந்தேன். சில நேரம் அழுகை கூட வரும்.

கல்லூரியில் இருந்து திரும்ப வர, அரை மணி நேரம் தாமதமானாலும் யாரேனும் ஒருவர் பேருந்து நிலையத்தில் காத்திருப்பார்.

இப்ப, எத்தனை கால தாமதமானாலும் என் வீட்டு கதவை நான் தான் போய் திறக்கிறேனே இப்பொழுது எல்லாம். எனக்கு காத்திருக்க ஒருவரும் இன்றில்லையே என்றெண்ணும் பொழுது எல்லாம் எப்படி வேதனையா இருக்கும் தெரியுமா?. அப்பா, அம்மா வேற லெவல் அக்கறைங்க நம்ம மேல.

நல்ல அடை மழை, ஊரில் பவர் கட். கல்லூரி பேருந்திலிருந்து இறங்குற இடத்தில குடையோட நிக்குறாங்க எங்க அம்மா. தனியா அந்த பேருந்து நிறுத்தத்தில். கண்ணுக்குள்ள நிக்குது அந்த தருணம்.

இப்ப, தொப்பு தொப்புனு நனஞ்சிட்டு சில நாட்கள் வேலைக்கு போயிருக்கேன். அம்மா மட்டும் தான் கண்ணுக்குள்ள நிப்பாங்க. அந்த அம்மாவை அன்னைக்கு நான் celebrate பண்ணல. நன்றி கூட சொல்லல. ச்சே என்ன ஒரு சுயநலவாதியா இருந்துருக்கேன். நன்றிம்மா.

கடைசி நாளில், குடும்பமா உட்கார்ந்து நமக்கு ரெக்கார்ட் நோட் எழுதி தருவாங்க. அம்மாவும் சூடா ஏதாச்சும் செஞ்சி தருவாங்க. நல்லா சாப்ட்டேன். இன்று ப்ராஜெக்ட் டெட் லைன் என்று தேநீர் இடைவேளை கூட எடுக்காமல் வேலை செய்கையில் கண்ணில் வழியும் நீரை, கண்ணாடியை தூக்கி விட்டு துடைத்து செல்கையில், என் சுமையை என்னோடு சேர்ந்து சுமந்த குடும்பத்தை மட்டும் தான் நினைக்க தோன்றும். அப்படியே Rest room - ல போய் ஓஓஓ… னு கத்தணும்னு தோணும். ஆனால் அதுக்கு நேரம் இருக்காது. குடும்பம் தி கிரேட். அவர்களின் அருமையோ அருமை.

மடிச்சி வச்ச துணியை கொஞ்சம் பீரோவுல எடுத்து வைம்மா.

ஏம்மா … எப்ப பார்த்தாலும் வேலை வாங்கிட்டே இருக்க?

என்று முணுமுணுத்துக் கொண்டே வீட்டில் வேலை செய்த நாங்கள் தான், மேலதிகாரிகளின் வேலையையும் சேர்த்து செய்கிறோம். வீட்ல தவிடு இடிக்காத நாங்கள் ஊருக்கு இரும்பு இடிக்கையில் தோணும் அப்பா அம்மாவின் அருமை.

நான் எங்கள் தெரு முனைக்குள் வரவும் எங்கள் வீட்டு ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் ஓடி வந்து ரெண்டு காலையும் உயர தூக்கி என் தோள் மேல் போடும். சரிமா சரிமானு தடவி விட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன். இப்ப நான் செத்து கிடந்தாலும் என் வீட்டு ஓனர் எட்டி பார்க்க மாட்டார்கள்.. நல்லாவே தெரிஞ்சிகிட்டேன் அம்மா அப்பா அருமை மட்டுமின்றி என் வீட்டு நாய் குட்டியின் அருமை வரைக்கும்.

என் புள்ள கண்ணுல கண்ணீரை இன்னொரு முறை பார்த்தேன், உங்க கல்லூரிக்கு வக்கீலோட தான் வருவேன் என்று என் பக்கமே நின்ற என் பெற்றோரின் அருமையை, என்ன கால் பேசிருக்க நீ ? எல்லா காலும் fatal என்று என் Quality Checker திட்டி அழவைத்து அனுப்பும் போதெல்லாம் உணர்ந்தேன்.

வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும்னு சொல்லுவாங்க. என் பெற்றோரின் அருமை வீட்டை விட்டு போன பிறகு தான் தெரிந்தது.

நியூட்டனின் மூன்றாம் விதி நம் வாழ்வில் செயல்படும் போது வலிகள் அதிகமாக இருக்கும்.

அனுபவத்தில் சொல்றேன். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல அம்மா அப்பாவின் அருகில் இருக்கும் போதே அவர்கள் அருமையை அறிந்து நடந்துகொள்ளுங்கள்.

கண் கெட்ட பிறகு சூரிய அஸ்தமனம் எதுக்கு?

நன்றி

அப்பாவுக்கும் அம்மாவுக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக