ஞாயிறு, 27 அக்டோபர், 2019

மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்குவது

குடும்பத்தில் நம்மைச் சார்ந்திருக்கும் மனைவி, குழந்தைகள் ஜடப் பொருட்கள் அல்ல அவர்களுக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் உண்டு. 'நம்மைச் சார்ந்திருப்பவர்கள்' என்ற வாக்கிலேயே அவர்களுக்கு நம்முடைய வழிகாட்டுதலை எதிர்நோக்கியிருப்பவர்கள் என்பதும் தெளிவாகிறதே. 'குழந்தைகள் விஷயத்த எங்கிட்ட சொல்லாதே அத நீயே பாத்துக்கோ' என்று மனைவியிடம் வேண்டுமானால் விட்டுவிடலாம் ஆனால் மனைவியின் குறைகளை நம்மை விட்டால் யாரால் தீர்க்க முடியும் என்பதை ஆண்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.

ஒருநாளில் பத்து மணி நேரம் அலுவலகத்திற்கு ஒதுக்குவதில் ஆண்கள் யாரும் முறையிடுவதில்லை. ஆனால் ஒரு மணி நேரம் மனைவி, குழந்தைகளுக்கு ஒதுக்குவதென்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. 'ஏங்க சனி, ஞாயிறுலயாவது பசங்க என்ன படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, அவங்களுக்கு என்ன வேணும்னு ஏதாச்சும் கேக்கறீங்களா?' இந்த முறையீடு இல்லாத வீடுகள் இன்று உண்டா என்று கேட்கும் அளவுக்கு சனி, ஞாயிறிலும் அலுவலகத்தை தஞ்சம் அடைவது அல்லது அலுவலக நண்பர்களுடன் வெளியில் செல்வது ஆண்களின் வழக்கமாகி வருகிறது.

பணிக்கு செல்லும் பெண்களுள்ள குடும்பங்களிலும் அலுவலக பணிகளுடன் வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளுடைய தேவைகளை கவனித்துக்கொள்வது பெண்களின் கடமையாகிவிடுகிற அவல நிலை இன்று பல குடும்பங்களில் காணப்படுகிறது என்றால் மிகையல்ல.

ஆண்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் என்னதான் வெற்றியடைந்தாலும் மாலையில் நீங்கள் திரும்புவது மனைவியிடம்தான். இதை ஒருபோதும் மறக்கலாகாது. அலுவலகத்தில் நீங்கள் அடையும் வெற்றியை உண்மையான மகிழ்ச்சியுடன், பெருமையுடன் கொண்டாடி மகிழ்வது உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகள்தான். அவர்களுடைய தேவைகளை, மனத்தாங்கல்களை கண்டும் காணாததுபோல் இருக்கும் ஆண்களின் அலுவலக வெற்றிகள் காணல் நீர் போன்றவையே.

இளம் வயதில் நேரமின்மையை காரணம் காட்டி குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற மறக்கும் குடும்பத்தலைவனை அவனுடைய முதிய வயதில் குடும்பத்தினரும் மறந்துவிடக் கூடிய சூழல் உருவாகலாம்,ஜாக்கிரதை!

இங்கு குடும்பத்தினரின் 'தேவைகள்' என்பது அவர்களுடைய பொருளாதார தேவைகளை மட்டும் குறிப்பிடவில்லை. அன்பு, பாசம், பராமரிப்பு எனப்படும் உணர்வுபூர்வமான தேவைகள் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அளிக்கக்கூடிய பொருளாதார தேவைகளை விடவும் முக்கியமானவை. ஒரு கணவன் அல்லது தகப்பனிடம் இருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய இத்தகைய தேவைகளை மனைவியோ மக்களோ வேறொரு ஆணிடமிருந்து பெற முடியுமா என்ன?

ஆங்கிலத்தில் Quality time என்பார்கள். அதாவது இவ்வளவு நேரத்தை என் குழந்தைகளுக்கென தினமும் ஒதுக்குகிறேன் என்றால் போதாது. எவ்வளவு நேரம் குழந்தைகளுடன் செலவிட்டேன் என்பதை விட அதை எப்படி செலவிட்டீர்கள் என்பதுதான் முக்கியம். Quality என்பதை 'தரமுள்ள' என புரிந்துக்கொள்வதை விட 'பயனுள்ள' என புரிந்துக்கொள்வது நலம் என கருதுகிறேன். தந்தை என்ற நிலையிலிருந்து குழந்தைகளின் நண்பன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே, அதாவது நம் குழந்தைகளுடன் குழந்தையாக மாறினால் மட்டுமே, அவர்களுடன் நாம் செலவிடும் நேரம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன், உங்களுக்கும் அது எத்தனை புத்துணர்ச்சியை அளிக்கிறது என்பதை உணர்வீர்கள்! பெண்களும் தங்களுடைய தாய் அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்து குழந்தைகளின் தோழியாக மாறினால் மட்டுமே அவர்களுடைய செலவிட்ட நேரத்தின் உண்மை பொருளை உணர முடியும்.

கணவன் தன் மனைவிக்காக ஒதுக்கும் நேரமும் அப்படித்தான். கணவன் என்கிற நிலையிலிருந்து காதலன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே மனைவியுடன் செலவிடும் நேரம் பயனுள்ளதாகவும் புத்தணர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். இது மனைவிக்கும் இது பொருந்தும்.

மனைவி, குழந்தைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்களுடைய உணர்வுபூர்வமான தேவைகளை நிறைவேற்றும் கணவர்களால் மட்டுமே வீட்டு நிர்வாகத்தில் வெற்றி காண முடியும் என்பதும் அவர்களால் மட்டுமே அலுவலக நிர்வாகத்திலும் வெற்றியடைய முடியும் என்பது உறுதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக