வியாழன், 22 மார்ச், 2018

எனது உலகம் ...ஷியாம்

(உலக தண்ணீர் தின சிறப்புக்கதை - மார்ச் 22)

இந்திரன் கோபமாக இருந்தான். இந்த நாட்டை விட்டுமட்டுமல்ல இந்த பூமியைவிட்டே எங்கேனும் போய்விட முடிவெடுத்தான். சென்னை அருகில் இருந்த ராக்கெட் ஸ்டேஷனுக்கு சென்றான். பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. எப்படியும் இரண்டு வருடம் ஓட்டிவிடலாம். ராக்கெட் ஸ்டேஷனில் ஒரே இரைச்சலாக இருந்தது. “மார்ஸ்..” “மெர்க்குரி” “வீனஸ்.” “ஜூப்பிட்டர்..” “விரைவு ராக்கெட்” என கத்திக்கொண்டிருந்தார்கள். “சூரியனுக்கு போற ராக்கெட் இல்லையா? “ என்று கேட்டான் இந்திரன். “வண்டி பழுதடைந்து உள்ளது” என்று பதில் வந்தது. சிகப்பு நிறத்தில் அழகான ஓவியத்துடன் இருந்த ஜூப்பிட்டர் செல்லும் ராக்கெட் அருகே சென்றான் இந்திரன்.

ஐந்து ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தான். திரும்பி வரவும் டிக்கெட் எடுக்க சொல்லி பைலட் கெஞ்சினார். ஜூப்பிட்டருக்கு யாரும் வரவதில்லை, ராக்கெட் ஓட்ட கூட காசுகிடைப்பதில்லை என வருத்தப்பட்டார். அந்த ராக்கெட்டிற்கு அவர் தான் பைலட் (ஓட்டுனர்), நடத்துனர் எல்லாம்.  கால்மணி நேரம் காத்திருந்தனர். வேறு பயணிகள் யாருமே வரவில்லை. வேறு வழியில்லாமல் வண்டி கிளம்பியது. ராக்கெட் ஓட்டுனர் அருகிலேயே அமர்ந்துகொண்டு பேசி வந்தான் இந்திரன். ஜூப்பிட்டருக்கு போக எவ்வளவு தூரம், அங்கே என்னவெல்லாம் பார்க்கலாம் என கேட்டுக்கொண்டே வந்தான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க மட்டும் ஓட்டுனர் கூறினார்.

ஜூப்பிட்டருக்கு பூமியில் இருந்து சுமார் நான்கு மணி நேரத்தில் போய்விடலாம். ராக்கெட் அதிவேகத்தில் செல்லும். அங்கே இந்திரனுக்கு பிடித்த விஷயமே அங்கே இருக்கும் நிலாக்கள் தான். நம்ம பூமிக்கு ஒரே ஒரு நிலா, ஆனால் ஜூப்பிட்டர் கோளுக்கு மொத்தம் 67 நிலாக்கள். இன்னும் கூட அதிகமாக இருக்கலாம் என நினைக்கின்றார்கள். தன் பையில் இருந்து ஒரு ஆப்பிளை எடுத்து ”சாப்பிடுகின்றீர்களா?” எனக்கேட்டான். ”இல்லை நான் சாப்பிட்டு இரெண்டு வாரம் தான் ஆகின்றது அடுத்த வாரம் தான் அடுத்து சாப்பிடுவேன்” என்றார். ”நான் பழங்களை சாப்பிடுவதில்லை, வெறும் சாப்பாட்டு மாத்திரைகள் தான்” என்றும் சொல்லிவிட்டார்.

நான்கு மணி நேரத்தில் ஜூப்பிட்டர் வந்துவிட்டது. “இந்திரன் சார், ஜூப்பிட்டர் வந்துவிட்டது. அங்க பாருங்க எவ்வளவு நிலாக்கள்” என இறக்கிவிட்டார். ராக்கெட்டின் பின்புறம் ஏதோ சத்தம் அதிகமா வருகின்றது. வரும்போது ஒரு நிலாவில் உரசிவிட்டது.  அதனால் இன்று இரவு ராக்கெட் இங்கே தான் நிற்கும் என கவலைப்பட்டார் பைலட். தன் பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பைலட்டுக்கு கையசத்துவிட்டு நகரினை நோக்கி நடந்தார். நகரின் பெயர் கிண்டர்கா. இறங்கி நடக்க ஆரம்பித்ததும் அவன் பின்னாடி சிலர் தொடர்வதை கவனித்தான். ஆரம்பத்தில் நான்கு பேர் இருந்தார்கள். பின்னர் அது பத்தாக உயர்ந்தது. பத்து இருபதானது. இருபது ஐம்பதனாது. இப்படியாக சுமார் முன்னோறு நபர்கள் இந்திரனை பின் தொடர்ந்தார்கள். வேகமாக நடந்தான். அவர்களும் வேகமாக நடந்தார்கள். ஓடினான். அவர்களும் ஓடினார்கள். வேகமாக ஓடினான் அவர்களும் வேகமாக ஓடினார்கள்.

குன்று போல இருந்த இடத்தில் நின்றான். “உங்களுக்கு என்ன வேண்டும்? பார்த்தால் நன்றாக உடை உடுத்தி இருக்கின்றீர்களே. இந்தாங்க என்னிடம் இருக்கு அதி நவீன மொபைல் ஃபோன்.” வேண்டம் என சொல்லிவிட்டார்கள். தன் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்துக் கொடுத்தான். வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். இப்படியாக ஒவ்வொரு பொருளாக கொடுத்தான் அனைத்தையும் மறுத்துவிட்டார்கள். ஐயோ என்னதாங்க வேண்டும் என்றான். எல்லோர் விரலும் ஒரு இடத்தை காட்டியது. அது அவன் பையில் இருந்த தண்ணீர் பாட்டில். “இதுவா??” என தூக்கி வீசினான்.

அவ்வளவு தான் தாமதம். பரபரவென எல்லோரும் நீண்ட வரிசையில் நின்றார்கள். தலைவன் ஒருவன் வரிசைப் படுத்தினான். மொத்தம் எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்று நவீன கருவி மூலம் கணக்கிட்டார்கள். தண்ணீர் அளவினை கணக்கிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் 2மில்லி.லிட்டர் தண்ணீர் வருமாறு ஏற்பாடு செய்தார்கள். சிலர் நேராக நாக்கில் விடச்சொன்னார்கள். சில குட்டி பாட்டில்களில் அந்த 1 சொட்டு நீரை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

இதையெல்லாம் பார்த்த இந்திரனுக்கு பகீர் என்று இருந்தது. ராக்கெட் இருந்த திசைக்கு ஓடினான். நல்லவேளை ராக்கெட் அங்கேயே தான் இருந்தது. பைலட் சிரித்தபடி காத்திருந்தார்.

“ஏன் சார்?”

“இங்கயும் தண்ணி நிறைய இருந்துச்சு, யாரும் ஒழுங்கா பயன்படுத்தல. அது தான் நிலைமை இப்படி இருக்கு”

சீக்கிரம் இந்தியாவுக்கு ராக்கெட் விடுங்க என்றான் இந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக