வியாழன், 5 மார்ச், 2020

செல்வராகவனின் யாமினி!
செல்வராகவன் உருவாக்கிய கதாநாயகிகளில் 'யாமினி' தனித்துவமானவள். "அடிடா அவளை! வெட்றா அவளை! தேவையே இல்லை !"என்கிற பெண் வெறுப்பு மட்டுமே செல்வராகவன் இல்லை. மயக்கம் என்ன ? யாமினியை கூர்ந்து கவனித்தால், கார்த்திக்கையும் அவன் மீதான காதலையும் தவிர வேறு எதுவும் தெரியாது பராபரமேயென்று தீக்குள் விரல் வைப்பவள்.
எனக்கு வேற எதுவுமே தெரியாது என்று தன்னைச் சரணடைபவனை அவன் இயல்புகள் சீர்குலையாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் யாமினி ஒரு ஆழ்ந்த காதலின் அடையாளம். தான் நேசித்தவன் வாழ்வின் விரக்தியான சூழலுக்கு தள்ளப்பட்டு, போதைக்கும் மனபிறழ்விற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் போது அவனைத் தாங்கிக்கொள்வதற்கு காதலை தாண்டிய ஒரு தாயுள்ளம் தேவை.மெளனங்களால் வெளிப்படுத்தப்படும் கோவங்கள் காதலிப்பவன் மீதிருக்கும் இன்னொரு நேசமென்று யாமினி உணர்த்தும் காதல் 'அக்மார்க்' செல்வராகவத்தனம்.

கார்த்திக் போன்ற இளைஞர்கள் லட்சியத்தில் தோல்வியுற்று தெருவிற்கு நாலுபேர் குப்புற கவிழ்ந்து கிடக்கிறார்கள். சமூகத்தில் கார்த்திக் போன்றவர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், அவர்களை தொட்டு தூக்கி தலையை தடவிக்கொடுத்து மடியில் போட்டு மருத்துவம் பார்க்கும் யாமினி போன்றோர் அத்தி பூத்தாற் போல் அபூர்வமாகத்தான் தென்படுகிறார்கள். ஒரு தோல்விக்கே துவண்டு, காதலித்தவள் மீது ப்ரியத்தை காட்டுவதற்கு கூட மனமில்லாமல், காதலிக்கு யாருமற்ற தனிமை உலகத்தை உருவாக்கும் கார்த்திக் மன்னிக்க முடியாதவன். அவனை எத்தருணத்திலும் கைவிடாத யாமினி தான் சிறப்புமிக்கவளாக உருவாகிறாள்! இறுதியாக ஒரு ஆண் வாழ்க்கையில் முதலாவதாக நுழைந்து முதலாவதாக வெளியேறுபவள் எவளும் யாமினி இல்லை. இறுதியாக நுழைந்து இறுதிவரையில் இருப்பவளே செல்வராகவனின் யாமினி.
என் யாமினியும் கூட..!

https://youtu.be/dX3G18CYibc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக