சனி, 7 மார்ச், 2020

பெண்கள் தின வாழ்த்துகள்....

. பெரும்பாலும் அவை பெண்களை ‘’மாதா நீயே சக்தி’’ டைப்பில் தூக்கி நிறுத்தி வழிபடுகின்றன. இது மிக வசதி. திருவிழாவன்று பிரசாதம் படைத்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் போய்விடலாம். அடுத்த வருடம் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்...

இன்னமும் மீதி டைப் வாழ்த்துகள்... அம்மாவாய், தங்கையாய், மனைவியாய், மகளாய் சேவை செய்யும் பெண்களே, நீங்கள் இன்னமும் நூறாண்டு வாழ்ந்து சேவையைத் தொடருங்கள் என்கிற ரீதியில் இருந்தன... இவையெல்லாம் உங்களை சார்ந்திருக்கும் பெண்களை மகிழ்ச்சிப்படுத்தி விடும் என நினைக்கிறீர்களா நண்பர்களே!

இங்கே நம் குடும்ப அமைப்பில், பெரும்பாலும் ஆண் பெண்ணை அடக்கி ஆளுகிறான். விதிவிலக்காக சில குடும்பங்களில் பெண்கள் இந்த அடக்குமுறையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மாற்றாக, ஆண், பெண் சமத்துவத்தின் தேவையை இந்த நாட்களிலாவது புரிந்து கொள்ள முற்படுவோம்.

ஒரு பெண் எப்போது தன்னை மகிழ்ச்சியாக உணரத் தொடங்குகிறாள்? அவள் தனக்கென எதையாவது செய்யத் தொடங்கும்போது தான். சுய பொருளாதாரத்திற்காக எதோ தேர்வெழுதி வேலைக்குப் போவது மட்டுமல்ல, அவளுக்கான வாழ்வு. அவள் கனவுகளை அவள் பின் தொடரும் வாய்ப்புள்ள ஒரு வாழ்வு. ஒரு பயணம், இசை, தன் நண்பர்கள் என தனக்காக அவள் செலவழிக்க ஒரு வாரத்தில் சில மணி நேரங்களேனும் வாய்க்கக் கிடைக்கும் ஒரு வாழ்வு. அடுக்களையில், குழந்தை வளர்ப்பில் அவள் வெந்து சாகாமல் அதை பகிர்ந்து கொள்ளும் மனதுள்ள குடும்பம் அமைகின்ற வாழ்வு..

திருமணத்திற்கு பிறகு தவறாமல்... ‘’24 மணி நேரமும் நொச்சு நொச்சுன்னு என்னைப் போட்டு படுத்துறாடா ‘’ என முணுமுணுக்கு கணவன்கள் ஒன்றை யோசித்திருக்கிறீர்களா? உங்கள் லைசன்ஸை அவள் போட்டுக் கொள்ளும் முன் அவளுக்கென ஒரு வாழ்விருந்தது. அதில் உங்களைத் தவிரவும் நபர்கள் இருந்தார்கள். சந்தோஷங்கள் இருந்தன. நீங்கள் தான் அதில் இருந்து முற்றாக அவளைத் துண்டித்தீர்கள். நீங்கள் ஒருவரே அவள் உலகமாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தீர்கள். தனக்கான உலகின் மீது தொடர் கவனம் இருப்பது இயல்பு தான் இல்லையா? இந்த உறவு உங்களுக்கே இவ்வளவு சலிப்பைத் தந்தால், அவளது சலிப்பின் கனத்தை யோசித்திருக்கிறீர்களா?

அன்பு, காதல் என்பதெல்லாம் நீ எனக்கு மட்டுமேயானவள் என்பதில் அல்ல. நீ எப்படியாக இருந்தாலும் என்னால் உன்னை நேசிக்க முடியும் என்பதில் தான். என் கனவுகளை நான் பின் தொடர்கிறேன், உன் கனவுகளை நோக்கி நீ ஓடு.. ஆசுவாசப்படுத்த நேரம் கிடைக்கும்போது நாம் இணைந்து மகிழலாம் என்பதில் தான் சமத்துவம் இருக்கிறது. இதையெல்லாம் பேசுவதற்கு ஒரு பெண் எந்த வயதிலும் பொருளாதாரத்தில் யாரையும் சாராமல், தனித்திருத்தல் மிக மிக அவசியம் ஆகிறது. பொருளாதாரம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு தன்னைப் பற்றி யோசிக்கும் வலுவைத் தரும்...

தாய்மை, பெண்மை, கண்மை என்கிற வார்த்தைகளை எல்லாம் தூக்கிக் கிடாசி விட்டு, பெண்களை அவர்களாக இருக்க அனுமதியுங்கள் தந்தைகளே, கணவர்களே, அண்ணன்களே...

’’நான் காலேஜ்ல இருந்து, ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போகும்போது காஃபி கொடுக்க அம்மா இருக்கணும், என் ஆஃபீஸ் லஞ்ச் பாக்ஸ்ல அம்மாவோட சாம்பார் சோறு இருந்தாத்தான் செத்தா மோட்சம் கிடைக்கும்’’ என்றெல்லாம் ரொமாண்டிஸைஸ் செய்யாமல் அம்மாவிற்கு உங்களைத் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என அறிய முற்படுங்கள்...

அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கும் உங்கள் மனைவிஅன்றைய இரவில் பத்திரமாக இருப்பாளா என்கிற பயத்தில் தூங்காமல் விழித்திருக்கும் உங்கள் செக்யூரிட்டித் தனத்தின் பெயர் காதல் அல்ல. நம்பிக்கையின்மை என்பதை உணர முற்படுங்கள்.

’’எங்கம்மா கிட்ட நான் அஞ்சு வயசு வரை பால் குடிச்சேன், நீ குழந்தைக்காக ஒருவருஷம் வேலையை விட மாட்டேன்னு சொல்றதெல்லாம் ஓவர்’’ என வெடிக்கும் முன் அவளது இந்த வேலைக்காக அவளது இருபத்தைந்து, முப்பது வருடங்களை செலவழித்திருக்கிறாள், உங்களைப் போலவே இதே வேலைக்காகத் தான் ஒரு மாநகர் நோக்கி அவள் நம்பிக்கையுடன் பயணித்தவள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லா காலங்களிலும் மகள்களை தோள்களில் சுமக்க இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் அப்பாக்களே. உங்கள் முதுகுக்குப் பின்னே அவள் மறைந்து கொள்வதில் பெருமிதம் கொள்ளாதீர்கள். சுயமரியாதையுள்ள, தைரியமான பெண்ணாக அவளை வளர்த்தெடுங்கள்.

மிக சுருக்கமாக உங்களோடு உள்ள பெண்களை நம்புங்கள். நேசியுங்கள். சமமாக நடத்துங்கள். பெண் என்பதால் அவளுக்கு அதிகப்படியான மரியாதையோ, உதவியோ தேவையில்லை என்பதை உணருங்கள். ‘’அய்யோ பாவம் அவள் பெண்”’ என்கிற கரிசனமும், இரக்கமும் கூட தேவையில்லை.. சமத்துவம் அதுவே இன்றைய தேவை. வாட்ஸஅப்ப் , ஃபேஸ்புக்கிலேயே இத்தனை நல்லவர்கள் இருக்கும் உலகில் பெண்ணுக்கு என்ன அநீதி நடந்து விடப் போகிறது?

பெண்கள் தின வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக