வியாழன், 19 மார்ச், 2020


ஏன் எழுதுகிறேன்?

கணினி முன்னால் அமர்ந்திருக்க வேண்டிய பணியின் காரணமாகவும், தமிழ் தட்டெழுத்து நல்ல பயிற்சி இருப்பதாலும். 

எழுதும் காரணம்?

சமூக வலைதளங்களில், அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளில், வார இதழ்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் ஏதோவொன்று உத்வேகத்தை உருவாக்கும்.  ஒரு வார்த்தை அல்லது வாசகம் கிடைக்கும். எண்ணங்கள் சிந்தனையில் தத்தளிக்கும். முழுமையாக எழுதி விட முடிகின்றது..

எழுதாமல் இருந்தால்?

ஒன்றும் ஆகாது. பொழுது வெட்டியாய் நகரும். வாசித்த, பார்த்த விசயங்கள் எனக்குள்ளே இருக்கும். மன உளைச்சல் உருவாகும். எழுதுவதால் இரவில் படுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட முடிகின்றது





எழுதுவதால் என்ன பலன்?


ஆங்கிலத்தில் Passion என்ற வார்த்தைக்கு வேட்கை, ஆர்வம், உள்ளார்ந்த ஈடுபாடு, கட்டுக்கடங்கா உணர்ச்சி என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். குடும்பம், தொழில் இவை இரண்டு நம் வாழ்வின் ஆதாரம் என்றாலும் நமக்கு விருப்பமானது எது? என்றே தெரியாமல் இந்தியாவில் 90 சதவிகிதம் வாழ்ந்து மறைந்து விடுகின்றார்கள். கூடவே இதன் மூலம் உனக்குப் பணம் கிடைக்குமா? என்பதனையும் தவறாமல் கேட்கின்றார்கள். உங்கள் நரம்புகள் மூளையோடு பின்னிப் பிணைக்கப்பட்டது. மூளை மனதோடு ஒன்றிணைக்கப்பட்டது.

இவையெல்லாம் உங்கள் விருப்பங்களோடு தொடர்புடையது. மகள் மகன் விருப்பம், மனைவி விருப்பம், சொந்தங்கள் விருப்பங்கள் எதுவும் உங்கள் ஆழ்மனம் வரைக்கும் செல்லாது. கடமை என்கிற ரீதியில் உங்களை இயங்க வைக்கும். விருப்பம் இருந்தும் ஈடுபட முடியாமல் ஏக்கமாக இருக்கும் ஒவ்வொரு ஆர்வமும் உங்களின் கடைசிக்காலத்தில் கழிவிரக்கமாக மாறும். ஆரோக்கியத்தைப் பாதிப்படையச் செய்யும். மற்றவர்கள் மேல் பொறாமை கொள்ளச் செய்யும்.  பொம்மை செய்வது கூட ஒரு ஆர்வம் தான்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் "பணம் தேடும் பறவையாக" இருப்பது தவறில்லை. "கடமைகளைக் காக்கும் கண்ணியவானாக" வாழ்வதும் குற்றமில்லை. உங்களுக்கான ஆழ்மன விருப்பங்களையும் அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.  Passion பணத்தோடு தொடர்புடையது அல்ல. மனத்தோடு தொடர்புடையது. இப்போது "பகவான் கொரானா" வேறு அருள் புரிந்து கொண்டிருக்கின்றார். நாளை என்ன நடக்கும்? என்று தெரியாது அல்லவா?


"லைக் அரசியல்" என்றால் என்ன?

தமிழகத்தில் தனி மனித துதி முன்னெடுத்த கட்சி உருவாக்கிய பாணி இன்று ஃபேஸ்புக் வந்து வரைக்கும் நிற்கின்றது. ட்விட்டரில் உச்சமாய் நிற்கிறது. இணையம் வேறு. எதார்த்தக் களம் வேறு. உணர்ந்து கொண்டவர்கள் மனச் சோர்வு அடைய மாட்டார்கள். எதிர்மறைகளை மட்டுமே வைத்து வளர்ந்தவர்கள் இன்று வரையிலும் அதனைக் கொள்கையாகவே கடைப்பிடித்து வருவது வியப்பல்ல. கொடூரமானவர்களின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு உழுது மனதிற்குள் புதைத்து மூடிவிட்டு முன்னேற வேண்டும். எழுதுபவர்களின் பெயர், அவர் ஆதரிக்கும் கொள்கை பொறுத்து இங்கு ஒவ்வொன்றும் விருப்பக்குறியீடு (லைக்) ஆக மாறுகின்றது. இதில் பலரும் சோர்ந்து விடுகின்றார்கள். வலைபதிவில் விமர்சனங்கள் வருவதில்லை என்று எழுதுவதை நிறுத்துவதைப் போல. வாழ்க்கையில் மட்டுமல்ல. எதிர்ப்புகளை, ஏளனங்களை, அவமானங்களை  அடித்து நொறுக்கி முன்னேற கற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள்  விரும்பும் பயணத்தின் எல்லையைத் தொட முடியும்.

ஃபேஸ்புக் குறித்து உங்கள் கருத்தென்ன?

90 சதவிகிதம் அலைபேசியில் தான் வாசிக்கின்றார்கள். பார்க்கின்றார்கள். அலைபேசி வாசிக்க உகந்த கருவி அல்ல. ஆழமான விசயங்களைப் பொறுமையாக வாசித்து உள்வாங்கவும் முடியாது. எண்ணம் மாறும். வேறுபக்கம் நம்மை நகர்த்திவிடும். முழுமையாக வாசிக்கக்கூடியவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள். தடவிக் கொண்டே செல்பவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். அடுத்தவர்களைக் கவனிப்பவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். "டோலி உங்கள் பதிவு சூப்பர்" என்று ஜொள்ளு விட்டு நூல் விடக் காத்திருப்பவர்கள் மிக மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். "டோலர் நாம் சமூகத்தைப் புரட்டிப் போட்டே ஆக வேண்டும்" இணையத்தில் கொள்கை பேசும் கூட்டமும் அதிகமாகவே உள்ளது. இவன் எப்போது சிக்குவான்? என்று எண்ணம் கொண்டவர்கள் மிக மிக மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இவன் நம் கட்சிக்கு எதிரானவன் என்று கட்டம் கட்டும் உளுத்துப் போன பருப்புகளும் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்


எழுதியவற்றைச் சந்தைப்படுத்துவது எப்படி?

வலையில் எழுதியவற்றை இலவச மின்னூல்கள் வழங்கும் தளங்களின் வாயிலாக, அமேசான் மூலம், பிடிஎப் கோப்பாக மாற்றி Telegram App மூலம் இலவசச் சேவை செய்து கொண்டிருக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் மூலமாக என்று பலவகையில் எழுத்து பலருக்கும் சென்று சேர்ந்து விடுகின்றது. எழுதிய 75 சதவிகிதம் கோப்பாக மாற்றப்பட்டுள்ளது.

எழுதுவதன் மூலம் வருமானம் உண்டா?

அமேசான் மூலம் 100 நாளைக்கு ஒரு முறை ரூபாய் 300 வருகின்றது. அது சேமிப்பு வங்கிக் கணக்குக்கு "குறைந்தபட்ச கையிருப்பு" என்ற மத்திய அரசின் புனிதக் கொள்கைக்கு என்னைப் பலியாகாமல் தடுத்து வைத்துள்ளது. அண்டார்ட்டிகா கண்டம் தவிர்த்து உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் எனக்களிக்கும் 300 கோடி போலவே எனக்குத் தெரிகின்றது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக