வெள்ளி, 13 மார்ச், 2020


ஷியாம் சுதிர் சிவகுமார் ....சிகை அலங்காரம்....!(கோவை -வடவள்ளி )
8 வருடங்களுக்கு முன்பு என் மகன்  5 வது வயதில்  என் வீட்டு அருகே (வடவள்ளி ) சிகை அலங்கார நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். மகன் தன் வயதையொத்தவர்கள் முடி வைத்திருக்கும் நவீன அமைப்பில் வைக்காமல் சாதாரணமாகவே வைத்திருந்தான்.
சிகை அலங்கார நிலையத்திற்குச் சென்றவுடன், அதன் உரிமையாளர் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து தாங்கள் விரும்பிய அலங்காரத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள் என்றார். என் மகனோ ஏற்கனவே முடி திருத்தும் நாற்காலியில் அமர்ந்து உள்ளான்.  நான் அவனிடம், “நீ பேசாமல் இரு.. நான் அவரிடம் என்ன வடிவில் வெட்ட வேண்டும் என்று சொல்கிறேன்” என்றேன். அவனும் ஆமோதிக்கவே முடி வெட்டுபவரிடம் ஒரு புதிய சிகை அலங்காரத்தைக் காண்பித்து அப்படியே வெட்டச் சொன்னேன்.
என் மகனுக்கு நான் என்ன சொன்னேன் என்றே தெரியாது. சிறிது நேரத்தில் கத்தரிக்குப் பதிலாக முடி வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு சர் சர் என்று முடியைச் செதுக்கினார்…! என் மகன் என்னைப் பார்த்து…. “அப்பா எப்படிப்பா வெட்டச் சொன்னீர்கள்… என் தலையில் இருந்த முடி எல்லாம் தரைக்கு வந்து விட்டதே” என்று பரிதாபமாகச் சொன்னான். எனக்கோ சிரிப்பை அடக்க இயலவில்லை…!
சிறிது நேரத்தில் அந்த நவீன முடி வெட்டமைப்பில் என் மகன் வெளியே வந்தான். வெளியே வந்தவுடன் என்னிடம்…. “என்னப்பா இந்த மாதிரி ஒரு வடிவில் எனக்கு முடி வெட்ட வைத்து விட்டீர்கள்” என்று கோபமாகவே கேட்டான்…! நான் சொன்னேன்…. “ஏப்பா… நீ எப்பொழுதும் நீ விரும்பிய மாதிரியேதான் முடி அலங்காரம் செய்து கொள்கிறாய்… இந்த முறை மட்டும் அப்பாவிற்குப் பிடித்தது போல வெட்டிக் கொள்ளக் கூடாதா” என்றேன்… உடனே அவன்… “போங்கப்பா… என்னுடைய நண்பன் ஊரில் இது போல முடி வெட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் நண்பனுடைய அப்பா அவனை அடித்து வீட்டிற்குள்ளேயே வராதே என்று விரட்டி விட்டார்.. ஆனால்… ஒரு அப்பாவே இந்த மாதிரி முடி வெட்ட வைத்துக் கூட்டி வருவதை உங்கள் மூலமாகத்தான் பார்க்கிறேன்” என்றான்…!
நான் சொன்னேன்… “எல்லாத் தந்தையும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்… நான் ஒரு வித்தியாசமான தந்தை” என்றேன்…! வீட்டிற்குள் வந்ததுதான் தாமதம்… உடனே அவன் அலைபேசியில் மூலம் அவனுடைய அம்மாவைவீட்டுக்கு  தொடர்பு கொண்டு….. “அம்மா…. என் தலை முடியை அப்பா அலங்கோலம் செய்து விட்டார்கள்” என்று கூறினான்….! எனக்கோ மகனின் சிகை அலங்காரத்தைப் பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி….!
(நமக்குத்தான் சிகை அலங்காரம் செய்ய வழி இல்லாமல் போய் விட்டது… மகனை வைத்தாவது மகிழ்ச்சி அடைவோமே எனும் நப்பாசையும் கூடத்தான்…! அதற்கு அடுத்த முறை முடி வெட்டச் செல்ல என் மகன் என்னை அழைக்கவே இல்லை…! சுதாரித்து விட்டான்…!)

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக