கொங்கல் நகரம் ....
உடுமலை பகுதியில் சேதமாகும் வரலாற்று சின்னங்கள் : அகழ்வாய்வு செய்து பாதுகாக்க எதிர்பார்ப்பு...
உடுமலை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்கள் விழிப்புணர்வு இல்லாமல், மக்களால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தொல்பொருள் துறையினர் அகழ்வாய்வு செய்து, பெருங்கற்கால சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை மற்றும் தொல்பொருள் துறையினர் நடத்திய அகழாய்வில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல்திட்டைகள், பானை ஓடுகள், முதுமக்கள் தாழி ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால வரலாற்றை கண்டறிவதில், இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற சின்னங்கள் அரிதாகவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், உடுமலை அருகே கொங்கல் நகரம் பகுதியில், பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்கள் விழிப்புணர்வு இல்லாமல் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
கிராம மக்களால் மசராயப் பெருமாள் என அழைக்கப்படும் கோவில் அருகில் நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.இவ்வாறு, நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் பெரியளவில் நடந்த போரில் இறந்தவர்களுக்காக ஒரே இடத்தில் அமைக்கப்படுவதுண்டு. கல்திட்டைகளின் வரலாறு தெரியாமல் படிப்படியாக சிதைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் நான்கு பகுதிகளிலும் இருக்கும் பெரியளவிலான கற்கள் உடைக்கப்பட்டு, மசராயன் கோவில் சுற்றுச்சுவருக்கும், இதர பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களால் "பாண்டி வீடு' என அழைக்கப்படும் இந்த கல் திட்டைகள், அதன் முக்கியத்துவம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. கல்திட்டைகளில் புதைக்கப்படும் பழங்கால மண் பானைகள் ஏராளமாக இப்பகுதியில் கிடைத்துள்ளன. அவற்றை பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் பல முதுமக்கள் தாழிக்கள் இப்பகுதியில் உடைக்கப்பட்டுள்ளன. தற்போதும், ஒரு சில பணிகளுக்காக இப்பகுதியில் மண் எடுக்கும் போது, முதுமக்கள் தாழிக்கள் கிடைக்கின்றன. கறுப்பு, சிவப்பு நிறத்துடன் அழகிய வரிகளுடன் காணப்படும் இந்த பானைகள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும். நூற்றுக்கணக்கான கல் திட்டைகள் உடைக்கப்பட்ட நிலையில், தற்போது கொங்கல் நகரம் பகுதியில் 10க்கும் குறைவானவையே உள்ளன.முதுமக்கள் தாழிக்களும் உடைக்கப்பட்டு, சிறிய ஓடுகள் மட்டும் காணப்படுகின்றன. மசராயன் கோவிலின் பின்பக்கத்தில் காணப்பட்ட சுரங்கம் போன்ற சிறிய அமைப்பும் மண் மேடாக மாறியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் பெருங்கற்காலம் குறித்த வரலாற்று சின்னங்கள் குறைந்தளவு கிடைத்துள்ள நிலையில், இப்பகுதியில் மன்னர்கள் காலத்தில் பெரியளவிலான போர் நடந்ததற்கான வரலாற்று சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் ஒரே இடத்தில் இருந்த கொங்கல் நகரத்தில் தொல்பொருள் துறையினர் அகழ்வாய்வு நடத்தி தகவல்களை சேகரித்தால் கொங்கு மண்டலத்தின் வரலாறு குறித்த தெளிவு கிடைக்கும். மசராயன் கோவில் ஆய்வு தேவை: கல்திட்டைகள் அருகிலுள்ள மசராயன் எனப்படும் கோவிலும் வரலாற்று சின்னமாகவே உள்ளது. போரில் இறந்த மன்னன் அல்லது வீரன் நினைவாக அவனது பெயரை வெளிக்காட்டும் வகையில் "மாசு மருவில்லா வீரன்' என்ற பெயரில், இந்த கோவில் கட்டப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் அது மசராயன் என மருவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கோவிலிலும் சுற்றுப்பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
புதிராக உள்ள கல்திட்டை, முதுமக்கள் தாழி: கொங்கல் நகரம் கிராமத்தில் கல்திட்டைகள், முதுமக்கள் தாழி போன பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மிகச்சிறந்த வரலாற்று சின்னம் எந்த தகவலையும் அளிக்காமல் புதிராக காணப்படுகிறது. மசராயன் கோவிலுக்கு சேர்ந்ததாக கூறப்படும் நிலத்தில், 20 அடி உயரத்தில் மிகப்பெரிய கல் கம்பீரமாக காணப்படுகிறது. பாதி உயரம் மண்ணில் புதைந்து காணப்படும் இந்த கல், இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்களின் நடுகல் அல்லது அதற்கு முந்தைய மன்னர்கள் காலத்தின் நடுகல்லாகவும் இருக்கலாம். உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கொங்கல் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் எந்த மலை தொடரும் இல்லை. இந்நிலையில், இதுபோன்ற உயரமான கல் பிற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்டிருக்கலாம். கல்திட்டைகள் அமைந்துள்ள பகுதியில் இந்த கல் காணப்படுவதால், இப்பகுதியை ஆண்ட மன்னரின் நடுகல்லாகவும், இதன் அருகில் முதுமக்கள் தாழி, ஈமத்தொட்டி ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் மக்களிடையே இந்த கல் குறித்து பல்வேறு கதைகள் உலவி வருகிறது. இந்த கல் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வாய்வு மேற்கொண்டால், பல்வேறு வரலாற்று சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அழிந்து வரும் வரலாற்று சின்னங்கள்: கடந்த சில ஆண்டுகளுக்குள் உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், பல்வேறு வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. குடிமங்கலம் நால்ரோட்டில் காணப்படும் கல்வெட்டு, பல்வேறு மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் நடுகல் சிற்பங்கள் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. கொங்கல் நகரம், சோமவாரப்பட்டி ஆகிய பழமையான கிராமங்களில் உள்ள கோவில்களிலும் பல்வேறு ஆதாரங்கள் பராமரிக்கப்படுவதில்லை. வரலாற்று சின்னங்களை பாதுகாத்து, பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கொங்கல் நகரத்தில் ஆய்வு தேவை: இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கூறுகையில், கற்களால் உருவாக்கப்பட்ட வீடுகள், ஆயுதங்கள், பாறை ஓவியங்கள், குகைகள் மற்றும் இறந்தவருக்கு கற்களால் கல்லறைகள் அமைத்தது மற்றும் மண்ணாலான பானைகள் பயன்படுத்தப்பட்ட காலமே பெருங்கற்காலம் எனப்படுகிறது. மன்னராட்சிக்கு முந்தைய காலங்கள் மற்றும் வனத்தை சார்ந்து மட்டும் மக்கள் வாழ்ந்தது பெருங்கற்கால நாகரிகம் எனப்படுகிறது. உடுமலை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை அருகே மூணாறில் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக பாறை ஓவியங்கள், முதுமக்கள் தாழி, பழங்கால கல் வீடுகள், கல்திட்டைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் என, வரலாற்று சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொங்கல் நகரம் பகுதி கி.மு., 1,800 ஆண்டுகளில் இப்பகுதியில் முதுமக்கள் வாழ்ந்ததும், பல்பொருள் வணிகத்தில் இப்பகுதி சிறந்து விளங்கியதற்கான சான்றுகளும் காணப்படுகிறது. கொங்கல் நகரம் கிராமம் உப்பாறு படுகையிலும், கேரள மாநிலத்திற்கான ராஜபாட்டை எனப்படும் பெருவழித் தடத்திலும், சோமவாரப்பட்டி என மருவியுள்ள சோமவாரப்பட்டணம் எனப்படும் வணிக தலத்தின் அருகிலும் அமைந்துள்ளது. பெருங்கற்காலம் மற்றும் அதன் தொடர்ச்சியான மன்னர்கள் ஆட்சி, பாளையக்காரர்கள் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், நடுகற்கள் கொங்கல் நகரம் பகுதியில் உள்ளது. வரலாற்று சின்னங்களை முழுமையாக அகழ்வாய்வு செய்வதால், இப்பகுதியின் தொன்மை தெரிய வரும்' என்றார்.
நன்றி ..தினமலர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக