கேள்வி : மிகவும் நம்பியது கையை விட்டுப் போய்விடுகிறது. இப்படியே நடப்பதால் சலிப்பு ஏற்படுகிறது. இந்த மனநிலையில் இருந்து எவ்வாறு வெளிவருவது?
என் பதில் :..
எப்பொழுது நாம் நம்பும் ஒன்று நம்மை விட்டு விலகுகிறதோ, அப்பொழுது அதன் மீது ஒரு தவறான பிம்பம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால்மனிதர்கள் தாங்கள் விரும்பும் ஒன்று எப்போதும் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதன் காரணமாகவே நாம் அதனை இழக்கும் பொழுது நமக்குள் சலிப்பு என்ற மனப்பாங்கு ஒட்டிக்கொள்கிறது.
அதனால், எதிர்காலத்தில் வரும் மற்ற விடயங்கள் மீதும் நமக்கு சரியான நாட்டம் ஏற்படுவதில்லை. இதுவும் அதே போன்ற மனநிலையை நமக்கு தந்து விடுமோ என்ற பயத்தை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்கிறோம். இவை அனைத்துமே நமது எண்ணங்கள் சார்ந்த ஒன்று. இந்த அழகான எண்ணங்கள் சலிப்பாக மாறும் பொழுது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதிலிருந்து வெளிவர, நீங்கள் யார் மனதிலும்/ எதற்காகவும் தவறான எண்ணமாக மாறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்..
நீங்கள் இதுவரையில் எத்தனை பேரைக் காயப்படுத்தி இருப்பீர்கள்?
எத்தனை பேரை மதிக்காமல் சென்றிருப்பீர்கள்?
எத்தனை பேர் மீது வெறுப்புணர்ச்சி கொண்டிருப்பீர்கள்?
எத்தனை பேர் மீது அதி பயங்கர கோபத்தில் இருந்திருப்பீர்கள்?
நிச்சயமாக நாம் அனைவருமே ஏதோ ஒரு தருணத்தில், யார்மீதேனும் தவறான கருத்துக்களை வைத்துக்கொண்டு, அவர்களைப் பற்றிய எண்ணங்களை தவறாக நமக்குள் சித்தரித்துக்கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்போம். உண்மையிலேயே அவர்கள் தான் நாம் அன்பு செலுத்த வேண்டியவர்கள்.
ஒரு காலத்தில் அவர்களுடன் நல்ல உறவில் சிறப்பான நினைவுகளுடன் இருந்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு காரணமாக அது தவறான நினைவுகளாக மாறி இருக்கும் அல்லது மாற்றி இருப்பீர்கள். தற்பொழுது கிடைத்த அந்த தவறான எண்ணங்களைக் கொண்டு, இதற்கு முன்னர் அவர்களால் நீங்கள் பெற்று மகிழ்ச்சியான நினைவுகளை முடக்க முயற்சிக்காதீர்கள்.
அந்தப் பழைய அன்பான நினைவுகளை மனதில் கொண்டு, தற்போதுள்ள கசப்பான நினைவுகளை மூழ்கடிக்கச் செய்யலாமே.
இங்கு நாம் யாரும் யாருடைய வாழ்விலும் அதிபயங்கர மாற்றங்களை கொண்டு வரப் போவதில்லை. நமக்கான ஒன்றை நிச்சயமாக நாம் தான் செய்து கொள்ளப் போகிறோம். எனவே தேவையில்லாமல் பிறரின் மீது எதிர்பார்ப்புகளை வைத்து, ஏமாற்ற உணர்வினை மனதிற்கொண்டு காயப்படுவதை விட்டுவிடுவோம்.
உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்திய அந்த கசப்பான நினைவுகளை, இனிமையாக மாற்ற நிச்சயமாக ஏதேனும் வாய்ப்பு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதை நான் அந்த சலிப்பு ஏற்படுத்திய விடயத்தின் நன்மைக்காக கூறுகிறேன் என்பதை விட, நீங்கள் உங்களுடைய நினைவுகளை இனிமையாக மாற்றிக் கொள்ளும் பொருட்டு, அது உங்களுக்கான சிறப்பான பாதைகளை கண்டு கொள்ள உதவி புரியும்…
யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும், நான் எனக்கு நல்லவனாக இருக்கிறேன் என்பதற்கும், நான் யார் மனதிலும் கசப்பான நினைவுகளாக இல்லை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
நான் யாருடைய வாழ்விலும் கசப்பான நினைவுகளாக இருக்க விரும்பவில்ல.
I don't want to become your bad memory 😊😊.
(எதுவும் நிரந்தரமற்றது என்பதை கருத்தில் கொண்டு, எதிர்பார்ப்புகளை சற்று குறைத்துக் கொண்டு செயல்படுங்கள். நீங்களும் பிறருடைய மனதில் இனிமையான எண்ணங்களாக மாறலாம்)
நன்றி ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக