கேள்வி : வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்று ரசித்த தருணம் எது?
என் பதில் :...
சமீபத்தில் ஒரு நபருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் பேசுகிறோம் என்று நினைக்கிறேன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் எங்களுடைய உரையாடல் தொடர்ந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் ஏதோ ஒரு நிறைவு ஏற்பட்டது. ஒரு கன உணர்விலேயே இருந்த என்னுடைய மனம், இந்த உரையாடலுக்கு பிறகு இலகுவானது.
மனிதர்களை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எப்படியெல்லாம் மாற்றுகிறது.
மனிதனுடைய மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இடம் பொருள் ஏவலுக்கு தகுந்தார் போல, நிச்சயம் அது மாறவே செய்கிறது.
இன்று எனக்கு உயிராய் இருப்பது, நாளை வேண்டாததாய் மாறலாம். நான் வேண்டாம் என வெறுத்து ஒதுக்கியது, சில காலம் கழித்து தேவைப்படலாம்.
இன்று என் மனதை ஆட்கொண்டிருப்பவர் மனதை, வேறு யாரேனு எதிர்காலத்தில் கவரலாம். அவர் நம்மை விட முக்கியத்துவம் வாய்ந்தவராக மாறலாம்.
சூழ்நிலைகள்.
தேவைகள்.
சூழ்நிலைகளுக்கேற்ற தேவைகள்.
சூழ்நிலைகளுக்கேற்ற, தேவைகளுக்கேற்று முடிவுகள்.
முடிவுகளின் விளைவுகள்.
விளைவுகளின் பாதிப்புகள்.
பாதிப்புகளின் உணர்வுகள்.
இவை அனைத்தும் தான், ஒரு மனிதனின் இன்ப துன்பங்களை நிர்ணயம் செய்கிறது.
சூழ்நிலைகளைக் காரணம் காட்டி பிரிவு, முறிவு, கோபம், வெறுத்தல் என அனைத்தையும் ஒரு மனிதன் நமக்கு பரிசாக அளித்தாலும், அந்த உண்மையான உணர்வுகளுக்குத் தெரியும், நம் நினைவுகள் என்றும் கவிதைகள் தான் என்று😊😊😊…
ஒரு விடயம் வேண்டாம் என்பதற்கு தான் காரணம் தேவையேயன்றி, வேண்டும் என்பதற்கு காரணம் தேவையில்லை.
அது சூழ்நிலைகள், தேவைகள், முடிவுகள், விளைவுகள், பாதிப்புகள், உணர்வுகள் என அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருக்குமாயின், நிச்சயம் அதை நாம் அடைய முற்படுவோம்…
ஆனால் இவ்வுலகில் யாரும், இந்நிலைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
இந்த பதிவின் ஆழம் உங்களுக்கு புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதை நான் உணர பல அனுபவங்களைக் கடந்து வந்துள்ளேன்.
(நானும் என்றேனும் உங்கள் நினைவுகளாய் மாறலாம். அன்று எழுதுங்கள் எனக்கு கவிதைகள்)
இப்படிக்கு
#####நினைவுகளின் கவிதைகள்😊..
இந்த புரிதல் எனக்கு ஏற்பட்டதை எண்ணி, இத்தருணம் வாழ்க்கையை ரசிக்கிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக